கஷோகி படுகொலை: சவுதி இளவரசரிடம் சமரசம் ஆனாரா ஜோ பைடன்?


பத்திரிகையாளர் ஜமால் கஷோகி

அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக மத்தியக் கிழக்கு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார் ஜோ பைடன். ஜூலை 13-ல் தொடங்கிய இந்தப் பயணத்தில், இஸ்ரேல், மேற்குக் கரை எனச் சுற்றுப் பயணம் சென்ற பைடன், நேற்று சவுதி அரேபியாவுக்குச் சென்றிருந்தார். இன்று வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்திலும் பைடன் பங்கேற்றார்.

பயணத்தின் நோக்கம்

உக்ரைன் போர் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியிருக்கிறது. ஏற்கெனவே, மத்தியக் கிழக்கு நாடுகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படைகளைத் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து அந்நாடுகள் மத்தியில் அமெரிக்கா குறித்து அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில், நிலைமையைச் சீராக்கும் வகையில் இந்தப் பயணத்தை அவர் மேற்கொண்டிருக்கிறார்.

அமெரிக்காவின் நட்பு நாடுகளான இஸ்ரேலுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான உறவில் சகஜத்தன்மையைக் கொண்டுவருவது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பாக சவுதி அரேபியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்வது, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தட்டுப்பாட்டிக் குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க சவுதி அரேபியாவைச் செயல்பட வைப்பது எனப் பல்வேறு நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள இந்தப் பயணத்தைப் பயன்படுத்திக்கொள்கிறார் பைடன்.

சலசலப்பை ஏற்படுத்திய புகைப்படம்

நேற்று (ஜூலை 15) ஜெட்டா நகரில் நடந்த சந்திப்பின்போது சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் ஜோ பைடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது சலசலப்பை ஏற்படுத்தியது. 2018-ல் நடந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி படுகொலையில் குற்றம்சாட்டப்பட்டவர் முகமது பின் சல்மான். கஷோகியைக் கொலை செய்ய ஒப்புதல் அளித்தவர் முகமது பின் சல்மான் தான் என அமெரிக்க உளவுத் துறை வட்டாரங்கள் திட்டவட்டமாக நம்புகின்றன. இந்நிலையில், அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதால் ஏற்பட்ட சர்ச்சையைச் சமாளிக்க நினைத்தார் ஜோ பைடன்.

ஜெட்டாவில் நடந்த கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பைடன், கஷோகி படுகொலை குறித்து முகமது பின் சல்மானிடம் கேள்வி எழுப்பியதாகத் தெரிவித்தார். “மனித உரிமைகள் விஷயத்தில் ஒரு அமெரிக்க அதிபர் அமைதியாக இருப்பது என்பது, பொருத்தமற்றது. நான் எப்போதும் நமது விழுமியங்களுக்காகக் குரல் கொடுப்பேன்” என்றும் தெரிவித்தார்.

எனினும், கஷோகி படுகொலையில், தான் தனிப்பட்ட முறையில் பொறுப்பாளி அல்ல என முகமது பின் சல்மான் தன்னிடம் கூறியதாக பைடன் தெரிவித்ததுதான் இதில் முக்கியத் திருப்பம்.

“அவரிடம் ‘அந்தக் கொலையில் நீங்கள் சம்பந்தப்பட்டிருக்கிறீர்கள் என நினைத்தேன்’ எனத் தெரிவித்தேன். அவர் ‘நான் தனிப்பட்ட முறையில் அதற்குப் பொறுப்பாளி அல்ல. அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்கிறேன்’ என்று என்னிடம் கூறினார்” என பைடன் தெரிவித்தார்.

இராக்கின் அபு க்ரைப் சிறையில் கைதிகளை அமெரிக்க ராணுவத்தினர் சித்ரவதை செய்த நிகழ்வு, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பகுதியில் உள்ள ஜெனின் நகரில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ‘அல் ஜஸீரா’ செய்தியாளர் ஷிரீன் அபு அக்லேஹ் (51) இஸ்ரேலிய ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஆகியவற்றை பைடனிடம் முகமது பின் சல்மான் சுட்டிக்காட்டியதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

யார் அந்த கஷோகி?

சவுதி பத்திரிகையாளரான ஜமால் கஷோகி ஒரு காலத்தில் அரசின் செய்தித் தொடர்பாளர் போல செயல்பட்டவர். சவுதியின் அதிகார வட்டத்தோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர். ‘அல் அராப் நியூஸ்’ சேனலின் தலைமை ஆசிரியராக இருந்த கஷோகி, ‘அல் வதான்’ எனும் நாளிதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். முற்போக்கான கருத்துகள் கொண்ட இதழாக அதை அவர் நடத்திவந்தது சவுதி அரசின் அதிருப்திக்குக் காரணமானது. அதற்காகவே அவர் பல இன்னல்களைச் சந்திக்க வேண்டிவந்தது. 2015-ல் மன்னர் சல்மான் இப்னு அப்துல் அஸீஸ் ஆல் சவூதின் மகனான முகமது பின் சல்மான் பட்டத்து இளவரசரான பின்னர் நிலைமை இன்னும் மோசமானது.

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி

இதையடுத்து 2017 ஜூனில் சவுதியிலிருந்து வெளியேறி அமெரிக்காவுக்குச் சென்ற கஷோகி, ‘வாஷிங்டன் போஸ்ட்’ இதழில் தொடர்ச்சியாகக் கட்டுரை எழுதிவந்தார். சவுதி அரசை, குறிப்பாக இளவரசர் முகமது பின் சல்மானைக் கடுமையாக விமர்சித்தார். “சமூக மற்றும் பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதாக அறிவித்த இளவரசர், சவுதி முன்பைவிட வெளிப்படைத்தன்மையுடனும் சகிப்புத்தன்மையுடனும் இருக்கும் என்றெல்லாம் பேசினார். ஆனால், ஆனால், அறிவுஜீவிகள், மதத் தலைவர்கள் கைதுசெய்யப்படும் சம்பவங்கள்தான் அதிகரித்திருக்கின்றன” என்று சாடினார்.

தன்னைப்போல் நாட்டைவிட்டு வெளியேறி துருக்கி, பிரிட்டன் போன்ற நாடுகளில் வசிக்கும் சவுதி மக்கள் சிலரிடம் இதுதொடர்பாகக் கவலையுடன் விவாதித்திருக்கிறார்.

ஒத்த சிந்தனை கொண்டவர்களை ஒருங்கிணைத்தும் செயல்பட்டுவந்தார். இதையடுத்து, அவரை ட்விட்டரில் கடுமையாக விமர்சித்துப் பல பதிவுகள் வெளியாகின. இதற்குப் பின்புலமாக இருந்த சவுத் அல்-ஹடானி, இளவரசர் முகமது பின் சல்மானுக்கு மிகவும் நெருக்கமானவர். இந்த அல்-ஹடானிதான் கஷோகி படுகொலை வழக்கில் முக்கியமாகக் குற்றம்சாட்டப்பட்டவர்.

காணாமல் போன கஷோகி

இந்நிலையில் துருக்கியைச் சேர்ந்த ஹாட்டிஸ் செங்கிஸ் எனும் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விரும்பிய கஷோகி, முதல் மனைவியை விவாகரத்து செய்வது தொடர்பான ஆவணங்களைப் பெற, 2018 அக்டோபர் 2-ல் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்குச் சென்றார். அதன் பின்னர் திரும்பவே இல்லை. அவருடன் சென்றிருந்த ஹாட்டிஸ் செங்கிஸ், தூதரகக் கட்டிடத்துக்கு வெளியே அவருக்காகக் காத்திருந்தார். பல மணி நேரம் காத்திருந்தும் கஷோகி வெளியே வராததால் அச்சமடைந்த செங்கிஸ், வாயிற்காவலரிடம் விசாரித்திருக்கிறார். தனக்கு அது பற்றி ஒன்றும் தெரியாது என்று ஆரம்பத்தில் மறுத்த வாயிற்காவலர், பின்னர் கஷோகி முன்பே வெளியே சென்றுவிட்டதாகவும், அதைக் கவனிக்கவில்லை என்றும் கூறிவிட்டார்.

கஷோகி காணாமல் போன சம்பவம் உலகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இளவரசர் முகமது பின் சல்மானின் உத்தரவின் பேரில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகின. சவுதி அரசு இதை மறுத்துவந்த நிலையில், கஷோகி சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவரது உடல் கண்டதுண்டமாக வெட்டப்பட்டதாகவும் தெரியவருவதாகக் கூறிய துருக்கி அரசு அதற்கான குரல் பதிவுகள் தங்களிடம் இருப்பதாகவும் கூறியது.

இதையடுத்து, சவுதி தூதரக அலுவலகத்தில் கஷோகி கொல்லப்பட்டதை மட்டும் ஒருவழியாக ஒப்புக்கொண்ட சவுதி அரசு, அதற்கும் இளவரசருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுத்துவிட்டது. கஷோகிக்கும் மற்றவர்களுக்கும் இடையில் நடந்த கைகலப்பின்போது எதிர்பாராத விதமாக அவர் உயிரிழந்தார் என்பதுதான் சவுதி தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம். ஆனால், கஷோகியின் உடல் கண்டம்துண்டமாக வெட்டப்பட்டது திட்டமிடப்படாமல் யதேச்சையாக நடந்த குற்றமாக இருக்காது என்று துருக்கியின் உளவு அமைப்புகளும், அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ-யும் குற்றம்சாட்டின. சவுதி அரசுடன் நெருங்கிய நட்பு பாராட்டிவந்த அப்போதைய அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு இந்த விவகாரத்தைப் பட்டும் படாமலும் ஜாக்கிரதையாகவே அணுகியது.

உண்மையில், தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இடத்துக்கு எப்படியேனும் கஷோகியைக் கொண்டுவர வேண்டும் என்று சவுதி பல முயற்சிகளை மேற்கொண்டது. கஷோகி நாடு திரும்ப வேண்டும் என்றும், தனது பத்திரிகை பணிகளை சவுதியிலிருந்து தொடர வேண்டும் என்று சவுதி அரசு அழைப்பு விடுத்தது. ஆனால், அச்சத்தின் காரணமாக அதை ஏற்க மறுத்துவிட்டார் கஷோகி. மேலும், விவாகரத்து தொடர்பான ஆவணங்களை அமெரிக்காவில் இருந்தபடியே செய்துமுடிக்க கஷோகி திட்டமிட்டிருந்த நிலையில், துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்துக்குத் தந்திரமாக வரவழைக்கப்பட்டார். அங்குதான் அவரது படுகொலை நிகழ்ந்தது.

மோசமான தீர்ப்பு

இது தொடர்பாக, ரியாத் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவந்த வழக்கில்தான் தீர்ப்பு 2019-ல் வெளியானது. இதில் தொடர்புடைய ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மூன்று பேருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், படுகொலையை அரங்கேற்றியவர் என்று உறுதியாக நம்பப்படும் அல்-ஹடானியும், சவுதி உளவுத் துறையின் முன்னாள் தலைவர் அகமது அல் அஸிரியும் குற்றமற்றவர்களாக வெளியில் வந்தது கடும் கண்டனத்துக்குள்ளானது. சர்வதேச அளவில் கவனம்பெற்ற கொலை தொடர்பான இந்த வழக்கு விசாரணை, வெளியுலகத்தால் அறிந்துகொள்ள முடியாத அளவுக்கு மூடுமந்திரமாகவே நடந்தேறியது. தங்களுக்கு வந்த ‘உத்தரவு’களைப் பின்பற்றியதாகவே குற்றம்சாட்டப்பட்டவர்கள், வழக்கு விசாரணையின்போது கூறினார்கள். ஆனால், யார் அந்த உத்தரவுகளைப் பிறப்பித்தது என்பது குறித்து சவுதி நீதிமன்றம் கவலைப்படவே இல்லை.

“இந்தத் தீர்ப்பின் மூலம் அடியாட்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதற்கு மூளையாகச் செயல்பட்டவர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். அவர்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்படவே இல்லை. இது இது நீதியைக் கேலிக்கூத்தாக்கியிருக்கும் தீர்ப்பு” என்று சட்டத்துக்குப் புறம்பான மரண தண்டனைகளை விசாரிக்கும் ஐநா அமைப்பைச் சேர்ந்த ஆக்னஸ் கல்லாமார்டு கடுமையாக விமர்சித்தார்.

புதைக்கப்பட்ட உண்மைகள்

இப்போது ஜோ பைடன், சவுதி பட்டத்து இளவரசரிடம் தார்மிக ரீதியில் கேள்வி எழுப்புகிறார், ஆனால், அமெரிக்கா அந்தத் தீர்ப்பை வரவேற்கவே செய்தது. ‘குற்றமிழைத்தவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டிருப்பது முக்கியமான நடவடிக்கை’ என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரிகள் கூறினர். தாங்கள் கொடுத்த அழுத்தத்தால்தான் இந்தத் தீர்ப்பு வந்திருப்பதாகவும் அமெரிக்கா பெருமிதம் தெரிவித்தது.

கஷோகியின் குடும்பத்தினரும் இந்தத் தீர்ப்பை வரவேற்கவே செய்தனர். “சவுதியின் விசாரணையில் எங்களுக்கு முழு நம்பிக்கை உண்டு. எங்களுக்கு நீதி வழங்கப்பட்டிருக்கிறது” என்று கஷோகியின் மகன் சலா கஷோகி கூறினார். ஆனால், கஷோகியைத் திருமணம் செய்ய காத்திருந்த ஹாட்டிஸ் செங்கிஸ் இந்தத் தீர்ப்பால் அதிருப்தியடைந்தார். இப்போதும் முகமது பின் சல்மானுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ஜோ பைடனுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கும் ஹாட்டிஸ் செங்கிஸ், “பாதிக்கப்பட்டவரின் ரத்தம் உங்கள் கைகளில் உள்ளது” என்று வேதனை தெரிவித்திருக்கிறார்.

படுகொலைசெய்யப்பட்ட கஷோகியின் உடல் கடைசிவரை கிடைக்கவேயில்லை. அதேபோல், இந்தத் தீர்ப்பின் மூலம் பல உண்மைகளும் வெளியுலகத்துக்குத் தெரியாமல் புதைக்கப்பட்டுவிட்டன என்பதுதான் சுதந்திரச் சிந்தனையாளர்களையும் மனித உரிமை அமைப்பினரையும் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.

x