பராகுவே நாட்டில் காந்தி சிலை: திறந்துவைத்து பெருமிதமடைந்த ஜெய்சங்கர்!


இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், முதன்முறையாகத் தென் அமெரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். ஆறு நாள் பயணமாகத் திட்டமிடப்பட்டிருக்கும் இந்தச் சுற்றுப்பயணத்தின்படி, பிரேசிலை அவர் சென்றடைந்தார். அர்ஜென்டினாவுக்கும் அவர் செல்லவிருக்கிறார். இந்தப் பயணத்தின்போது, பராகுவே நாட்டில் மகாத்மா காந்தியின் மார்பளவுச் சிலையை அவர் திறந்துவைத்தார்.

இந்தியாவுக்கும் தென் அமெரிக்க நாடுகளுக்கும் இடையில் கரோனா பெருந்தொற்றுக் காலத்துக்குப் பிறகான உறவுகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது தொடங்கியிருக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் கரீபியன் நாடுகளைச் சேர்ந்த தூதர்கள், டெல்லியில் ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசினர். இதன் தொடர்ச்சியாக, அவர் தென் அமெரிக்க நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார். உணவு மற்றும் எரிபொருள் பாதுகாப்பு, விண்வெளித் துறை, பாதுகாப்புத் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை ஆகியவற்றில் இரு தரப்பும் மேம்பாடு அடைவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் அவர் ஈடுபடவிருக்கிறார்.

இந்நிலையில், பராகுவே நாட்டின் அசுன்சியான் நகரில் மகாத்மா காந்தி சிலையை நேற்று அவர் திறந்துவைத்தார். இதுதொடர்பாக ட்வீட் செய்த அவர், ‘பராகுவேயின் அசுன்சியான் நகரில் மகாத்மா காந்தி சிலையைத் திறந்துவைத்ததில் பெருமையடைகிறேன். நகரின் முக்கியமான நீர்நிலைப் பகுதியில் மகாத்மா காந்தியின் சிலையை நிறுவ முடிவெடுத்த அசுன்சியான் நகராட்சியைப் பாராட்டுகிறேன். கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் வலிமையுடன் வெளிப்பட்ட இரு தரப்பு உறவின் சான்று இது’ என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தப் பயணத்தின்போது, அசுன்சியான் நகரில் உள்ள ‘காஸா டி லா இண்டிபெண்டென்ஷியா’ அருங்காட்சியகத்தையும் அவர் பார்வையிட்டார். 200 ஆண்டுகளுக்கு முன்னர் அந்நாட்டின் விடுதலை இயக்கம் தொடங்கிய இடம் அது.

அதுதொடர்பாக ட்வீட் செய்திருக்கும் ஜெய்சங்கர், ‘இரு தரப்பின் போராட்ட வரலாற்றுக்கும், வளர்ந்துவரும் உறவுக்கும் இது ஒரு பொருத்தமான சாசனம்’ என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

x