வெள்ளத்தில் மிதக்கிறது பாகிஸ்தான்: 937 பேர் மரணம் - தேசிய அவசரநிலை பிரகடனம் அறிவிப்பு!


பாகிஸ்தான் நாட்டில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 343 குழந்தைகள் உட்பட 937 பேர் உயிரிழந்துள்ளனர். 30 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தங்குமிடமின்றி தவித்து வருவதால், பாகிஸ்தான் அரசு தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளது.

பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ளன. இங்கு ஜூன் 14 முதல் நேற்றுவரை வெள்ளம் மற்றும் மழை தொடர்பான சம்பவங்களால் 306 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பலுசிஸ்தான் மாகாணத்தில் 234 பேரும், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் 185 பேரும், பஞ்சாப் மாகாணத்தில் 165 பேரும் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 37 பேர் மரணமடைந்துள்ளனர்.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தகவல்களின்படி, பாகிஸ்தானில் ஆகஸ்ட் மாதத்தில் 166.8 மிமீ மழை பெய்துள்ளது. இந்த மாதத்தில் சராசரி மழை அளவான 48 மிமீ மழையை விட 241 சதவீதம் அதிகமாக மழை பொழிந்துள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் திடீர் வெள்ளம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாகிஸ்தானின் தெற்குப் பகுதியில் உள்ள சிந்து மாகாணத்தில் 23 மாவட்டங்களில் "பேரழிவு " ஏற்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய தேசிய காலநிலை மாற்றத்துக்கான அமைச்சர் ஷெர்ரி ரெஹ்மான், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பால் ஒரு "போர்க்கால நடவடிக்கை அறை" அமைக்கப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் என்று கூறினார். இடைவிடாத அசுரத்தனமான மழைப்பொழிவு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதை கடினமாக்கியுள்ளது என்று அவர் கூறினார்.

மேலும், “பாகிஸ்தான் தற்போது பருவமழையின் 8 வது சுழற்சியைக் கடந்து செல்கிறது. பொதுவாக நாட்டில் மூன்று முதல் நான்கு சுழற்சிகள் மட்டுமே பருவமழை பெய்யும். செப்டம்பரில் மற்றொரு சுழற்சி மீண்டும் தோன்றுவதற்கான சாத்தியக்கூறுகளை தரவுகள் தெரிவிக்கிறது. இந்த மழை வெள்ள பேரழிவு 2010 வெள்ள நிலைமையை விடவும் மோசமாக உள்ளது.

கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாலங்கள் மற்றும் தகவல் தொடர்பு உள்கட்டமைப்புகளை அடித்துச் செல்லப்பட்டன. கிட்டத்தட்ட 30 மில்லியன் மக்கள் தங்குமிடம் இல்லாமல் உள்ளனர். உலகநாடுகள் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும். சிந்து மாகாணத்தில் மட்டும் ஒரு மில்லியன் கூடாரங்கள் வேண்டும். பலுசிஸ்தானுக்கு ஒரு இலட்சம் கூடாரங்கள் தேவைப்படுகிறது” என்று அவர் கூறினார்.

x