பெல்ஜியம் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான சோஃபி வில்ம்ஸ், மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது கணவரான முன்னாள் ஆஸ்திரேலிய கால்பந்து வீரர் கிறிஸ் ஸ்டோனை உடனிருந்து கவனித்துக் கொள்வதற்காக பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
2019-20 ல் பெல்ஜியத்தின் முதல் பெண் பிரதமராகவும் இருந்துள்ளார் வில்ம்ஸ். அதன்பின்னர் நாட்டின் துணைப்பிரதமராக இருந்த அவர் கணவரை கவனித்துக் கொள்வதற்காக கடந்த ஏப்ரல் மாதம் அந்த பதவில் இருந்து தற்காலிகமாக பதவி விலகினார். தற்போது முற்றிலுமாக துணைப்பிரதமர் பதவியில் இருந்து விலகியிருக்கிறார்.
இது தொடர்பாக சோஃபி வில்ம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் கணவரின் நோய் ஒரு கடினமான போராக இருக்கும். எனவே நான் அவருடனும், எங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து போராட விரும்புகிறேன். ஆனால் அரசாங்கத்தில் எனது தற்போதைய கடமைகள் என்னை அவ்வாறு செய்ய அனுமதிக்காது. எனவே துணைப்பிரதமர் பதவியிலிருந்து விலகுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
பெல்ஜியத்தின் பிரதமர் அலெக்ஸாண்டர் டி க்ரூ, ஏப்ரல் மாதம் முதல் சோஃபி வில்ம்ஸின் வெளியுறவுத்துறை பொறுப்பை தற்காலிகமாக கவனித்து வந்தார். தற்போது வில்ம்ஸ் பதவி விலகியுள்ள நிலையில் இது தொடர்பாக அலெக்ஸாண்டர் டி க்ரூ வெளியிட்டுள்ள ட்வீட்டில், “ பல ஆண்டுகளாக உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்புக்கு நன்றி. நாம் மீண்டும் சந்திக்கும் வரை இது பிரியாவிடை வாழ்த்து அல்ல " என்று கூறியிருக்கிறார்.