எல்லையில் அமைதியைஉறுதி செய்வது அவசியம்: சீன அமைச்சரிடம் ஜெய்சங்கர் வலியுறுத்தல்


புதுடெல்லி: கட்டுப்பாட்டு எல்லை கோட்டுக்கு (எல்ஏசி) மதிப்பளிப்பது மற்றும் இந்திய-சீன எல்லையில் அமைதியை உறுதி செய்வது அவசியம்என்று சீன வெளியுறவு அமைச்சரிடம் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.

கிழக்கு லடாக்கில் இந்தியா – சீனா இடையிலான எல்லைப் பிரச்சினையை தீர்க்க இரு நாடுகளும் பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டுக்கு இடையில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி-யை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று சந்தித்துப் பேசினார். கிழக்கு லடாக் எல்லைப் பிரச்சினை குறித்து இருவரும் விவாதித்தனர். இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருப்பதாவது:

ராஜதந்திர, ராணுவ வழிகள்: அஸ்தானாவில் இன்று காலை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விவகாரக் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங் யி-யை சந்தித்தேன். அப்போது, எல்லைப் பகுதிகளில் எஞ்சியுள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த நோக்கத்திற்காக ராஜதந்திர மற்றும் ராணுவ வழிகள் மூலம் தற்போதைய முயற்சிகளை இரட்டிப்பாக்க ஒப்புக்கொள்ளப்பட்டது.

கட்டுப்பாட்டு எல்லை கோட்டுக்கு (எல்ஏசி) மதிப்பளிப்பது மற்றும் இந்திய-சீன எல்லையில் அமைதியை உறுதி செய்வது அவசியம் என வலியுறுத்தினேன்.

பரஸ்பர மரியாதை, பரஸ்பர உணர்வு மற்றும் பரஸ்பர நலன் ஆகிய மூன்று அம்சங்கள், இந்தியா- சீனா இடையிலான இருதரப்பு உறவுகளுக்கு வழிகாட்டியாக இருக்கும். இவ்வாறு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

கடந்த 2020-ம் ஆண்டில் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து 2022-ல் அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியில் மற்றொரு மோதல் ஏற்பட்டது.

எல்லைப் பகுதிகளில் அமைதி நிலவாத வரை சீனாவுடனான உறவு இயல்பாக இருக்க சாத்தியமில்லை என்று இந்தியா கூறி வருகிறது

x