ட்ரான்ஸ்னிஸ்ட்ரியா தாக்குதல்கள்: திசைதிரும்புகிறதா உக்ரைன் போர்?


மாதிரிப் படம்

உக்ரைன் போர் தொடங்கியதுமே, அருகில் உள்ள சில ஐரோப்பிய நாடுகள் ஒரு முக்கியமான வேலையில் இறங்கின. அண்டை நாடுகளில் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்ட பிரதேசங்களில் ஏதேனும் சலனங்கள் தென்படுகின்றனவா என்பதைக் கவனிப்பதுதான் அந்த வேலை. எதிர்பார்த்தது போலவே, உக்ரைனின் அண்டை நாடான மால்டோவாவில் உள்ள ட்ரான்ஸ்னிஸ்ட்ரியா பிரதேசத்தில் சமீபத்தில் நிகழ்ந்திருக்கும் குண்டுவெடிப்புகள் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

கூடவே, உக்ரைனிலிருந்து ட்ரோன்கள் பறந்துவந்ததாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் ட்ரான்ஸ்னிஸ்ட்ரியா குற்றம்சாட்டியிருக்கிறது. இதைப் பயன்படுத்தி உக்ரைனைத் தாண்டி ஐரோப்பிய நாடுகள் மீதும் ரஷ்யாவின் தாக்குதல் விரிவடையுமா எனும் கேள்வியும் எழுந்திருக்கிறது. என்ன நடக்கிறது ட்ரான்ஸ்னிஸ்ட்ரியாவில்?

மர்ம நபர்களின் தாக்குதல்

ஏப்ரல் 25 மற்றும் 27-ல் ட்ரான்ஸ்னிஸ்ட்ரியாவின் தலைநகரான திராஸ்போலில் நடந்த குண்டுவெடிப்புகள் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தன. பாதுகாப்புத் துறை அமைச்சகக் கட்டிடம், ராணுவ முகாம், ரஷ்ய மொழிச் செய்திகளை வெளியிட்டுவந்த வானொலி நிலையத்தின் கோபுரம் உள்ளிட்டவை தொடர் குண்டுவெடிப்புகளில் சேதமடைந்தன. பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற இடங்களில் குண்டுவெடிக்கும் அபாயம் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. எனினும், உயிரிழப்புகள் ஏற்பட்டனவா என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

இந்நிலையில், உண்மையாகவே குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தனவா, அப்படியென்றால் இதையெல்லாம் செய்தது யார், அவர்களின் நோக்கம் என்ன என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. வரலாற்று ரீதியில் ஏகப்பட்ட சர்ச்சைகளைக் கொண்ட அந்தப் பிராந்தியத்தின் சமீபத்திய நிகழ்வுகள் பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்திருக்கின்றன.

ட்ரான்ஸ்னிஸ்ட்ரியா தாக்குதல்

ஐரோப்பாவின் ஏழை நாடுகளில் ஒன்றான மால்டோவா ஏற்கெனவே பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டிருக்கும் தேசம். 1991-ல் சோவியத் ஒன்றியம் சிதறுண்டபோது, மால்டோவா சுதந்திர தேசமானது. 1992-ல் மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்த மால்டோவா அரசுக்கு எதிராக ட்ரான்ஸ்னிஸ்ட்ரியா பிரிவினைவாதிகள் ஆயுதம் ஏந்திப் போராடினர். இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து அவர்களுக்கு ஆதரவாக ரஷ்ய ராணுவம் களமிறங்கியது. இன்றும் அமைதிப்படை எனும் பெயரில் 1,500 ரஷ்ய ராணுவ வீரர்கள் அங்கு நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

சர்ச்சைக்குரிய பிராந்தியம்

உக்ரைனின் தென்மேற்கு திசையில், மால்டோவா நாட்டில் ட்னீஸ்டர் நதி அருகே அமைந்திருக்கும் பிரதேசம் ட்ரான்ஸ்னிஸ்ட்ரியா. 4.65 லட்சம் மக்கள்தொகை கொண்ட அந்தப் பிரதேசத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் ரஷ்ய மொழி பேசுபவர்கள் (மால்டோவின் மற்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் ரோமானிய மொழி பேசுபவர்கள்). இயல்பாகவே ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட ட்ரான்ஸ்னிஸ்ட்ரியா மக்கள் பிரிவினைவாதிகள் என்றே உக்ரைனாலும் மேற்கத்திய நாடுகளாலும் அழைக்கப்படுகின்றனர். அங்கு வசிப்பவர்களில் பலர் மால்டோவா, உக்ரைன், ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளின் குடியுரிமையையும் பெற்றவர்கள் என்பது இன்னொரு விநோதம்.

ட்ரான்ஸ்னிஸ்ட்ரியா தன்னை ஒரு சுதந்திர தேசமாகவே சொல்லிவருகிறது. தனக்கென தனியாக அரசமைப்புச் சட்டம், தேசிய வங்கி போன்றவற்றைக் கொண்டிருக்கிறது. ‘ப்ரிட்னெஸ்ட்ரோவியன் மால்டோவியன் குடியரசு’ என்றும் தனக்குத்தானே நாமகரணம் சூட்டிக்கொண்டது. எனினும், ஓரிரு குட்டி நாடுகளைத் தவிர பிற நாடுகள் இதுவரை ட்ரான்ஸ்னிஸ்ட்ரியாவின் நிலைப்பாடுகள் எதையும் அங்கீகரிக்கவில்லை.

ரஷ்ய ஆதரவு நிலைப்பாடு கொண்டவர்கள்தான் ஆட்சி நிர்வாகத்தில் இருக்கின்றனர். அதிபர் தேர்தல் முதல் பிராந்தியத் தேர்தல்கள் வரை நடத்தப்பட்டாலும் அங்கு எதிர்க்கட்சிகள் நசுக்கப்படுவதாகவும் தேர்தல்கள் நேர்மையாக நடப்பதில்லை என்றும் புகார்கள் உண்டு. இப்படி ஏகப்பட்ட குழப்படிகள் கொண்ட பிரதேசம் அது. அது கொடுக்கும் குடைச்சல் காரணமாக இதுவரை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடியாமல், ட்ரான்ஸ்னிஸ்ட்ரியர்களை அடக்கவும் முடியாமல் திணறுகிறது மால்டோவா.

ரஷ்யாவுடனான உறவு

இன்றுவரை ரஷ்யா வழங்கும் மானியத்தில்தான் அங்கு ஆட்சி நிர்வாகம், வணிகம், தொழில் துறை, எரிபொருள் விநியோகம் என எல்லாமே நடைபெறுகிறது. விக்டர் குஸான் எனும் தொழிலதிபர் ‘ஷெரிஃப்’ எனும் பெயரில் நடத்திவரும் தொழிற்சாலைகள், பல்பொருள் அங்காடிகள், கியாஸ் நிலையங்கள்தான் அங்கு பிரதானமானவை. எஃப்சி ஷெரிஃப் எனும் பெயரில் இயங்கிவரும் கால்பந்தாட்டக் குழுவும் மிகப் பிரபலமானது. எந்த ஒரு தேசத்தையும் சேராத அணி என ஆச்சரியத்துடன் பார்க்கப்படும் அணி அது.

ரஷ்யாவுடனான இணைப்பு மிக உறுதியானது. தலைநகர் திராஸ்போலில், லெனினின் பிரம்மாண்டமான சிலையை நிறுவியிருக்கிறது. கொடி, கரன்ஸி என எல்லாவற்றிலும் ரஷ்யாவின் சாயல் உண்டு. ஆயுதங்கள் முதல் சிகரெட் வரை பல்வேறு பொருட்களைச் சட்டவிரோதமாக விற்பனை செய்யும் பிராந்தியமாகவே அறியப்பட்டது ட்ரான்ஸ்னிஸ்ட்ரியா.

ரஷ்ய அதிபர் புதின்

இங்கு, 2006-ல் நடத்தப்பட்ட கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்றில், 97.1 சதவீதம் பேர் ரஷ்யாவுடன் இணையவே விருப்பம் தெரிவித்தனர். இந்த வாக்கெடுப்பை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்கவில்லை. ரஷ்யாவும் இதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. 2014-ல் ரஷ்யப் படைகள் க்ரைமியாவைக் கைப்பற்றி தங்கள் வசமாக்கிக்கொண்ட பின்னர், ட்ரான்ஸ்னிஸ்ட்ரியா மீது கவனம் குவிந்தது. க்ரைமியாவைப் போல் ட்ரான்ஸ்னிஸ்ட்ரியாவையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று அங்குள்ள அரசியல் தலைவர்கள் வெளிப்படையாகவே கோரிக்கை விடுத்தனர். அப்போதும் ரஷ்யா அதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. எனினும், தேவைக்கேற்ப ட்ரான்ஸ்னிஸ்ட்ரியாவை ரஷ்யா பயன்படுத்திக்கொள்கிறது.

சோவியத் ஒன்றியத்தில் அங்கம் வகித்த நாடுகளில் வசிக்கும் ரஷ்ய வம்சாவளியினரைப் பாதுகாப்பது தனது கடமை எனச் சொல்லிக்கொள்ளும் புதின், உக்ரைனில் உள்ள டோனெட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய பிரதேசங்களுக்கு அந்த அடிப்படையில்தான் ஆதரவளித்தார். ரஷ்ய மொழி பேசுபவர்கள் அதிகம் வசிக்கும் அந்தப் பிராந்தியங்களைத் தனி நாடுகளாக அங்கீகரித்த பின்னர்தான் உக்ரைன் மீதான தாக்குதலைத் தொடங்கினார். இப்போதும் ட்ரான்ஸ்னிஸ்ட்ரியாவில் நடக்கும் குண்டுவெடிப்புகளைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளவே அவர் முயற்சிக்கிறார். போருக்கு இடையே, உக்ரைனின் தென்மேற்குப் பகுதியைக் கைப்பற்றுவதன் மூலம் நிலம் வழியே ட்ரான்ஸ்னிட்ரியாவுக்கான பாதையை உருவாக்கிக்கொள்வது எளிது என ரஷ்ய ராணுவ அதிகாரி ஒருவர் கடந்த மாதம் தெரிவித்திருந்தார். அப்போதே அதை உக்ரைனும் மால்டோவாவும் கண்டித்தன.

உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி

பரஸ்பரக் குற்றச்சாட்டுகள்

மூன்று பேர் இந்தத் தாக்குதலை நிகழ்த்தியதாக ட்ரான்ஸ்னிஸ்ட்ரியா சொன்னாலும், அவர்கள் யார் என இதுவரை அறிவிக்கப்படவில்லை. ட்ரான்ஸ்னிஸ்ட்ரியா வெடிகுண்டு தாக்குதல்கள் நன்றாகத் திட்டமிடப்பட்டவை என்கிறது உக்ரைன். இது ரஷ்யாவின் வேலைதான் என்றும் உறுதியாகச் சொல்கிறது. மால்டோவாவில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் அடக்குமுறைக்குள்ளாவதாக ரஷ்யா குற்றம்சாட்டிய சில நாட்களிலேயே இந்தக் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தது மேலும் சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.

குறிப்பாக, பாதுகாப்புத் துறை கட்டிடம் மீதான தாக்குதல் நடப்பதற்கு முன்பு ஒரு பாதுகாப்பான பதுங்கு குழி உருவாக்கப்பட்டதாகவும் உக்ரைன் சுட்டிக்காட்டுகிறது. மொத்தத்தில், இந்த குண்டுவெடிப்புகள் மூலம் தங்கள் மீது பழிபோடும் வேலையில் ரஷ்யா இறங்கியிருப்பதாகவே உக்ரைன் குற்றம்சாட்டுகிறது. கூடவே, நீஸ்டர் நதிப் பாலம் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகவும் உக்ரைன் குற்றம்சாட்டியிருக்கிறது. ரயில் பாதையும் சாலையும் கொண்ட அந்தப் பாலத்தைத் தகர்ப்பதன் மூலம், உக்ரைனின் ஒடெஸா பகுதிக்கும் மால்டோவாவுக்கும் இடையிலான வழியைத் துண்டிப்பது ரஷ்யாவின் நோக்கம் என்கிறார்கள் உக்ரைன் அதிகாரிகள்.

இதற்கிடையே ரைப்னிட்ஸா பகுதியில் உள்ள கோல்பாஸ்னா கிராமத்தின் மீது பல ட்ரோன்கள் பறந்துவந்ததாகவும், உக்ரைனின் எல்லையிலிருந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் ட்ரான்ஸ்னிஸ்ட்ரியா குற்றம்சாட்டியிருக்கிறது. ஐரோப்பாவில் அதிக அளவிலான வெடிமருந்துகள் வைக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் கோல்பாஸ்னாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கம் என்ன?

போரில் தங்கள் தரப்புக்கு இழப்புகள் ஏற்பட்டதும், வெவ்வேறு வகையில் வியூகங்களை மாற்றத் திட்டமிட்ட ரஷ்யா, அதன் ஒரு பகுதியாக ட்ரான்ஸ்னிஸ்ட்ரியாவுக்கும் படைப்பிரிவுகளை அனுப்பிவைத்ததாக உக்ரைன் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். போரின் போக்கைப் பொறுத்து அந்தப் படைகளைப் பயன்படுத்திக்கொள்வது ரஷ்யாவின் திட்டம் என்கிறார்கள் அவர்கள். ஏற்கெனவே கிழக்குப் பகுதியில் உள்ள டோன்பாஸ் பிராந்தியம், க்ரைமியா ஆகியவற்றைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரஷ்யா, தற்போது ட்ரான்ஸ்னிஸ்ட்ரியாவை வைத்து புதிய கணக்கு போடுவதாகவே உக்ரைனும் மேற்கத்திய நாடுகளும் சந்தேகிக்கின்றன.

மறுபுறம், அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் ஆஸ்டின் லாய்டு, வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் ஆகியோர் உக்ரைனுக்குச் சென்று வந்த நிலையில் இந்தத் தாக்குதல் நடந்ததைச் சுட்டிக்காட்டியிருக்கும் ரஷ்யா, மேற்கத்திய நாடுகள் மால்டோவாவை அழிக்க திட்டமிடுவதாகப் புதிய குற்றச்சாட்டையும் முன்வைத்திருக்கிறது.

அதேசமயம், இந்த முயற்சிகள் மூலம் ராணுவ ரீதியாக ரஷ்யாவுக்குக் கிடைக்கப்போகும் லாபம் என்ன என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. இதுதொடர்பாக, சர்வதேசப் பார்வையாளர்கள் வெவ்வேறு வாதங்களை முன்வைத்துவருகிறார்கள். மேற்குப் பகுதியிலிருந்து உக்ரைனைத் தாக்கலாம் என்பதைத் தாண்டி, வேறு எந்த வகையில் இதை ரஷ்யா பயன்படுத்திக்கொள்ள முடியும் எனத் தெரியவில்லை என்கிறார்கள் சிலர்.

மால்டோவா அதிபர் மாயா சாந்து

துணிந்துவிட்ட மால்டோவா

ஆரம்பத்தில், இந்தச் சம்பவங்களால் மால்டோவா அதிபர் மாயா சாந்து மிகுந்த கவலையடைந்தார். அமைதிக்கு ஊறு விளைவிக்கும் நடவடிக்கைகளில் மால்டோவா வேண்டுமென்றே இழுக்கப்படுவதாகவும் அச்சம் தெரிவித்தார். இதன் மூலம் உருவாகும் பதற்றம் மால்டோவாவுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது அவரது கவலை. அது நியாயமான கவலையும்கூட. 2020-ல் மால்டோவா அதிபரான மாயா சாந்து, ஊழலுக்கு எதிரானவர். சீர்திருத்தவாதி. ஐரோப்பிய ஆதரவு கட்சிகளின் ஆதரவில் வெற்றி பெற்றவர். அவருக்கு முன்னால் அதிபராக இருந்த இகோர் டோடோன் ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டவர். ஐரோப்பிய நாடுகளுடனான உறவையே பேண மால்டோவா அரசு விரும்பும் சூழலில், இந்தத் தாக்குதல் மூலம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள் ‘மர்ம நபர்கள்’.

அதேசமயம், பிரச்சினைகள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக மாயா சாந்து அறிவித்திருக்கிறார். இத்தனைக்கும் பல்வேறு முரண்பாடுகளுக்கு இடையிலும் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அவர் தொடரவே விரும்பினார். அதன் காரணமாகவே, இந்தப் போரில் நடுநிலை வகிப்பதாக அவர் தெரிவித்திருந்தார். ஆனால், தனது பிராந்தியத்தைப் பயன்படுத்தி ரஷ்யா வேறொரு கணக்கு போடுவதை உணர்ந்திருக்கும் அவர், இந்த முடிவை எடுத்திருக்கிறார். இதனால், மால்டோவாவுக்கு இழப்புதான் அதிகமாக இருக்கும். எப்படிப் பார்த்தாலும், இந்தப் போரால் பாதிக்கப்பட்டிருப்பது உக்ரைன் மட்டுமல்ல என்பது மட்டும் உறுதி!

x