கல்லெறிந்து கொல்லும் தண்டனை விதிப்பு: சூடான் பெண்ணுக்கு நீதி கிடைக்குமா?


சூடானைச் சேர்ந்த மரியம் அல்சையது தைய்ராப் எனும் 20 வயது இளம்பெண்ணுக்கு, கல்லெறிந்து கொல்லப்படும் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தகவலை நீதி மற்றும் அமைதி ஆய்வுகளுக்கான ஆப்பிரிக்க மையம் (ஏசிஜேபிஎஸ்) எனும் அமைப்பு வெளியிட்டிருக்கிறது.

உகாண்டாவிலிருந்து இயங்கிவரும் இந்த அமைப்பு, மரியத்துக்கு உரிய நீதி வழங்கப்படவில்லை என்றும், விசாரணையின்போது அவர் தெரிவித்த தகவல்கள் அவருக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் எனும் தகவல் அவருக்குச் சொல்லப்படவில்லை என்றும் தெரிவித்திருக்கிறது. தனக்காக வாதாட வழக்கறிஞரை நியமித்துக்கொள்ளும் உரிமையும் அவருக்கு மறுக்கப்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளில் சூடானில் கல்லெறிந்து கொல்லப்படும் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் முதல் பெண் மரியம். திருமண பந்தத்துக்கு வெளியே முறைகேடான உறவு வைத்திருந்ததாக அவருக்கு இந்தத் தண்டனையை விதித்திருக்கிறது நீதிமன்றம். முன்னதாக, அந்நாட்டின் ஒயிட் நைல் மாநிலக் காவல் துறையினர் கடந்த மாதம் அவரைக் கைதுசெய்தனர். ஷரியத் சட்டங்களைப் பின்பற்றும் நாடான சூடானில் கல்லெறிந்து கொல்லும் தண்டனை பெண்களுக்கே அதிகம் விதிக்கப்படுகிறது. இந்த வழக்கிலும், தவறு செய்த ஆணுக்குத் தண்டனை ஏதும் விதிக்கப்படவில்லை.

சூடானில் 2020-ல் அப்போதைய பிரதமர் அப்தல்லா ஹம்டாக் தலைமையிலான அரசு, சாட்டையால் அடிப்பது உள்ளிட்ட கொடூரமான தண்டனைகளில் சிலவற்றைத் திரும்பப் பெற்றது. எனினும், கல்லெறிந்து கொல்லும் தண்டனை திரும்பப் பெறப்படவில்லை. எனினும், 2020 ஆகஸ்ட் மாதம் சித்ரவதைக்கு எதிரான ஐநா ஒப்பந்தத்துக்கு சூடான் அரசு சம்மதம் தெரிவித்தது. அதன்படி கல்லெறிந்து கொல்லும் தண்டனையும் நீக்கப்பட்டதாகக் கருதப்பட்டது.

ஆனால், சாட்டையடி, கல்லெறிந்து கொல்லுதல் போன்ற தண்டனைகள் இன்னமும் சட்டப் புத்தகத்திலிருந்து முழுமையாக நீக்கப்படவில்லை என்று சூடான் வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். கூடவே, கடந்த ஆண்டு செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் நடந்த ராணுவப் புரட்சிக்குப் பின்னர் இதுபோன்ற தண்டனைகள் மீண்டும் அதிகமாக விதிக்கப்படுகின்றன. இதையடுத்து, அந்நாட்டில் மகளிருக்குக் கிடைத்த குறைந்தபட்ச உரிமைகளும் மறுக்கப்படுவதாகச் சமூகச் செயற்பாட்டாளர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதாக மரியம் தெரிவித்திருக்கிறார். இதுபோன்ற வழக்குகளில் பெரும்பாலும் தண்டனையை உயர் நீதிமன்றம் ரத்துசெய்துவிடும் என்பதால் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் மரியம். 2013-ல் சூடானின் தெற்கு கோர்டோஃபான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு, இதே தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், உயர் நீதிமன்றம் தண்டனையை ரத்துசெய்தது குறிப்பிடத்தக்கது.

x