ஜூலை 13-ல் அதிகாரபூர்வமாக ராஜினாமா: எங்கு இருக்கிறார் இலங்கை அதிபர்?


இலங்கையில் உச்சகட்டமாக வெடித்த மக்கள் புரட்சிக்குப் பின்னர் அதிபர் மாளிகையிலிருந்து தப்பிச் சென்ற அதிபர் கோத்தபய ராஜபக்ச, ஜூலை 13-ல் பதவிவிலகுவார் என நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருக்கிறார். அதேசமயம், கோத்தபய தற்போது எங்கு இருக்கிறார் என்பது குறித்து வெவ்வேறு விதமான தகவல்கள் வெளியாகின்றன.

இன்னலுக்குள்ளான இலங்கை

கடந்த பல மாதங்களாக மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் உழன்றுகொண்டிருக்கிறது இலங்கை. சகல அதிகாரத்தையும் தன்னிடம் குவித்துக்கொண்டு அதிபர் கோத்தபய ராஜபக்ச எடுத்த தவறான முடிவுகளின் காரணமாக இந்நிலை ஏற்பட்டதாக மக்கள் கொந்தளித்தனர். உணவு முதல் மருந்து வரை அத்தியாவசியமான பல பொருட்களை இறக்குமதி செய்துவந்த நாடு என்பதால், அந்நியச் செலாவணி கையிருப்பு கரைந்தது, கடன் சுமை போன்றவற்றால் எண்ணற்ற இன்னல்களை இலங்கை சந்தித்துவிட்டது. இத்தனைக்கும் மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டின் அடிப்படையில் ஓரளவு நல்ல இடம் வகித்துவந்த இலங்கை, தவறான ஆட்சி நிர்வாகத்தால் சீரழிக்கப்பட்டது.

இலங்கை அரசு சீனா பக்கம் அதிகம் சாய்ந்தது, பலனளிக்குமா எனத் தெரியாமலேயே விமான நிலையம், துறைமுகம் எனப் பெரிய அளவில் கட்டுமானங்களில் இறங்கியது, அளவில்லாத கடன்களை வாங்கியது, இயற்கை விவசாயம் எனும் பெயரில் விவசாயத்தை அழித்தது என பல தவறுகளை அதிபர் கோத்தபய செய்தார். ஏற்கெனவே, ஈஸ்டர் குண்டுவெடிப்புகளால் சுற்றுலா துறை சுணங்கியிருந்த நிலையில் பெருந்தொற்றுக் கால பாதிப்புகளும் சேர்ந்துகொண்டன. வெளிநாட்டுக் கடன்களை அடைக்க முடியாமல், அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்ததால் இறக்குமதியும் செய்ய முடியாமல் இலங்கை தவித்தது. எரிபொருள் முதல் உணவுப் பொருள் வரை எல்லாவற்றுக்கும் தட்டுப்பாடு நிலவியதால், மக்கள் நீண்ட வரிசையில் காக்க நேர்ந்தது.

மக்கள் எழுச்சி

இத்தனைக்குப் பின்னரும் அமைச்சர் பதவியில் இருந்த ராஜபக்ச குடும்பத்தினர் விலகிய நிலையில், அதிபர் பதவியில் கோத்தபய ராஜபக்சவும், பிரதமர் பதவியில் மகிந்த ராஜபக்சவும் தொடர்ந்தனர். மக்கள் கடும் போராட்டத்தில் இறங்கியதைத் தொடர்ந்து மே 9-ல் பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச விலகினார். முன்னதாக அவரது ஆதரவாளர்கள், அரசுக்கு எதிராக ஜனநாயக முறையில் போராடியவர்கள் மீது நடத்திய தாக்குதல் பெரும் வன்முறைக்கு வித்திட்டது. பிரதமர் பதவி விலகுவதால் மட்டும் பலனில்லை, அரசின் கொள்கைகள் மாற வேண்டும் என்று பேசிவந்த ரணில் விக்ரமசிங்கேவுக்குப் பிரதமர் பொறுப்பு வழங்கப்பட்டபோது அவரால் ஏதேனும் மாற்றம் நிகழும் எனும் நம்பிக்கை துளிர்த்தது. மக்களின் கோபத் தீயிலிருந்து தப்பி திரிகோணமலையின் கடற்படைத் தளத்தில் பதுங்கியிருந்த மகிந்த 9 நாட்கள் கழித்து மே 18-ல் நாடாளுமன்றத்துக்கு வந்தார். அவரது மகன் நமல் ராஜபக்சவும் கூடவே வந்தார்.

அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி சுமந்திரன் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது இன்னமும் கோத்தபயவுக்கான ஆதரவு குறையவில்லை எனும் தோற்றத்தை உருவாக்கியது. கோத்தபயவுக்கு எதிராக ஆங்காங்கே போராட்டங்கள் தொடர்ந்தாலும் புதிய பிரதமர் ரணில் எடுக்கப்போகும் பொருளாதார நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பே அதிகமாக இருந்தது.

மீண்டும் வெடித்த போராட்டம்

எனினும், நிலைமை மேலும் மேலும் மோசமடைந்ததால், மக்கள் போராட்டம் தீவிரமடையத் தொடங்கியது. குறிப்பாக, எரிபொருள் இல்லாமல் வாகனங்களைப் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட மக்கள் கோபத்தின் உச்சிக்குச் சென்றனர். தலைநகர் கொழும்புவில் ஏற்கெனவே மக்கள் முகாமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்ற முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், மீண்டும் மக்கள் போராட்டம் உச்சமடையும் என்பதை உணர்ந்த கோத்தபய அரசு, வெள்ளிக்கிழமை இரவு காவல் துறை சார்பில் ஊரடங்கு பிறப்பித்தது. அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்க மறுத்த நிலையிலும் ஊரடங்கு கட்டாயமாக அமல்படுத்தப்பட்டது. வீட்டைவிட்டு மக்கள் வெளியேறக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது. எனினும், எதிர்க்கட்சிகள், வழக்கறிஞர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் இதைக் கடுமையாக எதிர்த்தனர்.

சனிக்கிழமை, கொழும்புவிலும், அதன் புறநகர்ப் பகுதிகளிலிருந்தும், பிற ஊர்களிலிருந்தும் மக்கள் திரண்டு அதிபர் மாளிகையை நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர். மிகச் சிலரே எரிபொருள் நிரப்பிக்கொண்டு சொந்த வாகனங்களில் சென்றனர். பலர் பேருந்துகள், ரயில்களில் கொழும்பு சென்றனர். புறநகர்ப் பகுதிகளில் வசித்த பலர் கடும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் 20 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்றனர். கிடைத்த வேன்களில் தொற்றிக்கொண்டு அதிபருக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியபடி முன்னேறினர்.

மதியம் போலீஸார் கண்ணீர் புகைகுண்டு வீசி, தண்ணீர் பீய்ச்சியடித்து விரட்ட முயன்றதையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மக்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். அங்குள்ள நாற்காலிகளில் அமர்ந்து, படுக்கைகளில் படுத்து சாமானிய மக்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின. அருகில் உள்ள தலைமைச்செயலகத்துக்குள்ளும் மக்கள் புகுந்தனர். பிரதமர் இல்லமான அலரி மாளிகையும் முற்றுகையிடப்பட்டது. அதிபரின் வீடும் முற்றுகையிடப்பட்டது.

ரணில் விக்கிரமசிங்கேயின் சொந்த வீடு போராட்டக்காரர்களால் தீவைத்து எரிக்கப்பட்டது. அந்த வீட்டில் ரணிலோ அவரது குடும்பத்தினரோ இல்லை என்பதால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.

மூன்று மாதங்களாக மக்கள் உக்கிரமாகப் போராடியும், இலங்கையின் பொருளாதாரத்தை மீட்க அதிபரும் அரசும் குறிப்பிடத்தக்க நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்றும் வேறு வழியில்லாமல் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருப்பதாகவும் அதில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

பிரதமர் ராஜினாமா

நேற்று, ஆளுங்கட்சியான இலங்கை பொதுசன முன்னணியின் தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டம் நடந்தது. முன்னதாக அந்தக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டாலும் அதை ஏற்றுக்கொள்வதாக கோத்தபய தெரிவித்திருந்தார். இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து அதிபர், பிரதமர் இருவரும் பதவிவிலக வேண்டும் எனக் கட்சித் தலைவர்கள் கோருவதாக கோத்தபயவிடம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

முன்னதாக, பதவி விலகி அனைத்துக் கட்சி அரசை உருவாக்கத் தயார் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே நேற்று தெரிவித்தார். எனினும், அவர் பதவிவிலகுவதாக நேற்று இரவு வரை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில், நேற்று தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அமைதியான முறையில் ஆட்சி அதிகாரம் கைமாறுவதை உறுதிசெய்யும் வகையில் ஜூலை 13-ம் தேதி கோத்தபய அதிபர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வார் என அறிவித்தார்.

எங்கு இருக்கிறார் கோத்தபய?

முன்னெச்சரிக்கையாக வெள்ளிக்கிழமை இரவே அதிபர் மாளிகையிலிருந்து கோத்தபய வெளியேறியதாக இலங்கை ராணுவ வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. அவர் இலங்கையிலேயே ராணுவப் பாதுகாப்புடன் தங்கியிருப்பதாக உயரதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். எனினும், மக்கள் முற்றுகையிடுவதற்குச் சில மணி நேரத்துக்கு முன்பு அவர் கடற்படையினரின் உதவியுடன் வெளியேறியதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

x