உக்ரைன் போர் தொடங்கியது முதல் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களில் வாக்களிக்காமல் விலகி நின்ற இந்தியா, முதன்முறையாக ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்திருக்கிறது. இதன் பின்னணி என்ன?
உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கி 6 மாதங்கள் ஆகின்றன. பெரும் இழப்புகளுக்கு மத்தியில் நேற்று (ஆக.24) உக்ரைனின் சுதந்திர தினமும் கொண்டாடப்பட்டது. இவற்றையொட்டி, ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டம் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் காணொலி மூலம் உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி உரையாற்றினார்.
எனினும், பிற தலைவர்கள் நேரடியாகப் பங்கேற்றிருக்கும்போது உக்ரைன் அதிபர் மட்டும் காணொலி மூலம் கலந்துகொள்வதை ஏற்க முடியாது என ஐநாவுக்கான ரஷ்யத் தூதர் வாஸிலி ஏ.நெபென்ஸியா ஆட்சேபம் தெரிவித்தார். இதுகுறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டதையடுத்து வாக்கெடுப்பு நடந்தது. இதில்15 உறுப்பினர்களில் 13 பேர் உக்ரைன் அதிபர் கலந்துகொள்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர். ரஷ்யா எதிர்த்து வாக்களித்தது. சீனா வாக்களிக்காமல் ஒதுங்கிக்கொண்டது. இதில்தான் முதன்முறையாக ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்திருக்கிறது இந்தியா.
உக்ரைன் விவகாரத்தில் இந்தியா இதுவரை ரஷ்யாவை விமர்சிக்கவில்லை. இரு நாடுகளும் போரைக் கைவிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டதைத் தாண்டி ரஷ்யாவுக்கு எதிரான எந்த நிலைப்பாட்டையும் இந்தியா எடுக்கவில்லை.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தரமல்லாத உறுப்பினராக இருக்கிறது (அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய 5 நாடுகள் மட்டும்தான் நிரந்தர உறுப்பினர்கள்). கவுன்சிலில் இந்தியாவின் இரண்டு ஆண்டுகால பதவிக்காலம் வரும் டிசம்பருடன் முடிவடைகிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்த உறுப்பினராக இந்தியா தொடர்ந்து முயற்சித்துவருகிறது. இப்படியான சூழலிலும், உக்ரைன் விவகாரத்தில் கவுன்சிலில் இதற்கு முன்னர் ரஷ்யாவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தியா முன்வரவில்லை. வாக்களிக்காமல் ஒதுங்கிக்கொண்டது.
இந்த முறை, ஐநா பாதுகாப்பு கவுன்சில் விதிமுறைகளைச் சுட்டிக்காட்டி, ‘பெருந்தொற்றுக் காலத்தில்தான் காணொலி மூலம் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. பெருந்தொற்று உச்சம் தொட்டு அதன் பின்னர் எல்லா நாடுகளும் வழக்கமான சூழலுக்குத் திரும்பிய பின்னரும் உக்ரைன் அதிபர் காணொலி மூலம் கலந்துகொள்ள வேண்டுமா என்பது ரஷ்யாவின் ஆட்சேபம். ஆனால், அல்பேனியா உறுப்பினர் ஹோக்ஷா, “உக்ரைன் தற்போது போரை எதிர்கொண்டிருப்பதால் அந்நாட்டின் அதிபர் அங்குதான் இருந்தாக வேண்டியிருக்கிறது. எனவேதான், அவர் காணொலி மூலம் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது” என்று விளக்கம் தந்தார். அதே அடிப்படையில்தான் இந்தியாவும் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.