அணு உலை அச்சுறுத்தல்: இன்னொரு ஜப்பானாகிறதா உக்ரைன்?


ஸாப்போரிஸியா அணு உலை

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கியது முதல் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருவது அந்நாட்டில் உள்ள அணு உலைகளின் பாதுகாப்பு குறித்த அச்சம்தான். செர்னோபில், ஸாப்போரிஸியா என உலகின் முக்கியமான அணு உலைகள் அமைந்திருக்கும் நாடான உக்ரைனை இன்றை ஐரோப்பிய நாடுகளும், சர்வதேச சமூகமும் மிகுந்த கவலையுடன் உற்றுநோக்கிக்கொண்டிருக்கின்றன. காரணம், ஆகஸ்ட் 5-ல் ஸாப்போரிஸியா அணு உலை மீதான ஏவுகணை தாக்குதல்தான்.

தென்கிழக்கு உக்ரைனில் அமைந்திருக்கும் ஸாப்போரிஸியா அணு உலை ஐரோப்பாவின் மிகப் பெரிய அணு உலையாகும். உக்ரைனின் அணுசக்தி உற்பத்தியில் அந்த அணு உலையின் பங்கு 40 சதவீதம் ஆகும். இந்த அணு உலையை மார்ச் மாதமே ரஷ்யப் படைகள் கைப்பற்றிவிட்டன. அதேசமயம், ரஷ்ய ராணுத்தினரின் கண்காணிப்பில் உக்ரைன் ஊழியர்களே அணு உலையை இயக்கிவருகின்றனர். அந்த அணு உலையைக் கைப்பற்றுவதற்கு முன்பு ரஷ்யப் படைகள் அதன் மீது தாக்குதல் நடத்தியதில் தீ விபத்து ஏற்பட்டது. எனினும், முக்கியமான சாதனங்கள் பாதிக்கப்படவில்லை என்றும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். அதேசமயம், ஸாப்போரிஸியா அணு உலையில் வெடிப்புகள் ஏற்பட்டால் செர்னோபில் அணு உலையைவிடவும் 10 மடங்கு பாதிப்பு ஏற்படும் என அப்போதே உக்ரைன் அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.

காரணம் யார்?

இந்தச் சூழலில், மீண்டும் அந்த அணு உலையில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் கதிரியக்க சென்ஸார் பழுதடைந்திருக்கிறது. ஒரு ஊழியர் காயமடைந்திருக்கிறார். இதை ரஷ்யா செய்ததாக உக்ரைன் குற்றம்சாட்டுகிறது. அணுகுண்டு பயங்கரவாதத்தை ரஷ்யா உருவாக்கிவருவதாக உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி தெரிவித்திருக்கிறார். எனினும், இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம்தான் பொறுப்பு என்று அணு உலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரஷ்ய அதிகாரிகள் கூறுகின்றனர்.

மறுபுறம், ஸாப்போரிஸியா அணு உலையை ராணுவத் தளமாக ரஷ்யா பயன்படுத்துவதாக உக்ரைன் முக்கியமான குற்றச்சாட்டையும் முன்வைத்திருக்கிறது. அணு உலை மீதான தாக்குதல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனும் உண்மையைச் சாதமாகக் கொண்டு படைகளையும் ராணுவத் தளவாடங்களையும் அங்கு ரஷ்யா பாதுகாப்பாக வைத்திருப்பதாக உக்ரைன் கூறுகிறது.

கடந்த மார்ச் மாதம் ஸாப்போரிஸியா அணு உலை மீது நடத்தப்பட்ட தாக்குதல்...

தற்கொலை முயற்சி

இந்நிலையில், “அணு உலை மீதான எந்த ஒரு தாக்குதலும் தற்கொலை முயற்சிக்குச் சமமானது” என்று ஐநா பொதுச் செயலர் அன்டோனியோ குத்தேரஸ் எச்சரித்திருக்கிறார். உலகின் முதல் அணுகுண்டு தாக்குதல் நிகழ்வான ஹிரோஷிமா தாக்குதலின் 77-வது நினைவுதினம் ஜப்பானில் அனுசரிக்கப்படுகிறது. இதில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அன்டோனியோ குத்தேரஸ், செய்தியாளர்களிடம் பேசும்போது இதைத் தெரிவித்தார். அத்துடன் அணு உலையை ஆய்வுசெய்ய சர்வதேச அணு விஞ்ஞானிகளுக்கு அனுமதியளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

மோசமான நிகழ்தகவு

இரண்டாம் உலகப்போரின்போது, 1945 ஆகஸ்ட் 6-ல் ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ‘லிட்டில் பாய்’ அணுகுண்டை வீசிய அமெரிக்கா, மற்றொரு நகரான நாகசாகி மீது ஆகஸ்ட் 9-ல் ‘ஃபேட் மேன்’ எனும் அணுகுண்டை வீசியது. இந்த இரட்டைத் தாக்குதலில் லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அந்தக் கொடூரத் தாக்குதல்களின் 77-வது நினைவுதினம் அனுசரிக்கப்படும் தருணத்தில் உக்ரைனும் அதே போன்ற அச்சுறுத்தலை எதிர்கொண்டிருப்பது மிக மோசமான நிகழ்தகவுதான்.

x