சிங்கப்பூருக்கு தப்பிச் செல்லக் காத்திருக்கும் கோத்தபய ராஜபக்ச: தனி விமானம் கிடைப்பதில் சிக்கல்!


இலங்கையில் இருந்து மாலத்தீவுக்கு தப்பிச் சென்ற இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, தனி விமானத்தில் சிங்கப்பூருக்கு செல்வதற்காக காத்திருக்கிறார்.

தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்வதாக உறுதியளித்த கோத்தபய ராஜபக்ச, பதவி விலகாமலேயே புதன்கிழமை அதிகாலையில் மாலத்தீவுக்கு தப்பி சென்றார். ஆனால் மாலேவில் உள்ள விமான நிலையத்திலும் போராட்டக்காரர்கள் கோத்தபயவுக்கு எதிராக கடும் போராட்டங்களை நடத்தினார். இதன் காரணமாக கோத்தபய ராஜபக்ச ‘எங்கள் நாட்டின் வழியாக செல்கிறார், ஆனால் எங்கள் நாட்டில் தங்கவில்லை’ என மாலத்தீவு அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

கோத்தபய ராஜபக்ச, அவரது மனைவி லோமா மற்றும் அவர்களது இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் புதன்கிழமை இரவு மாலேயில் இருந்து SQ437 விமானத்தில் சிங்கப்பூர் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் பொது விமானத்தில் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்ற அச்சத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்கள் அந்த விமானத்தில் ஏறவில்லை. அதற்கு பதிலாக அவர்கள் இப்போது ஒரு தனி விமானத்திற்காக காத்திருக்கிறார்கள். அவருக்கு தனி விமானம் பெற்றுக் கொடுப்பது குறித்து மாலத்தீவு அரசு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

நேற்று அதிகாலையில் கோத்தபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தற்காலிக அதிபராக இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன நியமித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. கோத்தபய ராஜபக்ச தப்பிக்க உதவிய ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என அவரின் அலுவலகத்தை கைப்பற்றி போராட்டக்காரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.

x