வெள்ளையினத்தவருக்கு முக்கிய அமைச்சர் பொறுப்புகள் இல்லை: பிரிட்டன் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ் அதிரடி!


லிஸ் ட்ரஸ்

பிரிட்டனின் புதிய பிரதமராக இன்று பதவியேற்கிறார் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் லிஸ் ட்ரஸ். அவரது அமைச்சரவையில் வெள்ளையினத்தைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படாதது கவனம் ஈர்த்திருக்கிறது.

கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்ஸன், 2019 முதல் பிரிட்டன் பிரதமராகப் பதவிவகித்துவந்த நிலையில், பல்வேறு பிரச்சினைகளின் அடிப்படையில் கட்சியில் அவருக்கு எதிராகப் பலர் குரல் எழுப்பினர். சில அமைச்சர்கள் பதவிவிலகினர். இதையடுத்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்தார்.

இதையடுத்து, கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் தொடங்கின. பிரதமர் பதவிக்கான போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இறுதிச் சுற்றில் போட்டியிட்டார். எனினும், நேற்று நடந்த கட்சித் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த 81,236 உறுப்பினர்கள் லிஸ் ட்ரஸ்ஸுக்கு ஆதரவாக வாக்களித்தனர். ரிஷி சுனக்குக்கு 60,399 வாக்குகள் கிடைத்தன.

இதையடுத்து இன்று பிரிட்டனின் மூன்றாவது பெண் பிரதமராகப் பதவியேற்கிறார் லிஸ் ட்ரஸ். ஏற்கெனவே மார்கரெட் தாட்சர், தெரஸா மே என இரண்டு பெண் தலைவர்கள் பிரிட்டன் பிரதமராகப் பதவிவகித்த நிலையில், லிஸ் ட்ரஸ் அந்நாட்டின் மூன்றாவது பெண் பிரதமர் எனும் பெருமையைப் பெறுகிறார்.

அவரது அமைச்சரவையில் இடம்பிடிக்கவிருப்பவர்களின் பட்டியல் இன்று மாலை அதிகாரபூர்வமாக வெளியிடப்படவிருக்கிறது. பிரிட்டன் வரலாற்றிலேயே முதன்முறையாக முக்கிய அமைச்சர் பொறுப்புகள் வெள்ளையினத்தவர் அல்லாத பிறருக்கு வழங்கப்படவிருக்கின்றன.

ஜேம்ஸ் க்ளெவர்லி

ஜேம்ஸ் க்ளெவர்லி வெளியுறவுத் துறை அமைச்சராகிறார். இவரது தந்தை பிரிட்டிஷ்காரர்; தாய் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள சியர்ரா லியோனைச் சேர்ந்தவர்.

சூயெல்லா ப்ரேவர்மேன்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சூயெல்லா ப்ரேவர்மேனுக்கு உள் துறை அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது.

குவாஸி க்வார்டெங்

கறுப்பினத்தைச் சேர்ந்த குவாஸி க்வார்டெங் ‘சான்ஸெலர்’ பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இப்பதவி பிரதமர், துணைப் பிரதமர் பதவிகளுக்குப் பின் அதிக அதிகாரம் பெற்ற மூன்றாவது பதவியாகும். மிக முக்கியமான இந்தத் துறைகள் வெள்ளையினத்தவருக்கு வழங்கப்படாதது குறிப்பிடத்தக்கது.

ரிஷி சுனக்குக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாது என்றே தெரிகிறது.

x