திரும்பப் பெறப்படுகிறார் இந்தியாவுக்கான உக்ரைன் தூதர்: பின்னணி என்ன?


இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் போலிகா

இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் போலிகா பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இதற்கான உத்தரவை உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி நேற்று (ஜூலை 9) பிறப்பித்தார். நீண்டகாலம் இந்தியாவில் பணியாற்றியிருப்பதால், தான் திரும்பப் பெறப்படுவது எதிர்பார்க்கப்பட்டதுதான் என இகோர் போலிகா விளக்கமளித்திருக்கிறார். “எந்த ஒரு நாட்டின் தூதராகவும் ஏழு ஆண்டுகள் பணிபுரிந்த பின்னர் நாடு திரும்புவது இயல்பான விஷயம்தான். அலுவலக ரீதியான நடைமுறைகள் முடிவடைந்ததும் நான் உக்ரைன் திரும்பவிருக்கிறேன்” என்று ‘தி இந்து’ ஆங்கில நாளிதழிடம் அவர் தெரிவித்திருக்கிறார்.

யார் இந்த இகோர் போலிகா?

கிழக்கு ஐரோப்பாவுடனான இந்தியாவின் உறவுகள் குறித்த ஆழ்ந்த அனுபவமும் அறிவும் கொண்டவர் இகோர் போலிகா. சோவியத் ஒன்றியத்தின் ஓர் அங்கமாக உக்ரைன் இருந்த காலத்திலிருந்து தூதரகப் பணிகளில் பணியாற்றிவருகிறார். 1989-ல் சோவியத் ஒன்றியத்தின் சார்பில் இந்தியத் தூதரக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பல ஆண்டுகளுக்குப் பின்னர், 2014-ல் இந்தியாவுக்கான உக்ரைன் தூதராக அவர் நியமிக்கப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் உக்ரைனின் க்ரைமியா பகுதியை ஊடுருவி அதை ஆக்கிரமித்தது ரஷ்யா.

இந்தியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான ராணுவம், தொழில் துறை, வேளாண்மை ஆகியவற்றுடன், இரு நாடுகளின் மக்களுக்கு இடையிலான உறவை வளர்ப்பதிலும் முக்கியப் பங்காற்றியவர் இகோர் போலிகா. 2021-ல் நடந்த கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் பிரதமர் மோடி - அதிபர் ஸெலன்ஸ்கி இடையிலான சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததும் அவர்தான்.

மோடி மீது எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்

உக்ரைன் போர் தொடங்கிய காலத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து வேதனை தெரிவித்தவர் இகோர் போலிகா. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியதும், போரை நிறுத்துமாறு அதிபர் புதினிடம் பிரதமர் மோடி பேச வேண்டும் என வலியுறுத்தியதன் மூலம் பெரும் கவனம் ஈர்த்தவர் அவர்.

உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்யாவிடம் இந்தியா குரல் எழுப்பும் என எதிர்பார்த்த அவர், இவ்விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கும் எனத் தெரிவித்துட்டதால் கடும் ஏமாற்றமடைந்ததாகப் பகிரங்கமாகத் தெரிவித்தார். முன்னதாக பிரதமர் மோடியைப் புகழ்ந்துரைத்து, வலிமையான உலகத் தலைவராக இந்தியா இருப்பதாகவும் கூறிய அவர், இந்திய மக்களின் உதவிக்காக மன்றாடுகிறோம் என்றும் வேண்டுகோள் விடுத்தார். “இந்த நெருக்கடியான சூழலில், இந்திய அரசிடம் இருந்து சாதகமான அணுகுமுறையை எதிர்பார்க்கிறோம். இது உண்மைக்கான தருணம். விதியின் தருணம். நாங்கள் காத்திருக்கிறோம். இந்திய மக்களின் உதவிக்காக மன்றாடுகிறோம்” என்று உருக்கமாகக் கூறினார்.

ரஷ்யாவுடன் சிறப்பான, சலுகையுடன் கூடிய, வியூக அடிப்படையிலான உறவைப் பேணும் இந்தியா, அதை இன்னும் துடிப்புடன் பயன்படுத்தி ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என உக்ரைன் எதிர்பார்ப்பதாகக் கூறிய அவர், “பிரதமர் நரேந்திர மோடி உலகின் சக்திவாய்ந்த, மதிப்புமிக்க தலைவர்களுள் ஒருவர். உலகின் வேறு தலைவர்களின் வார்த்தைகளுக்குப் புதின் செவிமடுப்பாரா எனத் தெரியவில்லை. ஆனால், மோடியின் ஆகிருதியைப் பார்க்கும்போது, இவ்விஷயத்தில் அவர் வலுவான குரல் எழுப்பினால், குறைந்தபட்சம் புதின் அதுகுறித்து சிந்திப்பார் எனும் நம்பிக்கை எனக்குள் ஏற்படுகிறது” என்றும் குறிப்பிட்டார்.

“இது எங்கள் பாதுகாப்பு குறித்தது மட்டுமல்ல, உங்கள் சொந்தக் குடிமக்களின் பாதுகாப்பு குறித்ததும்தான்” என்று இந்தியாவின் நிலையையும் சூசகமாகச் சுட்டிக்காட்டிய அவர், பின்னர் உக்ரைனிலிருந்து உக்ரைனின் கார்கிவ், கீவ், லிவிவ் நகரங்களிலிருந்து இந்திய மருத்துவ மாணவர்கள் நாடு திரும்புவது தொடர்பான நடவடிக்கைகளில் முனைப்புடன் பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.

x