'இலங்கை மற்றொரு லிபியாவாக மாற அனுமதிக்க முடியாது'!: ராஜபக்சவிற்கு ஆதரவு தெரிவிக்கும் சுப்பிரமணியன் சுவாமி


"இலங்கை மற்றொரு லிபியாவாக மாறுவதற்கு அனுமதிக்க முடியாது" என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அனைத்துப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஏராளமானோர் வேலை இழந்து தவிக்கின்றனர். இலங்கையின் பொருளாதார பேரழிவுக்குக் காரணமான மகிந்த ராஜபக்ச, கோத்தபய ராஜபக்ச பதவி விலக வலியுறுத்தி கடந்த ஒரு மாதமாக மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன் தனது ஜனாதிபதி பதவியை மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் கொழும்புவில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில் மகிந்தாவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதனால் வன்முறை வெடித்தது. மகிந்த ராஜபக்சவின் வீடு, வாகனங்கள், ஆளுங்கட்சி எம்.பிக்கள் வீடு, கடைகள் போராட்டக்கார்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதன் காரணமாக ராஜபக்ச குடும்பத்தினர் வெளிநாட்டிற்கு தப்பியோடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில்,பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி இன்று ட்விட்டரில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். அதில், " பிரதமரின் இல்லம்கூட எரிக்கப்படுகின்றது என்றால், அதற்குக் காரணமானவர்கள் இரக்கம் காண்பிக்கப்படுவதற்குத் தகுதியானவர்கள் அல்ல. எமது அயல்நாடு மற்றுமொரு லிபியாவாக மாறுவதற்கு அனுமதிக்க முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.

இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பி வைத்து அரசியல் அமைப்பின் சுயாதீனத்தன்மையை உறுதி செய்ய வேண்டுமென சுப்ரமணியன்சுவாமி அண்மையில் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

x