உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 41 பேர் பலி


உக்ரைனின் கீவ் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்ய ராணுவம் நேற்று நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 41 பேர் உயிரிழந்தனர்.

ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் போர் நடைபெற்று வருகிறது. இதில் இரு நாடுகள் தரப்பிலும் ஏராளமான உயிர், பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. ஆண்டுக்கணக்கில் முடிவு எட்டப்படாமல் போர் தொடர்ந்து வருவது, அமைதியை விரும்பும் உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட அந்நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கில் உள்ள 5 நகரங்களை குறிவைத்து ரஷ்ய ராணுவம் நேற்று சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் கீவ் நகரில் உள்ள வோக்மாத்தைட் குழந்தைகள் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மருத்துவமனை கட்டிடம் இடிந்து நொறுங்கியது.

மேலும் இந்தத் தாக்குதலில் 3 குழந்தைகள், மருத்துவமனை ஊழியர்கள், மீட்புப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் என மொத்தம் 41 பேர் வரை உயிரிழந்துள்ளனர். தாக்குதலுக்குப் பின்னர், இடிபாடுகளை அகற்றி படுகாயமடைந்த 150-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். இதற்கிடையே உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்.

மேலும், "ரஷ்யா மீண்டும் நம் மக்கள், நம் நிலம், நம் குழந்தைகள் மீது தொடுத்த தாக்குதலுக்கு வலுவான பதிலடி கொடுக்க வேண்டும்" என உக்ரைனின் நட்பு நாடுகளை வலியுறுத்தினார்.

இதற்கிடையே, 'ரஷ்யாவின் மனசாட்சியற்ற தாக்குதலை கண்டிப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இதேபோல் இரக்கமின்றி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று ஐரோப்பிய ஒன்றியமும், குழந்தைகள் மருத்துவமனை மீது ஏவுகணை வீசப்பட்டது காட்டுமிராண்டித்தனமானது என பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சகமும் கண்டனம் தெரிவித்துள்ளது.

x