கடந்த சில மாதங்களாகக் கடும் வெப்பத்தில் தவித்துவரும் ஐரோப்பிய நாடுகளில் ஆறுகள், ஏரிகள் என நீர்நிலைகள் வறண்டுகிடக்கின்றன. இந்நிலையில், நீரில் மூழ்கிய இரண்டாம் உலகப்போர் காலத்துக் கப்பல்கள், வரலாற்றுச் சின்னங்கள், பெருங்கற்காலத்து எச்சங்கள் போன்றவை மக்களின் பார்வைக்குத் தென்பட ஆரம்பித்திருக்கின்றன.
ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளில் ஜூன் மாதம் முதல் கடும் வெப்ப அலை வீசுகிறது. பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி என ஏராளமான நாடுகளில் வெப்பநிலை 40 செல்சியஸைத் தொட்டிருக்கிறது. போர்ச்சுகல் நாட்டில் 47 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருக்கிறது. அதிகரிக்கும் வெப்பநிலையால், ஏராளமானோர் உடல்ரீதியான பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கிறார்கள். 12,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். ஜெர்மனியில் மட்டும் 8,000-க்கும் மேற்பட்டோர் கடும் வெயிலுக்குப் பலியாகியிருக்கிறார்கள். பல நாடுகளில் தீவிபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன. பருவநிலை மாற்றத்தின் காரணமாகவே இந்த அளவுக்கு வெப்ப அலை வீசுகிறது எனக் கருதப்படுகிறது.
இப்படி ஐரோப்பாவை அலறவைத்திருக்கும் வெப்ப அலை, வரலாற்று ஆர்வலர்களுக்குச் சில புதையல்களையும் பரிசளித்திருக்கிறது.
ஸ்பெயினில் ’ஸ்பானிஷ் ஸ்டோன்ஹெஞ்ச்’ என்று அழைக்கப்படும் பாறைக் குவியல்கள் பெருங்கற்காலத்தைச் சேர்ந்தவை. 150 கற்கள் வட்டமாக அமைந்திருக்கும் இந்த நினைவுச் சின்னம், 5,500 ஆண்டுகளுக்கு முன்னர் உருவானதாகக் கருதப்படுகிறது.
‘டோல்மென் ஆஃப் குவாடல்பெரல்’ என அதிகாரபூர்வமாக அழைக்கப்படும் இந்த இடம், ஸ்பெயினின் மத்திய மாகாணமான காசெரேஸில் உள்ள வால்டெகெனாஸ் நீர்த்தேக்கத்தில் அமைந்திருக்கிறது. அந்த நீர்த்தேக்கம் 28 சதவீதம் வறண்டிருப்பதால், இந்த நினைவுச் சின்னம் மீண்டும் மக்களின் பார்வைக்குத் தென்படுகிறது.
1926-ல் ஜெர்மனியைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் இதை முதன்முதலாகக் கண்டறிந்தார். ஆனால், 1963-ல் ஏற்பட்ட வெள்ளத்துக்குப் பின்னர் இந்த நினைவுச் சின்னம் நீரில் மூழ்கியது. அதன் பின்னர் நான்கே நான்கு முறைதான், நீர் வற்றி இந்த நினைவுச் சின்னம் பார்வைக்குப் பட்டது.
ஐரோப்பாவின் இரண்டாவது நீளமான நதியான டான்யூப், தற்போது வறண்டுகிடக்கிறது. இதன் காரணமாக, செர்பியா நாட்டின் பிரஹோவோ நகரில் டான்யூப் நதியில் மூழ்கிக்கிடந்த இரண்டாம் உலகப்போர் காலத்து ஜெர்மானியப் போர்க்கப்பல்கள் தற்போது கண்டறியப்பட்டிருக்கின்றன. 20-க்கும் மேற்பட்ட கப்பல்கள் தற்போது பார்வைக்குப் படுகின்றன.
இத்தாலியின் இரண்டாவது நீளமான நதியான போ நதி தற்போது வறண்டு கிடக்கிறது. இதையடுத்து பல ஆண்டுகளாக அதில் மூழ்கிக்கிடந்த இரண்டாம் உலகப்போர் காலத்து வெடிகுண்டு கண்டடுக்கப்பட்டது. 450 கிலோ எடை கொண்ட இந்த வெடிகுண்டு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது. இதையடுத்து அந்நதியின் அருகில் வசித்துவந்த 3,000-க்கும் மேற்பட்டோர் வேறு இடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். வெடிகுண்டு செயலிழக்க வைக்கப்பட்டது.
அதேபோல், ஜெர்மனியின் மிகப் பெரிய நதியான ரைன் நதியில் மூழ்கிக்கிடந்த ‘பட்டினிப் பாறைகள்’ எனும் நினைவுச் சின்னங்களும் தற்போது மக்களின் பார்வைக்குத் தென்படுகின்றன.
கடும் வறட்சியின் இன்னொரு விளைவாக வரலாற்றுச் சின்னங்கள் மீண்டும் பார்வைக்குக் கிடைப்பது தொல்லியல் ஆய்வாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
துயரங்களுக்கு மத்தியில் இப்படியான அதிசயங்களை நிகழ்த்தத்தான் செய்கிறது இயற்கை!