இலங்கை பிரதமர் பதவியிலிருந்து விலக தயார் என ரணில் விக்கிரமசிங்க அனைத்துக்கட்சி கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் இல்லத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அதிபர் கோத்தபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பதவி விலக வேண்டும் என அனைத்துக்கட்சியினரும் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். இதனை ஏற்ற ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து விலகி அனைத்துக் கட்சி அரசை அமைக்க வழிவகை செய்ய தயார் என தெரிவித்துள்ளார்.
இலங்கை முழுவதும் பல்வேறு நகரங்களும் போர்க்களமாக மாறியுள்ளதால் அனைத்து பகுதிகளிலும் பதற்றம் நீடிக்கிறது. கோத்தபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என கோரிக்கை வைக்கும் போராட்டக்காரர்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகவும் போராடத்தொடங்கியுள்ளனர். ரணில் பதவி விலக வேண்டும் என கோரிக்கை வைக்கும் போராட்டக்காரர்கள் அவரது இல்லத்தையும் முற்றுகையிட்டுள்ளனர்.
இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணித்துள்ள இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, “இலங்கை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அதிபர் கோத்தபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவரும் பதவி விலக வேண்டும்”என வேண்டுகோள் விடுத்தார்.
இன்று காலையில் இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், தடுப்புகளை அடித்து நொறுக்கி உள்ளே நுழைந்தனர். இதனால் அதிகாரப்பூர்வ மாளிகையை விட்டு தப்பியோடிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பத்திரமுல்லையில் உள்ள ராணுவ தளத்தில் பதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கப்பல் மூலமாக இவர் குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தடுப்புகளை அடித்து நொறுக்கி உள்ளே நுழைந்தனர். தற்போது இலங்கை அதிபர் மாளிகை போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது, ராணுவத்தினரும் போராட்டக்காரர்களுடன் கைகோர்த்துள்ளனர்.