அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு வந்து சென்றதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தைவானை நோக்கி ஏவுகணையை வீசி தீவிர போர்ப்பயிற்சியின் இறங்கியுள்ளது சீனா.
தைவானின் கடலோரப்பகுதிகளை சுற்றி வளைக்கும் விதமாக போர்ப்பயிற்சியை தீவிரப்படுத்தியுள்ள சீனா ஏவுகணையையும் வீசியுள்ளது. அமெரிக்கா மற்றும் தைவானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த நடவடிக்கைகளில் சீனா இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவானுக்கு வருகைக்கு ஆரம்பம் முதலே சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தைவான் தீவு தனக்கு சொந்தமானது என்று சீனா உரிமை கோரி வருகிறது. ஆனால் தைவானை சுதந்திர நாடாக செயல்பட விட வேண்டும் என அமெரிக்கா கூறி வருகிறது. எனவே இப்போது சீனாவின் இராணுவம் தைவான் தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் வான்வெளியில் நேரடி துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட இராணுவப் பயிற்சிகளைத் தொடங்கியுள்ளதாக சீன அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபருக்கு அடுத்தாக உயர் பதவியில் இருக்கும் அந்நாட்டு சபாநாயகர், தைவான் வந்தது, கடந்த 25 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும். அவர் தனது ஒரு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று மாலை அமெரிக்கா திரும்பினார். தைவானில் திபெத் பிரதிநிதிகளையும் நான்சி பெலோசி சந்தித்துப் பேசினார்.
நான்சி பெலோசியின் இந்த பயணம் சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து பேசிய சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ , “அமெரிக்க சபாநாயகரின் தைவான் பயணம் கேலிக்கூத்தானது. ஜனநாயகம் என்ற போர்வையில் சீனாவின் இறையாண்மையை அமெரிக்கா மீறிவிட்டது. சீனாவை அவமதிப்பவர்கள் தண்டிக்கப்படுவர்” என தெரிவித்தார்.
நான்சி பெலோசியின் தைவான் பயணத்தையொட்டி, தைவான் கடல் பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் கடந்த 2 நாட்களாக சுற்றி வருகின்றன. அதேநேரத்தில் சீன போர்க்கப்பல்களும் அந்தப் பகுதிக்கு சென்றுள்ளன. இப்போது சீனா ஏவுகணை தாக்குதலை தொடங்கியுள்ளதால் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.