வறண்டுபோன தேம்ஸ் நதி: பிரிட்டனை வாட்டி வதைக்கும் கடும் வெப்பம்!


பிரிட்டனின் புகழ்பெற்ற தேம்ஸ் நதி வரலாறு காணாத வகையில் வறண்டுவிட்டது. இதன் காரணமாக நாட்டில் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கான பாசனநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

1935 ம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மிகப்பெரிய வறட்சியை பிரிட்டன் சந்தித்துள்ளது. ஜூலையில் நாட்டில் சராசரி மழைப்பொழிவு 23.1 மில்லிமீட்டர்கள் (0.9 அங்குலம்) மட்டுமே ஆகும். இது மாதத்தின் சராசரி மழையில் 35% மட்டுமே ஆகும். இதன் காரணமாக நாட்டின் சில பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு ஜூலையில் வறட்சி நிலவியது.

தேம்ஸ் ஆறு தெற்கு பிரிட்டன் முழுவதும் 215 மைல்கள் (356 கிலோமீட்டர்) பாய்ந்து வளப்படுத்துகிறது. பிரிட்டனின் மேற்கில் உள்ள க்ளௌசெஸ்டர்ஷயரில் தொடங்கி மையப்பகுதி வழியாக பாய்ந்து கிழக்கே உள்ள எசெக்ஸில் கடலில் கலக்கிறது.

நதியின் ஆதாரமாக அறியப்படும் இயற்கை நீரூற்று பெரும்பாலான கோடைகாலங்களில் வறண்டுவிடும். ஆனால் இந்த ஆண்டு குறைவான மழைப்பொழிவு மற்றும் கடும் வெப்பம் காரணமாக வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் வறண்டுள்ளது என்று நீர்மேலாண்மை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தேம்ஸ் ஆற்றில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக பிரிட்டனின் தெற்கு பகுதியில் இயங்கும் இரண்டு மிகப்பெரிய நீர் நிறுவனங்களின் குழாய்கள் மற்றும் தெளிப்பான் அமைப்புகளைப் பயன்படுத்துவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் 15 மில்லியன் மக்களுக்கு குடிநீராக தேம்ஸ் நதியின் தண்ணீர் உள்ளது. ஏற்கெனவே வெப்பம் வாட்டி வரும் நிலையில் நேற்று முதல் பிரிட்டனில் நான்கு நாள் "அதிதீவிர வெப்பத்திற்கான" எச்சரிக்கையும் அமலுக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக பேசிய பருவநிலை நிபுணரும், ரீடிங் பல்கலைகழகத்தின் நீரியல் நிபுணருமான ஹன்னா க்ளோக் கூறுகையில், “குறைந்த மழைப்பொழிவு ஆற்றின் நீர்மட்டத்தையும், நீர்நிலைகளின் நீர்மட்டத்தையும் குறைத்துள்ளது. அதே நேரத்தில் பயிர்களுக்கு நீர்ப்பாசனம் செய்யவும், குடிநீருக்காகவும், தொழில்துறையில் பயன்படுத்தவும் நீர்நிலைகளில் இருந்து தண்ணீர் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆகஸ்ட் மாதத்தில் போதிய மழை பெய்யாவிட்டால், அடுத்து வரும் மாதங்களில் நாட்டில் கடுமையான தண்ணீர் பஞ்சம் உருவாகும்” என்று கூறினார்.

x