இம்ரான் கான் மீது பாய்ந்த பயங்கரவாத தடுப்புச் சட்டம்: என்ன நடந்தது?


பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், பல ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்பதால் இந்நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பின்னணி என்ன?

கடந்த ஏப்ரல் மாதம், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் வாக்கெடுப்பில் தோல்வியடைந்து பிரதமர் பதவியை இழந்தவர் இம்ரான் கான். பாகிஸ்தான் வரலாற்றில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் பதவிநீக்கம் செய்யப்பட்ட முதல் பிரதமர் அவர்தான்.

தனது அரசைக் கவிழ்க்க அமெரிக்கா சதி நடந்ததாகத் தொடர்ந்து குற்றம்சாட்டிவரும் இம்ரான் கான், ஷெபாஸ் ஷெரீஃப் தலைமையில் அமைந்த புதிய அரசை ‘இறக்குமதி அரசு’ என்றே விமர்சித்துவந்தார். “இந்தக் கொள்ளைக்காரர்களை நம் மீது திணித்ததன் மூலம், பாகிஸ்தானை அவமதித்துவிட்டது அமெரிக்கா. ஜுல்பிக்கார் அலி புட்டோ அமெரிக்காவின் சதியால் ஆட்சியைவிட்டு அகற்றப்பட்டார். ஆனால், இது 1970-ன் பாகிஸ்தான் அல்ல. இது புதிய பாகிஸ்தான்” என்றும் சூளுரைத்துவந்தார்.

அவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கான காலக்கெடுவை நிர்ணயிப்பது தொடர்பான வழக்கை ஏப்ரல் 9-ம் தேதி பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அன்றைய தினமே வாக்கெடுப்பை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பை நடத்த அப்போதைய சபாநாயகர் ஆஸாத் கைஸர் நள்ளிரவு வரை முன்வரவில்லை. இந்தச் சூழலில் உச்ச நீதிமன்றம் நள்ளிரவு வரை திறந்திருந்தது. இந்த விவகாரம் தொடர்பான மற்றொரு வழக்கை விசாரிக்கும் வகையில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றமும் நள்ளிரவு வரை இயங்கியது. பின்னர் ஆஸாத் கைஸர் பதவி விலகினார். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியைச் சேர்ந்த அயாஸ் சாதிக் சபாநாயகர் ஆனார். இதன் பின்னர் வாக்கெடுப்பு நடந்தது. 342 பேர் கொண்ட தேசிய அவையில், 174 பேர் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து இம்ரான் கானின் ஆட்சி கவிழ்ந்தது.

இதனால், நீதித் துறை மீது தொடர்ந்து விமர்சனங்களை அவர் முன்வைத்துவந்தார். நீதிமன்றங்கள் நள்ளிரவு வரை திறந்துவைக்கப்பட்டது குறித்து கேள்விகள் எழுப்பிவந்தார்.

பிரச்சினை ஏற்படுத்திய பேச்சு

இந்நிலையில், இஸ்லாமாபாதில் ஆகஸ்ட் 20-ல் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இம்ரான் கான், ஒரு நீதிபதி, இரண்டு போலீஸ் அதிகாரிகள் ஆகியோரை மிரட்டும் வகையிலான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. இம்ரான் கானின் உதவியாளரான ஷெபாஸ் கில், பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராகத் தொலைக்காட்சியில் பேசியதாகக் குற்றம்சாட்டப்பட்டு ஆகஸ்ட் 9-ம் தேதி கைதுசெய்யப்பட்டார். அவர் காவல் துறையினரால் சித்ரவதை செய்யப்பட்டதாகக் இம்ரான் கான் குற்றம்சாட்டினார். இஸ்லாமாபாத் ஐஜி, துணை ஐஜி மற்றும் ஒரு பெண் நீதிபதி ஆகியோர் இதன் பின்னணியில் இருந்ததாகக் கூறியதுடன் அவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரித்தார். இந்தக் கைது நடவடிக்கை மூலம் மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். தன் ஆட்சி கவிழ்க்கப்பட்டதற்கு ராணுவத் தலைவரும் காரணம் என அவர் குற்றம்சாட்டினார்.

இதையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுங்கட்சிக் கூட்டணியைச் சேர்ந்த பலர் கோரிக்கை விடுத்தனர். இதன் தொடர்ச்சியாக அவர் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் முதல் தவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

இதையடுத்து, கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க தனது வீட்டிலிருந்து அவர் வெளியேறிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

நேரடி ஒளிபரப்புக்குத் தடை

இஸ்லாமாபாத் கூட்டத்தில் பேசிய அவரது உரையை நேரடியாக ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டிருந்தது. இனி அவரது உரைகள் நேரடியாக ஒளிபரப்பப்படாது என்றும், பதிவுசெய்யப்பட்ட உரைகள் தணிக்கைக்குட்பட்டே வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

இதனால், ஃபேஸ்க் மற்றும் யூடியூப் லைவ் மூலம் அவரது பேச்சை நேரடியாக ஒளிபரப்ப அவரது கட்சியினர் முடிவெடுத்தனர். நேற்று ராவல்பிண்டியில் நடந்த கூட்டத்தில் அவர் நிகழ்த்திய உரையை சமூகவலைதளங்கள் மூலம் நேரடியாக ஒளிபரப்ப அவரது கட்சியினர் முயற்சி செய்தனர். எனினும் தொழில்நுட்பக் கோளாறுகளால் அது சாத்தியமாகவில்லை எனக் கூறப்படுகிறது.

x