இலங்கையின் புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே: பெரும்பான்மையை கைப்பற்றினார்!


இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற தேர்தலில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 225 உறுப்பினர்களில், 2 பேர் ரகசிய வாக்கெடுப்பினை புறக்கணித்த நிலையில் 223 உறுப்பினர்கள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்றனர். இதில் 134 உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்று ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த ரணில் விக்ரமசிங்கே தேர்வாகியுள்ளார். இந்த தேர்தலில் எஸ்எல்பிபி கட்சியை சேர்ந்த டளஸ் அலஹப்பெருமா 82 வாக்குகளை மட்டுமே பெற்றார். மற்றொரு வேட்பாளரான அனுர திஸாநாயகே 3 வாக்குகளைப் பெற்றுள்ளார்.இதில் 4 வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது.

1993-ம் ஆண்டுக்கு பிறகு நாடாளுமன்றம் மூலமாக தேர்வு செய்யப்பட்ட அதிபராக ரணில் உள்ளார். கோத்தபயவின் பதவிகாலமான 2024-ம் ஆண்டின் நவம்பர் மாதம் வரை இவர் அதிபர் பதவியில் இருப்பார். இந்த தேர்தலில் கோத்தபய ராஜபக்சவின் எஸ்எல்பிபி கட்சி உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் கூட்டணி கட்சியினர் ரணிலுக்கு வாக்களித்ததால் அவரின் வெற்றி எளிதானது. அதே சமயம் ரணிலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு நாடாளுமன்றத்தில் ஒரே எம்.பியாக அவர் மட்டுமே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் கொதித்தெழுந்து கடந்த ஜூலை 9-ம் தேதி அதிபர் மாளிகையை கைப்பற்றினர். இதனால் இலங்கையிலிருந்து தப்பியோடிய கோத்தபய ராஜபக்ச தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் இலங்கை அதிபருக்கான தேர்தல் நடந்தது.

x