பெருந்தொற்றுக்குள்ளான பில் கேட்ஸ்!


மைக்ரோசாஃப்ட் நிறுவனரும், உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான பில் கேட்ஸுக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக நேற்று ட்வீட் செய்த அவர், தனக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகவும் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். தனது அறக்கட்டளையின் ஊழியர்களுடனான கூட்டம் ஒன்றில் பங்கேற்கவிருந்த அவர், காணொலிச் சந்திப்பின்மூலம் அதில் கலந்துகொள்வதாகத் தெரிவித்திருக்கிறார்.

பில்கேட்ஸ் ஏற்கெனவே கரோனா தடுப்பூசிகளையும், பூஸ்டர் டோஸையும் செலுத்திக்கொண்டவர். அதேசமயம், அவர் கரோனா தொற்றுக்குள்ளாவது இது முதல் முறையா என உறுதியாகத் தெரியவில்லை.

கரோனா பெருந்தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தொடர்ந்து முனைப்புடன் செயல்பட்டு வருபவர் பில் கேட்ஸ். கடந்த வாரம்கூட, ‘அடுத்த பெருந்தொற்றை எப்படித் தடுப்பது?’ ( How to Prevent the Next Pandemic) எனும் தலைப்பில் ஒரு புத்தகத்தை அவர் வெளியிட்டார். அதில் பெருந்தொற்றைத் தவிர்ப்பதற்கு உலக நாடுகள் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுவது, சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் எப்படி ஒழிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அதில் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

கரோனா பெருந்தொற்றை உலக அளவிலான சுகாதார அமைப்புகள் எதிர்கொள்ளும் விதம் குறித்தும், தடுப்பூசிகள் விநியோகிக்கப்படுவதில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் பில் கேட்ஸ் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்துவருகிறார். கூடவே, கரோனா பரிசோதனை, சிகிச்சை, தடுப்பூசிகள் எனப் பெருந்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக அவரது ‘பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ்’ அறக்கட்டளையின் சார்பில் பல மில்லியன் டாலர்கள் நன்கொடையாக வழங்கப்பட்டிருக்கின்றன.

கடந்த வருடம், தனது மெலிண்டாவை பில் கேட்ஸ் விவாகரத்து செய்துவிட்டார். எனினும், அறக்கட்டளையின் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வதாக இருவரும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

x