கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி, ஆட்சி மாற்றத்தை நோக்கி நகரும் இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். இலங்கை விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் வலியுறுத்திவந்த நிலையில் இந்தக் கூட்டம் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த அனைத்துக் கட்சி உறுப்பினர்களிடம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “செவ்வாய்க்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு விளக்கமளிக்குமாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் கேட்டுக்கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்திருந்தார். முன்னதாக, திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இதுதொடர்பாகச் சிறப்புக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு மீண்டும் வலியுறுத்தின.
இன்று மாலை 5 மணிக்கு நடக்கவிருக்கும் இந்தக் கூட்டத்தில், இதுவரை இலங்கைக்கு இந்தியா செய்திருக்கும் உதவிகள், இலங்கையின் இன்றைய நிலவரம் ஆகியவை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வெளியுறவுத் துறைச் செயலாளர் வினய் மோகன் குவாத்ரா பவர் பாயின்ட் பிரசன்டேஷன் உதவியுடன் விளக்குவார் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
நிர்மலா சீதாராமன் கலந்துகொள்வாரா?
இதற்கிடையே, நிர்மலா சீதாராமனுக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதால் அவர் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்வாரா என உறுதியாகத் தெரியவில்லை.
பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரைச் சந்தித்துப் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கை நிலவரம் குறித்த கவலையை வெளிப்படுத்தியதுடன், நிவாரணப் பொருட்களை அந்நாட்டுக்கு வழங்க அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டதையடுத்து, மத்திய அரசு அதற்கு அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது. அண்டை நாட்டுக்கு முன்னுரிமை எனும் கொள்கையின் அடிப்படையில் இலங்கைக்குப் பல்வேறு உதவிகளை இந்தியா வழங்கிவருகிறது. இதுவரை 3.8 பில்லியன் டாலர் உதவிகளை இந்தியா வழங்கியிருக்கிறது.
கூடவே உணவுப் பொருள், மருந்துகள், எரிபொருள் என அத்தியாவசிய உதவிகளையும் தாராளமாக வழங்கியிருக்கிறது. இந்தியாவிடமிருந்து மேலும் நிதியுதவி கோரிவருகிறது இலங்கை. இலங்கையிலிருந்து தப்பிச் செல்ல கோத்தபய மேற்கொண்ட முயற்சிகளுக்கு உதவவில்லை என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. மக்களின் பக்கம் நிற்பதாகவும் உறுதியளித்திருக்கிறது. நெருக்கடியில் இருக்கும் தங்களுக்கு இந்தியா மட்டும்தான் கடனுதவி செய்திருக்கிறது என இலங்கையின் எரிசக்தித் துறை அமைச்சர் காஞ்சனா விஜேசேகர சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
ஏற்கெனவே செய்திருக்கும் உதவிகள் தவிர இலங்கைக்குக் கூடுதல் உதவிகளை வழங்க இந்தியா தீர்மானித்திருப்பதாக, இலங்கைக்கான இந்தியத் தூதர் கோபால் பாக்லே தெரிவித்திருக்கிறார்.
நாளை புதிய அதிபர்
அதிபர் தேர்தல் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின்படி, நாளை இலங்கையின் புதிய அதிபரை அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கவிருக்கின்றனர். இலங்கையில் 1978-க்குப் பின்னர், மக்கள் நேரடியாக வாக்களிக்காமல் முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரகசிய முறையில் வாக்களித்து புதிய அதிபரைத் தேர்வுசெய்யவிருப்பது இதுவே முதல் முறை. புதிய அதிபராகப் பொறுப்பேற்பவர், புதிய பிரதமரை நியமிக்க வேண்டியிருக்கும். பிரதமர் நியமனத்தை நாடாளுமன்றம் அங்கீகரிக்க வேண்டியிருக்கும். நாடாளுமன்றத்தில் இதற்கான பணிகள் சனிக்கிழமை (ஜூலை 16) முதல் தொடங்கியிருக்கின்றன.
இந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் டளஸ் அலஹப்பெருமா, ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய செயல் தலைவர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் ஜேவிபியின் அனுரகுமார திஸாநாயகே ஆகியோர் போட்டியில் உள்ளனர்.