பிரேசில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் தொடர்ந்து ஆறாவது நாளாக கனமழை பெய்துவருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 106 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 10 பேரை காணவில்லை என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான பெர்னாம்புகோவின் ஆளுநர் பாலோ கமாரா இது குறித்துப் பேசுகையில், "மண் சரிவு மற்றும் பெரும் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது. காணாமல் போன அனைவரையும் கண்டுபிடிக்கும் வரை மீட்புப்பணி தொடரும் " என்று கூறினார். பெர்னாம்புகோ மாநிலத்தில் இனி வரும் நாட்களிலும் கனமழை மற்றும் வெள்ளம் ஏற்படுவதற்கான மிக அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்ஸனாரோ விமானம் மூலமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று பார்வையிட்டார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவி மற்றும் நிவாரணப் பொருட்களை அனுப்புவதாகவும் அவர் உறுதியளித்தார்.
பிரேசிலைத் துரத்தும் கனமழை சோகம்
பிரேசில் நாட்டில் கடந்த ஐந்து மாதங்களில் ஏற்படும் நான்காவது பெரிய வெள்ள நிகழ்வு இதுவாகும். இந்த ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் வடகிழக்கு பிரேசிலின் பஹியா மாநிலத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில் பெய்த கனமழையில் சிக்கி தென்கிழக்கு மாநிலமான சாவ் பாலோவில் 18 பேர் உயிரிழந்தனர். பின்னர் பிப்ரவரி மாதத்தில் ரியோ டி ஜெனிரோ மாநிலத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 230 பேர் உயிரிழந்தனர்.