‘ஒரு படுகொலையால் ஜனநாயகத்தைத் தடுக்க முடியாது’ - ஜப்பானில் திட்டமிட்டபடி நாளை தேர்தல்!


ஜப்பானின் நரா நகரில் நேற்று (ஜூலை 8) நாடாளுமன்ற மேலவைத் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்ட அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே, துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உலக நாடுகளை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

இதையடுத்து, தேர்தல் பிரச்சாரத்தை உடனடியாக ஒத்திவைத்த அவரது தாராளவாத ஜனநாயகக் கட்சி (எல்டிபி), இன்று மீண்டும் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டது. பிற கட்சிகளும் பிரச்சாரத்தைத் தொடர்கின்றன. ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தபடி, நாளை (ஜூலை 10) தேர்தல் நடத்தப்படுகிறது. ஜப்பானின் மிக முக்கிய அரசியல் தலைவர் படுகொலை செய்யப்பட்ட நிலையிலும், தேர்தல் தள்ளிவைக்கப்படாமல் திட்டமிட்ட தேதியில் நடத்தப்படுவது கவனம் ஈர்த்திருக்கிறது.

ஜப்பானின் மேற்குப் பகுதியில் உள்ள நரா நகரில் நேற்று காலை 11.30 மணி அளவில் யமாட்டோ சைடாய்ஜி ரயில் நிலையத்தின் முன்னே சாலையில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஷின்ஸோ அபே கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அந்நகரைச் சேர்ந்த டெட்ஸுயா யமாகாமி (41) அவரை நோக்கி இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டார். இதில் ஷின்ஸோ அபேயின் நெஞ்சுப் பகுதியின் இடதுபாகத்திலும், கழுத்துப் பகுதியிலும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, நரா மாவட்டத்தில் உள்ள கஷிஹரா நகரில் உள்ள நரா மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் அவர் கொண்டுசெல்லப்பட்டார். எனினும் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

மேலவைத் தேர்தலில் தாராளவாத ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய யமகாட்டா மாவட்டத்துக்குச் சென்றிருந்த பிரதமர் ஃபுமியோ கிஷிடா, தகவல் அறிந்ததும் உடனடியாக டோக்கியோவுக்கு விரைந்தார். ஜப்பானின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சர்களும் பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு உடனடியாக டோக்கியோ விரைந்தனர்.

அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி

ஒப்பீட்டளவில் பாதுகாப்பான நாடான ஜப்பானில், ஒரு முன்னாள் பிரதமர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அந்நாட்டின் அரசியல் தலைவர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது குறித்து மறுபரிசீலனை செய்யும் அளவுக்கு அரசியல் தலைவர்களை யோசிக்கவும் வைத்திருக்கிறது. சொல்லப்போனால், ஷின்ஸோ அபேக்குச் சமீபத்தில் அச்சுறுத்தல்களோ மிரட்டல்களோ வரவில்லை. தனது கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் கெய் சடோவுக்காகப் பிரச்சாரம் செய்யவே ஷின்ஸோ நராவுக்குச் சென்றிருந்தார். இந்நிலையில், அவருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாட்டில் குறைபாடு இருந்ததாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. எனினும், நரா மாவட்டக் காவல் துறை அதை மறுத்திருக்கிறது.

ஜப்பானில் துப்பாக்கி வைத்துக்கொள்ள கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. துப்பாக்கி வாங்குவது என்பது மிகவும் கடினமான காரியம். இதனால் துப்பாக்கிச்சூடு தொடர்பான குற்றங்கள் மிகக் குறைவு. ஷின்ஸோ அபே மீது துப்பாக்கிச்சூடு நடத்திய டெட்ஸுயா யமாகாமி, சொந்தமாகத் தயாரித்த ஆயுதத்தைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதலை நடத்தியது விசாரணையில் தெரியவந்தது. அவர் ஜப்பானிய கடற்படையின் தற்காப்புப் படையில் பணியாற்றி 2005-ல் அதிலிருந்து விலகியவர். பின்னர் கன்ஸாய் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்தார்.

கொலைக்குக் காரணம் என்ன?

அவரிடம் நடத்திய விசாரணையில், புதிரான தகவல்கள் தெரியவந்திருக்கின்றன. மதக் குழு ஒன்றின் மீது அதிருப்தியடைந்திருந்ததாக அவர் வாக்குமூலம் அளித்திருக்கிறார். தனது தாய் அந்தக் குழுவுக்கு நன்கொடை வழங்கியதாகவும், அதனால் திவால் நிலைக்குச் சென்றதாகவும் கூறிய டெட்ஸுயா யமாகாமி முதலில் அந்தக் குழுவின் தலைவரைத்தான் படுகொலை செய்ய திட்டமிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். அந்தக் குழுவை ஆதரித்தார் எனும் காரணத்துக்காக ஷின்ஸோ அபேயைச் சுட்டுக்கொன்றதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

முதலில் ஒரு குறிப்பிட்ட அமைப்பின் மீது தனக்கு ஆத்திரம் இருந்ததாகவும், அந்த அமைப்பில் ஷின்ஸோ அபே அங்கம் வகித்ததாகவும் டெட்ஸுயா யமாகாமி கூறியிருந்தார். எனினும், அது குறித்த முழுமையான தகவல்கள் வெளியிடப்படவில்லை. அப்படி ஒரு அமைப்பு இருக்கிறதா என்பதும் உறுதிசெய்யப்படவில்லை. யமாகாமி தவிர வேறு யாருக்கும் இந்தப் படுகொலையில் தொடர்பு இருக்கிறதா எனும் கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.

ஜனநாயகத்தைத் தடுக்க முடியாது

நாளை தேர்தல் நடத்தப்படுவது உறுதியானதும், தாராளவாத ஜனநாயகக் கட்சியும், பிற கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை இன்று மீண்டும் தொடங்கிவிட்டன. ஒரு படுகொலையால், ஜனநாயகத்தின் செயல்பாட்டைத் தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதை நிரூபிக்கவே தேர்தலில் தொடர்ந்து பங்கேற்பதாக ஜப்பான் அரசியல் தலைவர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஷின்ஸோ அபே தலைவராகப் பதவி வகித்த அக்கட்சியும் கூட்டணிக் கட்சியான கொமெய்ட்டோ கட்சியும் அதிக இடங்களில் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் தாராளவாத ஜனநாயகக் கட்சி (எல்டிபி) தான் ஜப்பானை நீண்டகாலமாக ஆட்சி செய்துவருகிறது. இடையில் நான்கு ஆண்டுகள் மட்டும்தான் அக்கட்சி அல்லாத ஆட்சியை ஜப்பான் சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

x