உக்ரைன் - ரஷ்யாவுக்கான போர் நீடித்து வரும் நிலையில், ஏற்கனவே கரோனா தொற்றுநோய் பாதிப்பால் கடும் விளைவுகளை சந்தித்துள்ள நாடுகள் இலங்கையைப் போன்ற அதே பொருளாதார நெருக்கடியைக் காணும் அபாயம் இருப்பதாக ஐ.நா எச்சரித்துள்ளது.
உலகில் பல நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடி, பணவீக்க உயர்வின் பாதிப்புகள் குறித்து கவலை தெரிவித்துள்ள ஐநா வளர்ச்சித் திட்டத்தின் (UNDP) நிர்வாகி அச்சிம் ஸ்டெயினர், "இலங்கையில் தற்போது நடந்துவரும் சோகமான நிகழ்வுகளை நாம் காண்கிறோம், இந்த நெருக்கடியை எவ்வாறு கையாள்வது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இது அனைத்து நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்," என்று கூறினார்.
கடனில் சிக்கித் தவிக்கும் நாடுகளுக்கு உதவ தீவிர நிதி நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த சர்வதேச சமூகத்திற்கு அறிவுறுத்திய அவர், “ இலங்கை போன்ற பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் அந்த நாட்டால் அதன் கடனை செலுத்தவோ அல்லது மக்களுக்கு சேவை செய்யவோ முடியாது, அதுபோல நாட்டின் பொருளாதாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் அடிப்படை பொருட்களான பெட்ரோல், டீசல்,மருந்துகள் என எதனையும் அந்நாட்டால் இறக்குமதி செய்ய முடியாது" என்று தெரிவித்தார்
ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் புதிய தரவுகளின்படி, 2021-ம் ஆண்டில் உலகளவில் பட்டினியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 828 மில்லியனாக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டில் மட்டும் சுமார் 46 மில்லியன் பேரும், கரோனா தொற்றுநோய் பரவத்தொடங்கியதிலிருந்து 150 மில்லியன் பேரும் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா எச்சரித்துள்ளது. .
அதுபோல வியாழனன்று வெளியிடப்பட்ட ஐ.நா. வளர்ச்சித் திட்டத்தின் (UNDP) அறிக்கையில், பணவீக்க உயர்வு காரணமாக மார்ச் 2022 முதல் மூன்று மாதங்களில் மட்டும் வளரும் நாடுகளில் ஏழைகளின் எண்ணிக்கை 71 மில்லியனாக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்ந்து வரும் பணவீக்கத்திற்கு எதிராக வட்டி விகிதங்கள் உயரும் போது, மேலும் மந்தநிலை தூண்டப்பட்டு நாடுகளின் பொருளாதார நிலை கூடுதலாக மோசமாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.