புதினுடன் பிரதமர் மோடி பேச்சு: இந்தியர்களை ராணுவத்தில் இருந்து வெளியேற்ற ரஷ்யா முடிவு


மாஸ்கோ: ரஷ்யா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினிடம் பேசியதைத் தொடர்ந்து, ரஷ்ய ராணுவத்தில் பணிபுரியும் அனைத்து இந்தியர்களையும் வெளியேற்ற ரஷ்யா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போரில் 2 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் இந்தியர்கள் பலர், விருப்பமின்றி போர்க்களத்தில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இச்சூழ்நிலையில் ரஷ்யாவில் நடைபெறும் 22வது இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார்.

நேற்று மாலை அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அளித்த தனிப்பட்ட விருந்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட இந்தியர்கள் குறித்த விவகாரம் குறித்து அதிபர் புதினுடன், பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, தங்கள் ராணுவத்தில் பணிபுரியும் அனைத்து இந்தியர்களையும் வெளியேற்றவும், அவர்கள் நாடு திரும்புவதற்கு வசதி செய்து தரவும் ரஷ்யா ஒப்புக்கொண்டது.

மேலும், மூன்றாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடிக்கு, அதிபர் புதின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதோடு, இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி குறித்தும் பேசினார் என ரஷ்ய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. ரஷ்யாவில் அதிக ஊதியத்தில் வேலை என்ற பெயரில் 20-க்கும் மேற்பட்ட இந்தியர்கள், ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

வேலைக்கு ஆட்களை அனுப்பும் முகவர்கள் செய்த மோசடி வேலைகளால் ரஷ்யா சென்ற இந்தியர்கள் அந்நாட்டு ராணுவத்தில் சேர்க்கப்பட்டு, உக்ரைனுக்கு எதிரான போரில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டனர். இவ்வாறு உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய படையில் சேர்க்கப்பட்ட இந்தியர் ஒருவர் கடந்த ஜனவரியில் வெளியிட்ட ஒரு வீடியோ வைரலானது. அந்த வீடியோவில், பஞ்சாப் மற்றும் ஹரியாணாவைச் சேர்ந்த ஒரு குழு - ராணுவ சீருடை அணிந்திருந்தது.

அவர்கள் உக்ரைனுடனான போரில் ஈடுபடுவதற்காக ஏமாற்றி ராணுவத்தில் சேர்க்கப்பட்டதாகவும், தாங்கள் நாடு திரும்ப இந்திய அரசு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர். அதைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இச்சூழலில் பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு சென்றுள்ள நிலையில், அவர்கள் நாடு திரும்புவதற்கான நடவடிக்கையில் தீர்வு கிடைத்துள்ளது.

x