சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ‘செக்’!


2021 அக்டோபர் 31-ல் இத்தாலி தலைநகர் ரோமில் நடந்த ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி...

தேசிய அரசியலில் திட்டமிட்டு காய்நகர்த்துவதன் மூலம் எதிராளிகளை வலுவிழக்கச் செய்யும் வியூகங்களை அமைத்துவரும் மோடி தலைமையிலான பாஜக அரசு, வெளியுறவு விவகாரத்திலும் புத்திசாலித்தனமான நகர்வுகள் மூலம் இந்தியாவுக்கு எதிரான நாடுகளுக்கு செக் வைப்பதிலும் தேர்ந்துவிட்டது. உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யா குறித்த நிலைப்பாட்டில் - மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்தையும் தாண்டி - இந்தியா காட்டிய உறுதி ஓர் உதாரணம்.

இதோ ஜி20 மாநாட்டின் சில அமர்வுகளை காஷ்மீரில் நடத்துவதாக அறிவித்ததன் மூலம், நமது பகை நாடுகளாக நடந்துகொள்ளும் பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் ஒருசேர நெருக்கடி கொடுத்திருக்கிறது இந்தியா. இந்த நகர்வின் மூலம் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் இதுவரை உருவாக்கிவைத்திருந்த சித்திரத்தை இந்தியா சிதைத்திருக்கிறது. கூடவே, எல்லையில் சீண்டிக்கொண்டே யிருக்கும் சீனாவுக்கும் உறுதியான பதிலடி தந்திருக்கிறது. இதன் பின்னணி என்ன?

முதன்முறையாகத் தலைமையேற்கும் இந்தியா

உலகின் முன்னணி நாடுகளின் பொருளாதாரக் கூட்டமைப்பாகக் கருதப்படும் ஜி20 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், சீனா, துருக்கி, தென் கொரியா, சவுதி அரேபியா உள்ளிட்ட 19 நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் அங்கம் வகிக்கின்றன. 1999-ல் இந்த அமைப்பு தொடங்கப்பட்ட நிலையில், 2008-ம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் இதன் மாநாடு நடத்தப்படுகிறது. உறுப்பு நாடுகளின் அதிபர் / பிரதமர் அல்லது நிதியமைச்சர் / வெளியுறவுத் துறை அமைச்சர் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர். இதில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளும் இதன் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தகுதி கொண்டவை. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டின் டிசம்பர் 1-ம் தேதி முதல் அடுத்த ஆண்டின் நவம்பர் 30 வரை ஒரு நாடு இதன் தலைமைப் பொறுப்பில் இருக்கும். 2010 முதல் இந்த முறை பின்பற்றப்பட்டுவருகிறது.

2022 டிசம்பர் 1 முதல் இந்தியா தலைமைப் பொறுப்பை வகிக்கவிருக்கிறது. இது இந்தியாவுக்கு முதன்முறையாகக் கிடைக்கும் வாய்ப்பு. உலகின் மொத்த ஜிடிபியில் 80 சதவீதம், உலக வர்த்தகத்தில் 75 சதவீதம், உலக மக்கள்தொகையில் 60 சதவீதம் என ஜி20 அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பங்களிப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மட்டுமல்லாமல் சிறப்பு அழைப்பின் பேரில் விருந்தினர்களாகப் பல்வேறு நாடுகளின் தலைவர்களும், அமைப்புகளும் இதில் கலந்துகொள்வார்கள். உலகப் பொருளாதாரத்தில் கரோனா பெருந்தொற்று, உக்ரைன் போர் ஆகியவற்றின் தாக்கம் குறித்து அலசுவது, அவற்றிலிருந்து மீண்டு வருவதற்கான திட்டங்களை வகுப்பது போன்றவை பிரதானமாக அலசப்படும்.

காஷ்மீரில் அமர்வுகள்

2023-ல் ஜி20 மாநாட்டை டெல்லியில் நடத்த திட்டமிட்டிருக்கும் இந்தியா, அதன் சில அமர்வுகளை காஷ்மீரில் நடத்துவதாக அறிவித்தது பெரிய அளவில் கவனம் ஈர்த்திருக்கிறது. காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டக்கூறு நீக்கப்பட்டு, ஜம்மு - காஷ்மீர், லடாக் எனும் இரண்டு ஒன்றியப் பிரதேசங்களாக மாற்றப்பட்ட பின்னர் நடத்தப்படவிருக்கும் மிக முக்கியமான சர்வதேச நிகழ்வு இது. காஷ்மீரில் கடந்த 30 ஆண்டுகளில் சர்வதேச அளவிலான எந்த ஒரு மாநாடும் நடைபெற்றதில்லை. காஷ்மீரின் வளர்ச்சியை சர்வதேசச் சமூகத்தின் கண் முன்னே நிறுத்த இந்த மாநாடு ஒரு வாய்ப்பாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் கொண்டிருக்கும் பார்வையும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியான சூழலில், காஷ்மீரைச் சொந்தம் கொண்டாடும் பாகிஸ்தானும், லடாக்கில் ஊடுருவ முயற்சிக்கும் சீனாவும், இவ்விவகாரத்தில் இந்தியாவின் நோக்கத்தைக் கேள்விக்குட்படுத்தத் தொடங்கியிருக்கின்றன.

பாகிஸ்தானின் பதற்றம்

பாகிஸ்தான் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியிருப்பதால் ஜி20 அமைப்பில் அந்நாடு அங்கம் வகிக்கவில்லை. எனினும், காஷ்மீர் விவகாரத்தை முன்வைத்து இந்தியாவுக்குப் பல்வேறு வகைகளில் நெருக்கடி கொடுத்துவரும் பாகிஸ்தான், சர்ச்சைக்குரிய பகுதி என்பதால் அங்கு ஜி20 மாநாடு நடத்தப்படுவதை எதிர்ப்பதாக ஆட்சேபம் தெரிவித்திருக்கிறது. இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்தியா எடுக்கும் இதுபோன்ற முயற்சிகளை முற்றிலும் எதிர்ப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தான் வெளியுறவுத் துறைச் செயலாளர் அசீம் இஃப்திகார் அகமது

“சட்டம் மற்றும் நீதியின் முக்கியத்துவத்தை ஜி20 உறுப்பினர்கள் நன்றாக அறிந்திருப்பார்கள். இந்தியாவின் இந்த முயற்சியை அவர்கள் முற்றாக நிராகரிப்பார்கள்” என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறைச் செயலாளர் அசீம் இஃப்திகார் அகமது கூறியிருக்கிறார்.

கூடவே, இவ்விவகாரத்தில் தங்கள் தரப்பில் ஆதரவைத் திரட்டும் பணியிலும் பாகிஸ்தான் இறங்கியிருக்கிறது. சீனாவைத் தவிர இந்தோனேசியா, துருக்கி, சவுதி அரேபியா ஆகிய நாடுகளையும் பாகிஸ்தான் அணுகியிருக்கிறது. குறிப்பாக, சீனாவும் துருக்கியும் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை விமர்சனம் செய்துவரும் நாடுகள். அதேசமயம், சீனாவைத் தவிர வேறு நாடுகள் (இதுவரை) எந்தப் பதிலும் சொல்லவில்லை.

சீனாவின் அதிருப்தி

காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டக்கூறு 2019-ல் நீக்கப்பட்ட நடவடிக்கையைப் பாகிஸ்தானைப் போலவே சீனாவும் கண்டித்தது. காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாகத் தொடர்ந்து குற்றம்சாட்டிவரும் பாகிஸ்தான், 370-வது சட்டக்கூறு நீக்கப்பட்ட பின்னர் சீனாவை அணுகி தொடர்ந்து முறையிட்டது ஓரளவு பலன் தந்தது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இதுதொடர்பாகக் கூட்டம் நடத்துமாறு, அதன் நிரந்த உறுப்பினரான சீனாவை பாகிஸ்தான் வலியுறுத்தியது. அதன் பேரில் சீனா அந்தக் கூட்டத்தைக் கூட்டியது. ஆனால், அதற்கு எந்தப் பலனும் கிட்டவில்லை.

உண்மையில், பாகிஸ்தானுடனான உறவு என்பது, சீனாவுக்குப் பொருளாதாரப் பலனுக்கான உறவுதான். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மேற்குப் பகுதி, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ஆகியவற்றின் எல்லைப் பகுதியில், சீனா - பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை (சிபிஈசி) திட்டத்தின் கீழ் நீர் மின்சக்தித் திட்டங்கள் உட்பட பல்வேறு கட்டுமானங்களில் சீனா ஈடுபட்டுவருகிறது. அதன் மூலம், சீனாவைப் பொருளாதார ரீதியில் சார்ந்திருக்கும் நிலையில்தான் பாகிஸ்தான் இருக்கிறது.

ஜாவ் லிஜியான்

இந்நிலையில் ஜி20 மாநாடு விவகாரத்தில் பாகிஸ்தானின் ஆட்சேபத்தைச் சீனா எதிரொலிக்கத் தொடங்கியது. ஜி20 என்பது சர்வதேச அளவில் பொருளாதார மற்றும் நிதிசார் ஒத்துழைப்புக்கான பிரதானமான மைய அமைப்பு என்று சுட்டிக்காட்டிய சீன வெளியுறவுத் துறை, இதில் அரசியலைக் கலக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டது. அதேசமயம், இந்த மாநாட்டில் சீனா கலந்துகொள்ளுமா என்பது குறித்து உறுதியாக எதையும் தெரிவிக்கவில்லை. அது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்று மட்டும் சீன வெளியுறவுத் துறைச் செய்திதொடர்பாளர் ஜாவ் லிஜியான் கூறியிருக்கிறார்.

இது இந்தியாவின் முயற்சி என்பதையும் தாண்டி, மத்திய ஆளுங்கட்சியான பாஜக தனது தனிப்பட்ட வெற்றியாகக் காட்டிக்கொள்வதற்கான முயற்சி என்றும் சீனத் தரப்பிலிருந்து கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. ‘பாஜக ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதால் அதிருப்தியடைந்திருக்கும் முஸ்லிம் நாடுகளைச் சமாதானப்படுத்தும் முயற்சி இது’ என்றும் சீன ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

லடாக்கிலும் அமர்வுகள்

காஷ்மீரில் ஜி20 மாநாடு என்பது சாத்தியமா என்பது குறித்து இந்தியாவிலும் சந்தேகங்கள் எழாமல் இல்லை. குறிப்பாக, பாகிஸ்தானும் சீனாவும் இவ்விஷயத்தில் எதிர்ப்பைக் காட்டியதும் இந்தியா அமைதியாகிவிட்டதாகக் கருதப்பட்டது. ஜூலை 3-ல், இதுதொடர்பாக ட்வீட் செய்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, மோடி அரசைக் கடுமையாகக் கிண்டல் செய்தார். பாகிஸ்தான் மற்றும் சீனாவின் எதிர்ப்பைக் கண்டு இந்தியா பின்வாங்கிவிட்டதாகவும், இம்மாநாடு டெல்லியில் மட்டுமே நடக்கும் என்றும் கூறியிருந்த சுப்பிரமணியன் சுவாமி, 54 இன்ச் எனக் குறிப்பிட்டு மோடியைத் தனிப்பட்ட முறையில் கிண்டல் செய்திருந்தார்.

பிரதமர் மோடியுடன் தலாய் லாமா

ஆனால், லடாக்கிலும் இம்மாநாட்டின் அமர்வுகள் நடத்தப்படும் என அறிவித்ததன் மூலம் இவ்விஷயத்தில் இந்தியா மிகவும் உறுதியாக இருப்பது தெரியவந்தது. கூடவே, தலாய் லாமாவுக்குப் பிறந்தநாள் (ஜூலை 6) வாழ்த்து தெரிவித்ததன் மூலம் திபெத் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு மீது கசப்புடன் இருக்கும் சீனாவுக்கு இந்தியத் தரப்பிலிருந்து பதிலடி கொடுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் ஜூலை 15-ல், ஒன்றியப் பிரதேசமான லடாக்கின் தலைநகர் லே (Leh) செல்கிறார் தலாய் லாமா. 2018-ல் அவர் அங்கு கடைசியாகச் சென்றிருந்தார். லடாக்குக்கு அவர் செல்லும்போதெல்லாம் சீனா அதற்குக் கடும் எதிர்வினையாற்றும். இந்த முறை சீனாவின் அதிருப்தி அதிகரிக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். அதனால்தான், ஜி20 மாநாட்டின் ஏற்பாடுகள் குறித்து இந்தோனேசியாவின் பாலி நகரில் ஜூலை 7-ல் நடந்த சந்திப்பின்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி அதிருப்திக் குரலில் பேசினார்.

இனி என்ன?

ஜி20 மாநாடு காஷ்மீரில் நடத்தப்பட்டால், காஷ்மீர் விஷயத்தில் ஐநாவில் தீர்மானங்களைக் கொண்டுவருவதற்கான வாய்ப்புகளை இழக்க நேரிடும் என்றும் பாகிஸ்தான் அஞ்சுகிறது. ஜி20 என்பது பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட அமைப்பு. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையும் பாகிஸ்தானின் பொருளாதாரச் சூழலையும் ஒப்பிடவே முடியாது. தவிர, சமீபகாலமாகக் கடும் பொருளாதாரச் சிக்கலை பாகிஸ்தான் எதிர்கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில், இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் பக்கம் சாய்வதற்கு எந்த நாடும் முன்வராது. எனினும், பொருளாதார பலம் வாய்ந்த சீனாவின் கருத்து முக்கியமாகக் கருதப்படும். அப்படியே பார்த்தாலும் பிற நாடுகள் இந்த மாநாட்டைப் புறக்கணிக்கும் முடிவை எடுக்காது என்றே கருதப்படுகிறது.

இதுபோன்ற சர்வதேச மாநாடுகள் நடைபெறும் பிரதேசங்களில், சுற்றுலா வளர்ச்சி, உள்ளூர்க் கலாச்சாரம் தொடர்பான வணிகத்தின் வளர்ச்சி என நிறைய சாதகமான அம்சங்கள் உருவாகும் என்பதால், காஷ்மீர் மக்கள் இந்த மாநாட்டை வரவேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடவே, காஷ்மீர் இந்தியாவின் ஓர் அங்கம்தான் என்றும், காஷ்மீரில் பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் மட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது என்றும் உலகுக்கு முன்வைக்க இந்தியாவுக்கு இது ஒரு வாய்ப்பு. எனவே, இவ்விஷயத்தில் மோடி அரசு பின்வாங்காது என்றே நம்பலாம்!

x