பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வர, அனைத்துக் கட்சி அரசு அமைக்க முன்வர வேண்டும் என்று இலங்கை அரசியல் கட்சிகளுக்கு அதிபர் ரணில் விக்கிரமசிங்கே அழைப்பு விடுத்திருக்கிறார்.
இலங்கை நாடாளுமன்றம் ஏழு நாட்கள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், அதன் மூன்றாவது கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அதில் தனது அரசின் கொள்கை அறிக்கையை வெளியிட அதிபர் ரணில் விக்கிரமசிங்கே நாடாளுமன்றத்துக்கு வந்தார். நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன, நாடாளுமன்றப் பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க ஆகியோர் நாடாளுமன்றத்தின் பிரதான வாயிலுக்குச் சென்று அதிபரை வரவேற்றனர். முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் முப்படை அணி வகுப்பு மரியாதை அவருக்கு அளிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரணில், “அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஆட்சியமைக்க முன்வர வேண்டும். அனைவரும் இணைந்து பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்க வேண்டும்” என்றார். இலங்கையின் கடினமான காலகட்டத்தில் ஆதரவு தந்ததற்காக பிரதமர் மோடிக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
கடன் மறுசீரமைப்பு திட்டம் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகத் தெரிவித்த அவர், விரைவில் தாக்கல் செய்யப்படவிருக்கும் இடைக்கால பட்ஜெட்டில் பொருளாதாரச் சீர்திருத்தத் திட்டத்தின் வரைவு வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டார்.