குரங்கு அம்மைக்கு முதன்முறையாகத் தடுப்பு மருந்து!


குரங்கு அம்மை நோயாளிகளுக்கு முதன்முறையாக 'டெகோவிரிமேட்’ எனும் தடுப்பு மருந்து செலுத்தி சோதனை செய்கிறது பிரிட்டன். இதன் மூலம் நோயாளிகளின் தோலில் ஏற்படும் கொப்புளங்களும் புண்களும் ஆறும் காலம் குறையுமா எனப் பரிசோதிக்கப்படவிருக்கிறது.

குரங்கு அம்மை குறித்து இதுவரை முழுமையான ஆய்வுகள் நடத்தப்படவில்லை. பிரத்யேகமான தடுப்பூசிகளோ, மருந்துகளோ தயாரிக்கப்படவில்லை. குரங்கு அம்மை வைரஸ், பெரியம்மையுடன் தொடர்புடையது என்பதால் பெரியம்மை நோய்த் தடுப்பூசியைத்தான் தற்போது பல நாடுகளில் பயன்படுத்துகின்றனர். எனினும், பல ஆண்டுகளுக்கு முன்னர் நிறுத்தப்பட்டுவிட்ட தடுப்பூசியால் இப்போது பலன் ஏற்படுமா என்பது இன்னமும் உறுதிசெய்யப்படவில்லை.

இந்நிலையில், ’பிளாட்டினம்’ எனும் பெயரில் நோயாளிகளிடம் தடுப்பு மருந்து செலுத்தி தொடங்கப்படும் சோதனையை (clinical trial) பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தொடங்குகிறது. இதில் 'டெகோவிரிமேட்’ எனும் தடுப்பு மருந்து - மாத்திரை ஏற்கெனவே பெரியம்மை பாதிப்புள்ளவர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. குரங்கு அம்மை தொற்றுக்குள்ளானவர்களுக்கும் இது வழங்கப்பட்டுவருகிறது என்றாலும், இதற்கு மருத்துவ ரீதியில் அங்கீகாரம் இன்னும் வழங்கப்படவில்லை.

முதற்கட்டமாக, குரங்கு அம்மை தொற்றுக்குள்ளான 500 நோயாளிகளுக்கு இந்த மருந்து அளிக்கப்படுகிறது. ஒரு நாளுக்கு இரண்டு எனும் வீதம் மொத்தம் 14 நாட்களுக்கு இந்த மருந்தை அவர்கள் உட்கொள்ள வேண்டும்.

அவர்களுக்கு குரங்கு அம்மை பரிசோதனைக் கருவிகள் (ஸ்வாப் கிட்ஸ்) வழங்கப்படும். 28 நாட்களுக்கு அவர்கள் தங்கள் உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆன்லைன் மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.

இந்தப் பரிசோதனையில் கிடைக்கும் பலனைப் பொறுத்து குரங்கு அம்மை சிகிச்சையில் அடுத்தகட்ட முன்னேற்றம் ஏற்படும் என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

x