‘இது மனிதகுலத்துக்கு எதிரான குற்றம்’ - சீனா மீதான ஐநா குற்றச்சாட்டின் பின்னணி என்ன?


2018 முதல் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் உயர் ஆணையராகப் பதவிவகித்தவர் மிஷேல் பேச்செலெட். நேற்றுடன் அவரது பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. அதற்குச் சில நிமிடங்கள் முன்னதாக சீனா தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் ஓர் அறிக்கை, உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் பின்னணி என்ன?

தடுப்பு முகாம்கள்

சீனாவின் மேற்குப் பகுதியில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில், உய்குர் முஸ்லிம்கள் மீது கடும் அடக்குமுறை நிகழ்த்தப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன. உய்குர் முஸ்லிம் சமூகம் மற்றும் பிற முஸ்லிம் குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஜின்ஜியாங் மாகாணத்தில், தடுப்பு முகாம் எனும் பெயரில் சிறைவைக்கப்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

அந்த முகாம்களில் சிறைவைக்கப்பட்டிருந்த முன்னாள் கைதிகள் பலர் அங்கு பெரிய அளவில் அக்கிரமங்கள் நடப்பதாகப் பதிவுசெய்திருக்கின்றனர். உடல்ரீதியான சித்திரவதை, அவமதிப்புகள் ஆகியவற்றுடன் கம்யூனிஸ்ட் கட்சி சித்தாந்த போதனை வகுப்புகளும் நடத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். பாலியல் வன்கொடுமைகளும் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் உண்டு.

ஆனால், அந்த முகாமில் மொழி தொடர்பான அடிப்படைப் பயிற்சிகளும், வேலைவாய்ப்புக்கான பயிற்சிகளும் வழங்கப்படுவதாக சீனா விளக்கமளித்துவருகிறது. குறிப்பாக, தீவிரவாதம் பரவுவதைத் தடுக்க இந்த முகாம்கள் அவசியம் என்பது சீன அரசின் வாதம்.

உய்குர் முஸ்லிம் செயற்பாட்டாளர்கள், அந்த முகாம்களில் சிறைவைக்கப்பட்டு விடுதலையானவர்கள், சிறைவைக்கப்பட்டிருப்பவர்களின் உறவினர்கள் இது தொடர்பாக சர்வதேச சமூகத்திடம் தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர்.

குறிப்பாக, புகழ்பெற்ற கலைஞர்கள், அறிஞர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் அந்த முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில், வேலைவாய்ப்புக்கான பயிற்சி எனும் தேவையே அவர்களுக்கு இல்லை என உய்குர் செயற்பாட்டாளர்கள் வாதிடுகின்றனர். ஆனால், இவை அனைத்தும் பொய்க் குற்றச்சாட்டுகள் என சீனா பதிலடி கொடுத்துவருகிறது.

சீனாவின் விளக்கங்களை ஏற்காத அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், சீனாவில் இனப்படுகொலை நடப்பதாகவே குற்றம்சாட்டிவருகின்றன. இதுதொடர்பாக, ஐநா மனித உரிமைகள் ஆணையமும் தொடர்ந்து கண்காணித்துவந்தது.

ஆணைய அறிக்கை என்ன சொல்கிறது?

இந்நிலையில், ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் நேற்று இதுதொடர்பான அறிக்கையை அதன் உயர் ஆணையர் மிஷேல் பேச்செலெட் வெளியிட்டார். தனது பதவிக்காலம் முடிவதற்கு 13 நிமிடங்கள் இருக்கும் நிலையில், அறிக்கையை அவர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

48 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில், ‘கட்டாய மருத்துவ சிகிச்சை, மிக மோசமான நிலையில் அடைக்கப்பட்டிருப்பது உள்ளிட்ட சித்திரவதைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் நம்பகமானவை’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், ‘பாலியல் வன்முறைகள் மற்றும் பாலினம் அடிப்படையிலான வன்முறைகள் தொடர்பான சம்பவங்கள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டும் நம்பகமானது’ என அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான இந்நடவடிக்கை மனிதகுலத்துக்கு எதிரானது என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனினும், ‘இனப்படுகொலை’ எனும் வார்த்தை அறிக்கையில் எங்கும் இடம்பெறவில்லை. இன்னொரு பக்கம், இந்த அறிக்கை வெளியாவதற்கு ஓராண்டு தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும் உய்குர் செயற்பாட்டாளர்கள் விமர்சித்திருக்கிறார்கள். எனினும், இப்படியான அறிக்கைகள் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அனுப்பப்பட்டு விளக்கம் பெற்ற பின்னரே வெளியிடப்படுகின்றன என மிஷேல் பேச்செலெட் தெரிவித்திருக்கிறார்.

இந்த அறிக்கைக்கு ஐநாவுக்கான சீனத் தூதர் ஜாங் ஜுன் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இந்த அறிக்கை சீனாவின் பார்வைக்கு அனுப்பப்பட்டதாக மிஷேல் பேச்செலெட் கூறியிருந்தாலும், இந்த அறிக்கையை சீன அரசு பார்க்கவே இல்லை என்று ஜாங் ஜுன் கூறியிருக்கிறார். அதேசமயம், இந்த அறிக்கையை சீனா முற்றிலும் எதிர்ப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். ஐநாவுக்கும் அதன் உறுப்பு நாடான சீனாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை இந்த அறிக்கை மலினப்படுத்துவதாகவும், சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதாகவும் அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

கடைசி நேரத்தில் இப்படி ஒரு அதிரடி அறிக்கையை மிஷேல் பேச்செலெட் வெளியிட்டிருக்கும் நிலையில், அவருக்கு அடுத்து இந்தப் பதவிக்கு வரவிருப்பவரும், அரசுகளும் இச்செயல்களுக்கு, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் பொறுப்பேற்கச் செய்வதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பதில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் கோரியிருக்கின்றனர்.

x