போட்டி அரசுகள்; போராளிக் குழுக்கள்: லிபியா வன்முறையின் பின்னணி என்ன?


லிபியா தலைநகர் திரிப்போலியில் நேற்று இரு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலில், 23 பேர் கொல்லப்பட்டனர். 140-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அந்நாட்டில் நடந்துவரும் போட்டி அரசுகளுக்கு இடையிலான மோதல் தற்போது உச்சகட்டத்தை அடைந்திருப்பதால், மக்கள் பெரும் கையறு நிலையில் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

எண்ணெய் வளம் மிக்க நாடான லிபியா வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ளது. இந்நாட்டின் அதிபராக இருந்த முஅம்மர் அல்-கடாஃபியின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக, 2011-ல் நேட்டோ அமைப்பின் ஆதரவுடன் பெரும் புரட்சி நடந்தது. அதில் அவர் கொல்லப்பட்டார். எனினும், அதன் பின்னர் உள்நாட்டுப் போர், கலவரம், வன்முறைச் சம்பவங்கள் காரணமாக லிபியா அமைதி இழந்து தவித்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் ஓரளவு அமைதி நிலவிவருகிறது.

இந்நிலையில், முன்னாள் ராணுவத் தளபதி ஹைதாம் தஜோரி தலைமையிலான திரிப்போலி புரட்சியாளர்களின் படையணி எனும் போராளிக் குழுவுக்கும், அப்தெல்-கனி அல்-கிக்லி தலைமையிலான குழுவுக்கும் இடையில் தலைநகர் திரிப்போலியில் நேற்று கடும் மோதல் நடந்தது. பிற பகுதிகளிலும் கலவரம் பரவியது.

இதில் 23 பேர் கொல்லப்பட்டனர். 140-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மோதல் நடந்த பகுதியில் வசித்துவந்த 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றன. திரிப்போலியில் உள்ள மருத்துவமனைகள் மீதும் குண்டுவீசப்படுவதாகவும், காயமடைந்தவர்களை மீட்கச் செல்லும் ஆம்புலன்ஸ்கள் தடுக்கப்படுவதாகவும் லிபியா சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது. இது போர்க்குற்றம் என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கொல்லப்பட்டவர்களில் முஸ்தபா பராக்கா எனும் காமெடியனும் அடக்கம். ஊழல் முறைகேடுகள், போராளிக் குழுக்களால் லிபியா சந்தித்துவரும் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து பேசிவந்த அவர், நேற்றைய மோதலில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

போட்டி அரசுகள்

தலைநகர் திரிப்போலியை மையமாகக் கொண்டு பிரதமர் அப்துல் ஹமீத் பெய்பா தலைமையில் ஓர் அரசு இயங்கிவருகிறது.

சிர்ட் எனும் கடற்கரை நகரை மையமாகக் கொண்டு ஃபாதி பகாஷா தலைமையில் போட்டி அரசு ஒன்று நடத்தப்படுகிறது. ஃபாதி பகாஷா தன்னை பிரதமராக அறிவித்துச் செயல்பட்டுவருகிறார்.

இருவருமே தனித்தனியே போராளிக் குழுக்களை வைத்திருக்கின்றனர். ஃபாதி பகாஷா தலைமையிலான குழுக்கள் கடந்த சில வாரங்களாகத் திரிப்போலியைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியிருக்கின்றன. இந்தச் சூழலில்தான் இப்படியான வன்முறைச் சம்பவங்கள் வெடித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நிலைமை மேலும் மோசமடைவதற்குள் இரு தரப்பும் பதற்றத்தைத் தணிக்க முன்வர வேண்டும் என லிபியாவுக்கான ஐநா தூதர் ரிச்சர்ட் நோர்லாண்ட் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

x