‘அதிகரிக்கிறது தொற்று... வீட்டிலிருந்தே வேலை பாருங்கள்!’ - ஆஸ்திரேலியர்களுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தல்


ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனீஸ்

கரோனா மூன்றாவது அலையை எதிர்கொண்டிருக்கும் ஆஸ்திரேலியாவில் தொற்றுகளின் என்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருகிறது. ஒமைக்ரான் திரிபின் துணைத் திரிபுகளான பிஏ.4, பிஏ.5 ஆகியவற்றின் பரவல் அதிகமாகியிருக்கிறது. இதையடுத்து இரண்டாவது பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் தொடங்கியிருக்கின்றன. ஏற்கெனவே, 16 வயதுக்கு மேற்பட்டோரில் ஏறத்தாழ 95 சதவீதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். 70 சதவீதம் பேர் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். இதனால், தீவிர நோய் பாதிப்பு குறைக்கப்பட்டிருக்கிறது. எனினும், தொற்று மீண்டும் அதிகரிப்பது அந்நாட்டில் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

நேற்று (ஜூலை 19) ஒரே நாளில் மட்டும் 50,248 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இந்த எண்ணிக்கை, கடந்த இரண்டு மாதங்களில் மிக அதிகம் என ஆஸ்திரேலிய சுகாதாரத் துறையினர் தெரிவித்திருக்கிறார்கள். கடந்த ஒரு வாரத்தில் மட்டும், 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

அதேபோல், கரோனா தொற்றின் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் அளவுக்குப் பாதிப்புக்குள்ளாகின்றவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்திருக்கிறது. தற்சமயம், 5,239 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். கடந்த ஜனவரி மாதம் ஏறத்தாழ இதே எண்ணிக்கையில் கரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்தது கவனிக்கத்தக்கது.

அத்துடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என ஏபிசி ரேடியோவுக்கு அளித்த பேட்டியில் அந்நாட்டின் தலைமை மருத்துவ அதிகாரி பால் கெல்லி தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து, தொற்றுப் பரவலைத் தடுக்க மீண்டும் கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது. அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் முகக்கவசம் அணிந்திருப்பது நல்லது என்றும் அறிவுறுத்தப்படுகிறது. இந்நிலையில், வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் முறையை மீண்டும் அமல்படுத்தலாம் என பால் கெல்லி தெரிவித்திருக்கிறார். ஊழியர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும் என்றும் நிறுவனங்களிடம் அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

எனினும், இவ்விஷயத்தில் ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனீஸ் கருத்து முரண்பட்டதாக இருக்கிறது.

இதுதொடர்பாக நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆன்டனி அல்பனீஸ், வீட்டிலிருந்து வேலை செய்வது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் ஊழியர்களும் பேசி முடிவெடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

“பாதுகாப்பு எனும் அம்சத்தின் அடிப்படையில் இவ்விஷயத்தில் முடிவெடுக்க வேண்டியிருக்கிறது. அதேசமயம், சில ஊழியர்களால் வீட்டிலிருந்து வேலை பார்க்க முடியாது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்திருக்கிறார். உடல்நிலை சரியில்லை எனும்பட்சத்தில் ஊழியர்கள் வீட்டில் இருந்துகொள்ளலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

x