அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, தைவானுக்கு மேற்கொண்ட பயணத்தால் சீற்றமடைந்திருக்கும் சீனா, தைவானை அச்சுறுத்தும் வகையில் ராணுவ நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இந்நிலையில், தைவான் ராணுவத்துக்குச் சொந்தமான சுங் - ஷான் அறியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைத் தலைவரான ஓவ் யாங் லிங்-சிங் (57), மர்மமான முறையில் மரணமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தெற்கு தைவானின் பிங்டுங் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த அவர், இன்று காலை மர்மமான முறையில் இறந்துகிடந்தது தெரியவந்தது. பிங்டுங் நகருக்கு வணிக நிமித்தம் அவர் சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது.
சுங் - ஷான் நிறுவனத்தின் துணைத் தலைவர் எனும் முறையில் ஏவுகணை உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் அவர் பிரதானப் பங்கு வகித்தார். சீனா விடுத்திருக்கும் அச்சுறுத்தலுக்கு நடுவில், ஆயுத பலத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் தைவான் இருக்கிறது. இதனால் ஏவுகணைகளின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய நெருக்கடியில் அவர் இருந்தார்.
இதற்கிடையே, அவர் மாரடைப்பால் மரணமடைந்ததாகவும், அவர் தங்கியிருந்த அறைக்குள் யாரும் அத்துமீறி நுழையவில்லை என்றும் தைவான் அதிகாரிகள் கூறியதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கிறது. இதுதொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது.