இலங்கை துறைமுகத்தில் சீனக்கப்பல் நிறுத்தப்பட்டால் தமிழகம் உளவுப் பார்க்கப்படும்: ராமதாஸ் எச்சரிக்கை


மருத்துவர் ராமதாஸ்.

சீன உளவுக் கப்பலுக்கு அனுமதி கொடுத்திருக்கும் விவகாரத்தில் இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா தொடர்ந்து கொடுத்துவந்த அழுத்தத்தின் காரணமாக சீன உளவுக்கப்பலுக்கு அனுமதி மறுத்துவந்த இலங்கை அரசு, இப்போது தன் நிலைப்பாட்டை மாற்றியுள்ளது. இப்போது சீன உளவுக்கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வர அனுமதித்து இருக்கிறது. இது இலங்கையின் நம்பிக்கைத் துரோகம்.

இலங்கை துறைமுகத்தில் சீனக்கப்பல் நிறுத்தப்பட்டால் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் உளவுப் பார்க்கப்படும். இதனால் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என தொடர்ந்து வலியுறுத்திய பின்பும், இலங்கை இதைச் செய்துள்ளது. இதன் மூலம் இலங்கை - சீனா பாசமும் புரிகிறது.

டோர்னியர் 228 என்ற போர் விமானத்தை இந்தியா நாளை இலங்கைக்கு இலவசமாக வழங்குகிறது. இலங்கையின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு அந்நாட்டிற்கு ஏராளமான உதவிகளும் இந்தியா செய்தது. அனைத்தையும் பெற்றுக்கொண்டுதான் இலங்கை இப்படிச் செய்கிறது. இதுதான் இலங்கையின் குணம். இலங்கையின் துரோகத்தை புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப வெளியுறவுக்கொள்கையை வகுக்க வேண்டும் ”என ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

x