குடிநீர், உணவுக்காக பறிபோன 168 உயிர்கள்: சூடானில் நடந்த கொடூரம்


குடிநீர், உணவுக்காக இருபிரிவினரிடையே ஏற்பட்ட கலவரத்தில் 168 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

வடகிழக்கு ஆப்பிரிக்கா நாடான சூடானில் 2003-ம் ஆண்டு முதல் டார்ஃபூர் மாகாணத்தை மையமாக கொண்டு உள்நாட்டு போர் நிலவி வந்தது. இந்த நிலையில் 2019-ம் ஆண்டு அந்த நாட்டின் அதிபர் ஒமர் அல்-பஷீர் நடத்தி வந்த சர்வாதிகார ஆட்சி மக்கள் போராட்டத்தால் அகற்றப்பட்டது. இதன் புஙன புதிய அரசை அமைப்பதற்கான ஜனநாயக ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ராணுவம் நாட்டைக் கைப்பற்றியது.

இதனால் சூடான் ராணுவத்திற்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்துள்ளது. இதில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சூடானில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் உணவு, குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் உணவு, குடிநீர், கால்நடை, நிலங்கள் ஆகியவற்றைக் கைப்பற்ற அரபு மொழி பேசும் மக்களுக்கும், வேற்று மொழிகளைப் பேசும் சிறுபான்மை பழங்குடிக் குழுக்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

சூடானில் உள்ள மேற்கு டார்ஃபூர் பகுதியில் இருதரப்புக்கும் இடையே நேற்று கடுமையான சண்டை நடைபெற்றது. இதில் ஏராளமான வீடுகளும், கால்நடை பண்ணைகளும் சூறையாடப்பட்டன. இந்த வன்முறையில் இதுவரை 168 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

x