‘7 நாட்களுக்குள் இலங்கைக்கு புதிய அதிபர் நியமனம்’ - சபாநாயகர் உறுதி


ஏழு நாட்களுக்குள் இலங்கையில் புதிய அதிபர் பதவியேற்பார் என நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தெரிவித்தார். மேலும், கோத்தபய ராஜபக்சவின் பதவி விலகல் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

கடந்த வாரம் சனிக்கிழமை இலங்கையில் அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றியதை அடுத்து, கோத்தபய ராஜபக்ச அங்கிருந்து தப்பியோடினார். அதன்பிறகு தனது பதவியை ராஜினாமா செய்யாமலேயே புதன்கிழமையன்று அதிகாலை மாலத்தீவுக்கு தப்பிய கோத்தபயவுக்கு அந்த நாடு அடைக்கலம் தரவில்லை. எனவே அவர் நேற்று தனி விமானம் மூலமாக சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்.

சிங்கப்பூரில் இருந்தபடி மின்னஞ்சல் மூலமாக கோத்தபய ராஜபக்ச நேற்று தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பினார். இதனை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன, “ வரும் சனிக்கிழமை சட்டப்பேரவை கூட்டப்படும். புதிய அதிபரை தேர்வு செய்யும் பணியை ஏழு நாட்களுக்குள் முடித்துவிடுவேன் என நம்புகிறேன். அரசியலமைப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட அனைவரின் ஒத்துழைப்பையும் நான் கோருகிறேன்" என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ரணில் விக்கிரமசிங்கவை இடைக்கால அதிபராக சபாநாயகர் நியமனம் செய்ததற்கும் எதிர்க்கட்சிகள் மற்றும் போராட்டக்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக இலங்கையில் அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

x