இலங்கை புதிய அதிபர் தேர்தலில் களமிறங்கும் 4 வேட்பாளர்கள்: யார் யார் தெரியுமா?


இலங்கையின் புதிய அதிபர் தேர்தலில் இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா உள்ளிட்ட நான்கு பேர் போட்டியில் இணைந்துள்ளனர். மேலும் மைத்திரிபால சிறிசேன மற்றும் சரத் பொன்சேகா ஆகியோரும் போட்டியில் இணையலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை நாட்டின் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக வெடித்தெழுந்த மக்கள் போராட்டங்கள் காரணமாக அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்ச ராஜினாமா செய்தார். இதனால் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான இன்று நாடாளுமன்றம் கூடியது. 13 நிமிடங்கள் நடந்த இந்த அமர்வின் போது, அதிபர் பதவிக்கான வெற்றிடத்தை பாராளுமன்ற செயலாளர் தம்மிக்க தஸாநாயகே அறிவித்தார்.

புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வேட்புமனுக்கள் செவ்வாய்கிழமை பரிசீலிக்கப்படும் என்றும், ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் இருந்தால் புதன்கிழமை நடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள் என்றும் தஸாநாயகே கூறினார்.

இந்த புதிய அதிபர் தேர்தலில் ராஜபக்சவின் எஸ்எல்பிபி கட்சியின் சார்பில் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதான எதிர்க்கட்சியான எஸ்ஜேபியின் தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இது தவிர மார்க்சிஸ்ட் ஜேவிபி தலைவர் அனுரகுமார திஸாநாயகே மற்றும் எஸ்எல்பிபியில் பிரிந்த டலஸ் அழகப்பெரும ஆகியோர் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இலங்கை முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கை முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா போட்டியிட தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியானது.

225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் கோத்தபய ராஜபக்சவின் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா (SLPP) கட்சி பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்டுள்ளது. எனவே இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

x