‘குரங்கு அம்மையை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள்’ - பொது சுகாதார அவசரநிலையை அறிவித்தது அமெரிக்கா


அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

குரங்கு அம்மை நோயை பொது சுகாதார அவசரநிலையாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன் காரணமாக குரங்கு அம்மை தடுப்பு பணிகளுக்கு அதிக நிதி விடுவிக்கவும், தரவு சேகரிப்பை அதிகப்படுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நடவடிக்கை காரணமாக, குரங்கு அம்மை வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் கூடுதல் பணியாளர்கள் ஈடுபடவும் வழிவகை ஏற்படும்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க சுகாதாரத்துறை செயலாளர் சேவியர் பெசெரா, " குரங்கு அம்மை வைரஸை எதிர்கொள்வதில் அடுத்த கட்டத்திற்கு செல்ல நாங்கள் தயாராக உள்ளோம். இந்த நோயை தீவிரமாக எடுத்துக் கொள்ளவும், இந்த வைரஸை சமாளிக்க எங்களுக்கு உதவவும் ஒவ்வொரு அமெரிக்கரையும் கேட்டுக்கொள்கிறோம்" என தெரிவித்தார்.

குரங்கு அம்மை தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், " குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் நான் உறுதியாக இருக்கிறேன். இதற்காக தடுப்பூசி விநியோகத்தை விரிவுப்படுத்துதல், பரிசோதனையை அதிகப்படுத்துதல் மற்றும் ஆபத்தில் உள்ள சமூகங்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பணிகளை செய்யவுள்ளோம். இதனால் குரங்கு அம்மை வைரஸை எதிர்கொள்வதில் இன்றைய பொது சுகாதார அவசரநிலை அறிவிப்பு முக்கியமானது. இது அவசரமாக தேவைப்படுகிறது" என தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு இன்னும் 90 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும். அதற்கு மேலும் தேவைப்பட்டால் இதனை புதுப்பிக்க முடியும்.

தற்போதைய பரவலில் அடிப்படையில் அமெரிக்காவில் குரங்கு அம்மை பாதிக்கப்பட்டோரின் உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், குரங்கு அம்மை தொடர்பான வைரஸ்க்கு எதிராக ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட சுமார் 6,00,000 JYNNEOS தடுப்பூசிகள் அமெரிக்க மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.

x