‘இது ஒரு தொடக்கம்தான்... இன்னும் பல நாடுகளை ரஷ்யா தாக்கும்!’


உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கி 59 நாட்களாகின்றன. இந்நிலையில், உக்ரைனுடன் இந்தப் போர் நின்றுவிடாது என்று அந்நாட்டின் அதிபர் ஸெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். தெற்கு உக்ரைனை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர விரும்புவதாக ரஷ்ய ராணுவத் தளபதி பேசியிருப்பதும் ஸெலன்ஸ்கியின் கூற்றை உறுதிசெய்திருக்கிறது.

ரஷ்யா போடும் திட்டம் என்ன?

நேற்று நள்ளிரவில் காணொலி மூலம் உரையாற்றிய ஸெலன்ஸ்கி, “எங்களைப் போலவே, மரணத்தைவிடவும் உயிர்வாழ்வதன் வெற்றியை விரும்பும் எல்லா நாடுகளும் எங்களுடன் இணைந்து போரிட வேண்டும். அவர்கள் எங்களுக்கு உதவ வேண்டும். ஏனெனில், வரிசையில் நாங்கள் முதலில் இருக்கிறோம். அடுத்த இடத்தில் யார்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கிடையே, ரஷ்யாவின் நான்கு ராணுவப் பிரிவுகளில் ஒன்றின் தற்காலிகத் தளபதியான ருஸ்தம் மின்னகயேவ் தெரிவித்திருக்கும் தகவல், புதினின் திட்டம் என்ன என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

ரஷ்ய ராணுவத் தொழில் துறையின் ஸ்வெர்ட்லோவ்ஸ்க் பிரிவின் உறுப்பினர்கள் மத்தியில் பேசிய மின்னகயேவ், உக்ரைனின் தெற்குப் பகுதியைக் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வதன் மூலம் உக்ரைனின் தெற்கு திசையில் உள்ள அண்டை நாடான மால்டோவாவில் உள்ள ட்ரான்ஸ்னிஸ்ட்ரியா பகுதிக்குச் சென்றுவர வாய்ப்பு கிடைக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார். ட்ரான்ஸ்னிஸ்ட்ரியா பகுதி ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டது என்பது கவனிக்கத்தக்கது. துறைமுக நகரான ஒடெஸா மீது தாக்குதல் நடத்துவது அல்லது அந்தப் பகுதி மீது பொருளாதாரத் தடையை ஏற்படுத்துவது எனும் திட்டம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

உக்ரைன் நகரங்களை நிரந்தரமாக ஆக்கிரமித்து வைத்திருக்கப்போவதில்லை என புதின் தெரிவித்திருந்த நிலையில், மின்னகயேவின் இந்த வார்த்தைகள் ரஷ்யாவின் மனதில் இருக்கும் அசல் திட்டம் என்ன என்பதை உணர்த்துகின்றன.

“இந்த நடவடிக்கையின் (போரின்) இரண்டாவது கட்டத்தின் முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்று டோன்பாஸ் மற்றும் தெற்கு உக்ரைனை முழுமையாக நமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவது. இது நிலம் வழியாக க்ரைமியாவுக்குச் சென்றுவர வழிவகுக்கும். உக்ரைன் பொருளாதாரத்தின் முக்கிய அம்சங்கள் மீது கணிசமான பாதிப்பையும் ஏற்படுத்தும். உக்ரைனிலிருந்து பிற நாடுகளுக்கு வேளாண் உற்பத்திப் பொருட்களும், உலோகப் பொருட்களும் அனுப்புவதற்கு உதவும் வகையில் கருங்கடல் பகுதியில் உள்ள துறைமுகங்களையும் நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்” என்றும் ருஸ்தம் மின்னகயேவ் கூறியிருக்கிறார்.

2014-ல் உக்ரைனின் ஒருபகுதியாக இருந்த க்ரைமியாவுக்கு ராணுவத்தை அனுப்பி ஆக்கிரமித்து ரஷ்யாவுடன் அதை இணைத்துக்கொண்டார் புதின். எனினும், ஐநா உட்பட சர்வதேச சமூகம் அந்த இணைப்பை அங்கீகரிக்கவில்லை.

தலைநகர் கீவ் உட்பட வடக்குப் பகுதி நகரங்களைக் கைப்பற்றுவதில் தோல்வியடைந்துவிட்ட ரஷ்யா, தெற்குப் பகுதியில் உள்ள கெர்ஸன், மரியுபோல் நகரங்களை ஆக்கிரமிக்கும் வேலையில் இறங்கியிருக்கிறது. கெர்ஸன் ஏறத்தாழ ரஷ்யாவின் வசம் வந்துவிட்ட நிலையில், மரியுபோலையும் முழுமையான கட்டுப்பாட்டில் எடுப்பதில் ரஷ்யப் படையினர் தீவிரம் காட்டுகின்றனர். இந்தச் சூழலில், உக்ரைனின் முக்கிய நகரங்களை முழுமையாகக் கைப்பற்றி, அதன் மூலம் அண்டை நாடுகள் மீதும் ரஷ்யா போர் தொடுக்க வாய்ப்பு அதிகம் என்றே கருதப்படுகிறது.

x