வாட்டி வதைக்கும் வெப்ப அலையால் 500 பேர் மரணம்: ஸ்பெயினில் பரிதாபம்!


ஸ்பெயின் நாட்டில் கடந்த 10 நாட்களாக நிலவி வரும் கடும் வெப்பத்தின் காரணமாக 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பிரதமர் பெட்ரோ சான்செஸ் தெரிவித்துள்ளார்.

ஜூலை 9 முதல் 18-ம் தேதிவரை பதிவான வெப்ப அலையானது ஸ்பெயினில் இதுவரை பதிவு செய்யப்படாத மிகத் தீவிரமானது என ஸ்பெயின் வானிலை ஆய்வு நிறுவனமான ஏஇஎம்இடி தெரிவித்துள்ளது.

கார்லோஸ் III ஹெல்த் இன்ஸ்டிடியூட்டில் இருந்து வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டிய பிரதமர் சான்செஸ், “முந்தைய ஆண்டுகளின் சராசரியுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு வெப்ப அலையால் அதிகப்படியான இறப்புகள் பதிவாகியுள்ளன. எனவே பொதுமக்கள் தீவிர எச்சரிக்கையுடன் இருக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். காலநிலை அவசரநிலை என்பது உண்மை” என்று குறிப்பிட்டார்.

மேற்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியை பாதித்த வெப்ப அலையானது ஸ்பெயினையும் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் ஸ்பெயினில் கடந்த வாரம் சில பகுதிகளில் 45 டிகிரி செல்சியஸ் (113 டிகிரி பாரன்ஹீட்) வரை வெப்பநிலை பதிவானது. இதன் காரணமாக பல இடங்களில் காட்டுத்தீயால் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர்.

காட்டுத்தீ காரணமாக வடமேற்கு ஸ்பெயினில் இருவர் உயிரிழந்தனர். பல நூறு வன விலங்குகளும் உயிரிழந்தன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

x