மசூதியில் தொழுகையின்போது குண்டுவெடிப்பு - 18 பேர் பலி: ஆப்கானிஸ்தானில் பயங்கரம்


ஆப்கானிஸ்தானின் மேற்கு நகரமான ஹெராட்டில் கூட்டம் நிறைந்த மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 18 பேர் உயிரிழந்தனர். 21 பேர் காயமடைந்தனர்.

மேற்கு நகரமான ஹெராட்டில் உள்ள குசர்கா மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் தொழுகையின் போது குண்டுவெடிப்பு நடந்தது. இந்தக் குண்டுவெடிப்பில் முக்கிய ஆப்கானிய மதகுரு ஒருவரும் உயிரிழந்தார். இந்த குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

குண்டுவெடிப்பில் பலியான ஆப்கானிஸ்தானின் முக்கிய இஸ்லாமிய மதகுரு மவ்லவி முஜீப் ரஹ்மான் அன்சாரியின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்த தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித், குண்டுவெடிப்புக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

கடந்த மாதம், ஆப்கன் தலைநகர் காபூலில் பல குண்டுவெடிப்புகள் பதிவாகி பலர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியின் ஓராண்டு காலம் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

x