கூடுதலாக 500 மில்லியன் டாலர்: இலங்கைக்கு வழங்கும் இந்தியா!


கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கைக்கு ஏற்கெனவே 1 பில்லியன் டாலர் கடனுதவி வழங்கியிருக்கும் இந்தியா, எரிபொருள் வாங்கிக்கொள்ள 500 மில்லியன் டாலரையும் வழங்கியிருந்தது. இந்நிலையில், இன்னமும் நெருக்கடியிலிருந்து மீண்டுவராத இலங்கைக்கு, கூடுதலாக 500 மில்லியன் டாலர் வழங்குகிறது இந்தியா. இந்தத் தகவலை இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் தெரிவித்திருக்கிறார்.

தலைநகர் கொழும்புவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “450 மில்லியன் டாலர் கடன் தொகையை இலங்கை திருப்பிச் செலுத்துவதைத் தள்ளிவைக்க வங்கதேசமும் சம்மதம் தெரிவித்திருக்கிறது” என்று கூறினார். “பன்னாட்டு நாணய நிதியத்திடமிருந்து (ஐஎம்எஃப்) உதவிகள் வந்துசேர ஆறு மாதங்கள் ஆகும். தவணை முறையில்தான் அது கிடைக்கும். இடைப்பட்ட காலத்தில், எங்கள் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க நிதியைத் திரட்ட வேண்டியிருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, பன்னாட்டு நாணய நிதியத்திடம் இலங்கை உதவி கோரியிருக்கிறது. இதுகுறித்து பன்னாட்டு நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடந்த இலங்கை நிதியமைச்சர் அலி சப்ரி, அமெரிக்கா சென்றிருக்கிறார். தலைநகர் வாஷிங்டனில் பன்னாட்டு நாணய நிதியத்தின் மேலாண்மை இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜிவாவைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அமெரிக்கா சென்றிருக்கும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் அவர் சந்தித்துப் பேசியிருக்கிறார். அண்டை நாடு மற்றும் நட்பு நாடு எனும் வகையில், சாத்தியமுள்ள எல்லா வகையிலும் இலங்கைக்கு இந்தியா உதவிகளை வழங்கும் என நிர்மலா சீதாராமன் அவரிடம் உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.

x