உளவு கப்பலை அனுப்பாதீர்கள்: சீனாவிடம் கோரிக்கை வைக்கும் இலங்கை


இந்தியாவின் கடுமையான அழுத்தத்தைத் தொடர்ந்து, உளவு கப்பல் பயணத்தை தாமதப்படுத்துமாறு இலங்கை அரசு சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சீன துறைமுகமான ஜியாங்யினிலிருந்து யுவான் வாங் 5 என்ற ஆய்வு கப்பல், சீனாவினால் நடத்தப்படும் இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்திற்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.

சீனாவின் ஆய்வு கப்பலான யுவான் வாங் 5-ல் பல நவீன ரேடார்கள், ஆய்வுக் கருவிகள் உள்ளன. இது ராணுவத் தளங்கள், அணுமின்சக்தி நிலையங்கள் போன்றவற்றை கண்காணிக்கும் திறன் படைத்தது. இந்த கப்பல் இலங்கையில் சீனாவால் இயக்கப்படும் அம்பன்தோட்டா துறைமுகத்தில் வரும் 11-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நிற்கும் என தெரிவிக்கப்பட்டது.

இது ஒரு ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கப்பலாக சொல்லப்படுகிறது, ஆனால் இது ஒரு இரட்டை பயன்பாட்டு உளவுக் கப்பல், இது விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஏவுதலில் பயன்படுத்தப்படுகிறது என தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த கப்பல் எரிபொருள் நிரப்புவதற்கு மட்டுமே வருவதாகவும், இலங்கை கடற்பரப்பில் வேறு எந்த வேலையையும் இக்கப்பல் மேற்கொள்ளாது என்றும் சீன தரப்பு கூறியது.

சீன கப்பலின் வருகை இந்தியாவை உளவு பார்க்கப் பயன்படுத்தப்படும் என்று இந்திய அரசு இலங்கை அரசிடம் தெரிவித்தது. மேலும் அண்டை நாடான இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதை இந்தியா சந்தேகத்துடன் பார்க்கிறது. இதுபற்றி கடந்த வாரம் கருத்து தெரிவித்த வெளியுறவு அமைச்சகம், " இந்த விவகாரம் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துவதை உன்னிப்பாகக் கண்காணித்து அவற்றைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்" என்று கூறியது.

இந்தியாவின் கடும் அழுத்தத்தை தொடர்ந்து இலங்கை வெளியுறவு அமைச்சகம், கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்திடம் விடுத்த எழுத்துப்பூர்வ கோரிக்கையில், இந்த சர்ச்சைக்குரிய சீன கப்பலின் பயணத்தை தொடர வேண்டாம் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. "யுவான் வாங் 5 கப்பல் அம்பந்தோட்டாவுக்கு வரும் தேதியை இந்த விவகாரம் குறித்து மேலும் ஆலோசனை செய்யப்படும் வரை ஒத்திவைக்குமாறு இலங்கை வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொள்கிறது" என்று அந்த கோரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, அரசியல் கட்சித் தலைவர்களிடம் இந்த சர்ச்சைக்குரிய பயணம் திட்டமிட்டபடி நடக்காது என்று நேற்று உறுதியளித்தார். முன்னதாக, 2014-ம் ஆண்டு இரண்டு சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கையில் நிறுத்தப்பட்டபோது இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

x