உள்நாட்டுக் கலகங்கள், ராணுவப் புரட்சி என அன்றாடம் அல்லல்படும் ஆப்பிரிக்க தேசங்களில் ஒன்று ஐவரி கோஸ்ட். மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள இந்நாட்டின் அதிபராகப் பதவிவகிக்கும் அலஸ்ஸானே குவட்டாரா, தனது அரசியல் எதிரியும் முந்தைய அதிபருமான லாரன்ட் பேக்போவுக்குப் பொதுமன்னிப்பு வழங்கியிருப்பது சர்வதேச அளவில் கவனம் ஈர்த்திருக்கிறது.
பின்னணி என்ன?
ஹென்றி கோனான் பெடீ, லாரன்ட் பேக்போ, அலஸ்ஸானே குவட்டாரா ஆகிய மூவரும் 1990-கள் முதல் ஐவரி கோஸ்ட் அரசியல் களத்தில் பிரதான இடம் பிடித்த தலைவர்கள்.
ஹென்றி கோனான் பெடீ 1993 முதல் 1999 வரை அதிபராக இருந்தவர். 1999-ல் நடந்த ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின்னர், லாரன்ட் பேக்போ அதிபரானார். 2000 முதல் 2010 வரை ஐவரி கோஸ்ட்டின் அதிபராக இருந்த லாரன்ட் பேக்போ, 2010-ல் நடந்த தேர்தலில் குவட்டாராவிடம் தோல்வியடைந்தார். எனினும், தோல்வியை ஒப்புக்கொள்ள விரும்பாத அவர், உள்நாட்டுக் கலகத்தைத் தூண்டிவிட்டார். இதில் 3,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அப்போது குவட்டாராவும் அரசு எதிர்ப்புப் படைகளும் இணைந்து அந்நாட்டின் பிரதான நகரான அபிட்ஜானைக் கைப்பற்றினர்.
அப்போது அதிபரான குவட்டாரா தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்று பதவியில் நீடிக்கிறார். எனினும், 2020-ல் அவர் மூன்றாவது முறையாகத் தேர்தலில் போட்டியிட்டது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று ஹென்றி கோனான் பெடீ, லாரன்ட் பேக்போ இருவரும் ஆட்சேபம் தெரிவித்தனர். அப்போதும் பெரும் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.
வழக்குகள்
இதற்கிடையே, 2010-ல் நடந்த கலவரம் தொடர்பாக லாரன்ட் பேக்போ மீது தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் போர்க்குற்ற வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது. எனினும் அவர் குற்றமற்றவர் என 2019-ல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதேசமயம், அபிட்ஜான் மத்திய வங்கியின் நிதியைக் கொள்ளையடித்தது தொடர்பான வழக்கில், 2019-ல் ஐவரி கோஸ்ட் நீதிமன்றம் அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
தேசநலனைக் கருத்தில் கொண்டு...
இந்நிலையில், நேற்று தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அதிபர் குவட்டாரா, “சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில், முன்னாள் அதிபர் லாரன்ட் பேக்போவுக்கு மன்னிப்பு வழங்கும் ஆணையில் கையெழுத்திட்டிருக்கிறேன்” என்று தெரிவித்தார். பேக்போவின் வங்கிக்கணக்குகளை முடக்க வேண்டாம் என்று உத்தரவிட்டிருப்பதாகவும், அவருக்கான வருடாந்திர வாழ்நாள் உதவித் தொகை தொடரும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
ஜூலை 14-ல் அபிட்ஜான் நகரில் உள்ள அதிபர் மாளிகையில் மூவரும் சந்தித்துப் பேசினர். அப்போது தேசநலனைக் கருத்தில் கொண்டு நட்பார்ந்த சூழலை உருவாக்குவது குறித்து மூவரும் பேசியதாக, நேற்றைய தனது உரையில் குவட்டாரா குறிப்பிட்டார்.
அந்நாட்டின் அரசியல் தலைநகரான யாமுசுக்ரோவில் இன்று நடக்கும் சுதந்திரதின விழாவில் கலந்துகொள்ள முன்னாள் அதிபர்கள் இருவருக்கும் அவர் அழைப்பு விடுத்திருக்கிறார். 2025-ல் நடக்கவிருக்கும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து குவட்டாரா இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அநேகமாக அவர் அரசியலிலிருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹென்றி கோனான் பெடீ, லாரன்ட் பேக்போ இருவரும் அரசியலிலிருந்து ஓய்வுபெற வேண்டும் என்று குவட்டாரா ஏற்கெனவே கேட்டுக்கொண்டிருக்கிறார், எனினும், இதுகுறித்து அவர்கள் எதையும் உறுதியாகத் தெரிவிக்கவில்லை.
எது எப்படி இருந்தாலும், வன்முறைச் சம்பவங்கள் மலிந்த ஐவரி கோஸ்ட்டின் வளமான எதிர்காலத்தைக் கருதி வெவ்வேறு கொள்கை கொண்ட் மூன்று தலைவர்கள் ஒன்றிணைந்திருப்பது அரிய அரசியல் நிகழ்வுதான்!