கல்வியில் கரைசேருமா பாகிஸ்தான்?


பாகிஸ்தானில் இப்போது ஷெபாஸ் ஷெரீஃப் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்றிருக்கிறது. முன்னுரிமை தரப்பட வேண்டிய பிரச்சினைகள் பல இருந்தாலும் கல்வியில் முதலில் கவனம் செலுத்துமாறு ஃபைசல் பாரி, ‘டான்’ நாளிதழில் சிறப்புக் கட்டுரை மூலம் கேட்டிருக்கிறார். இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. பாகிஸ்தானின் பல பிரச்சினைகளுக்கு மூல காரணம் அது கல்வியில் பின்தங்கியிருப்பதுதான் என்பது அந்நாட்டு மக்களின் ஒருமித்த கருத்து. அது மட்டுமல்லாமல் 2013-18 காலத்தில் பஞ்சாப் முதலமைச்சராகப் பதவி வகித்தபோது கல்வி வளர்ச்சியில் ஷெபாஸ் ஷெரீஃப் சிறப்புக் கவனம் செலுத்தினார். அதற்குப் பலன் கிடைத்தது. அவர் இப்போது நாட்டின் பிரதமராகவும் பதவி வகிப்பதால் நாடு முழுக்க வளர்ச்சியேற்பட இந்தக் கோரிக்கையை முன் வைத்திருக்கிறார் ஃபைசல் பாரி.

கல்வி நிலை என்ன?

பாகிஸ்தானிலும் இந்தியாவைப் போலத்தான் கல்வியை மத்திய அரசு, மாநில அரசுகள், தனியார் துறையினர் அளிக்கின்றனர். பெரும்பாலான மாணவர்கள் அரசு பள்ளிக்கூடங்களில் பயில்கின்றனர். ஏழைக் குழந்தைகள் பெரும்பாலும் மதறஸாக்கள் என்று அழைக்கப்படும் மதக் கல்வி பள்ளிக்கூடங்களிலேயே படிக்கிறார்கள். இவற்றின் எண்ணிக்கை 10,000 முதல் 40,000 வரையில் இருக்கும். இவற்றில் பெரும்பாலானவை பதிவு செய்யப்படாதவை. எனவே அரசின் தரவுகளில் இடம்பெறுவதில்லை. இங்கே உருது, அரபி, பாரசீகம் ஆகிய மொழிகள் கற்றுத்தரப்படுவதுடன் மதம் தொடர்பான பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. சமீப காலமாக கணிதம், அறிவியல் உள்ளிட்ட பிற பாடங்களும் வாழ்க்கைத் தேவைகளுக்காகக் கற்றுத்தரப்படுகின்றன.

பாகிஸ்தானின் நகர்ப்புறங்களில் மட்டுமே இருபாலரும் சேர்ந்து பயிலும் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. பெண்கள் பெரும்பாலும் மகளிருக்கென்றே உள்ள தனிப் பள்ளிகளில்தான் சேர்க்கப்படுகின்றனர். 2017-ல் திரட்டப்பட்ட தகவல்கள்படி நாட்டில் எழுத்தறிவு உள்ளவர்கள் 59.13 சதவீதம். ஆடவர் 71.12 சதவீதம், மகளிர் 46.47 சதவீதம். மொத்த மக்கள்தொகையில் 32.33 சதவீதம் பேர்தான் பள்ளியில் சேர்ந்துள்ளனர். அவர்களில் தொடக்கப் பள்ளிகளில் 67.57 சதவீதம், நடுநிலைப் பள்ளிகளில் 43.82 சதவீதம், மேல்நிலைப் பள்ளிகளில் 14.85 சதவீதம் பயில்கின்றனர். முறைசார்ந்த கல்வி தவிர முறை சாராத கல்வியும் இருக்கிறது. வீட்டிலிருந்தபடியே படித்து, பொதுத் தேர்வு எழுதும் வழக்கமும் அதிகம்.

கல்வியை மத்திய அரசு ஒட்டுமொத்தமாக மேற்பார்வை செய்கிறது. மாநிலங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பாடத்திட்டத்தைத் தயார் செய்வது, பள்ளிக்கூடங்களுக்கும் படிப்புகளுக்கும் அங்கீகாரம் வழங்குவது, உயர் கல்வியில் ஆராய்ச்சி – வளர்ச்சி ஆகியவற்றை மத்திய அரசு கவனித்துக்கொள்கிறது. ஐந்து வயது முதல் 16 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை அரசு கட்டாயம் வழங்க வேண்டும் என்று அரசியல் சட்டம் கூறுகிறது.

பள்ளிக்கூடங்கள் ஆறு நிலைகளில் வகுப்புகளைப் பிரித்து நடக்கின்றன. மூன்று வயது முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகள் மழலையர் பள்ளிகளில் படிக்கின்றனர். முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தொடக்கக் கல்விச் சாலைகளில் பயில்கின்றனர். எட்டாம் வகுப்பு வரை நடுநிலைப் பள்ளிகளாக கருதப்படுகின்றன. ஒன்பது பத்து வகுப்பு வரை படித்தால் மெட்ரிக் தேர்வு எழுதலாம். அதற்குப் பிறகு இரண்டாண்டுகள் மேல்நிலை வகுப்புகளாகும். இவை கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள மாதிரியேதான். பல்கலைக் கழகங்களும் கல்லூரிகளும் உயர் கல்வி ஆணையத்தின் ஆளுகையின் கீழ் வருகின்றன. 2002-ல் இது ஏற்படுத்தப்பட்டது.

ஒரே சீரான எழுத்தறிவு இல்லை

பாகிஸ்தான் முழுவதும் எழுத்தறிவு ஒரே சீராக இல்லை. இஸ்லாமாபாதில் 82 சதவீதமாகவும் தோர்கட் மாவட்டத்தில் அதுவே 23 சதவீதமாகவும் வித்தியாசப்படுகிறது. பழங்குடிகள் வாழும் பகுதிகளில் மகளிர் எழுத்தறிவு 9.5 சதவீதம் மட்டுமே. ஆசாத் காஷ்மீர் என்று பாகிஸ்தானியர்களால் அழைக்கப்படும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எழுத்தறிவு 74 சதவீதம். அங்கு லடாக்கின் பகுதி இருப்பதால் பவுத்தர்களும் பயில்கின்றனர். பாகிஸ்தானில் ஆண்டுதோறும் 4,45,000 பட்டதாரிகள் படித்து வெளியேறுகின்றனர். கணினி அறிவியல் பிரிவில் 25,000 முதல் 30,000 பேர் வரை பயில்கின்றனர். உலகிலேயே பள்ளிக்கூடம் செல்லாத சிறார்கள் அதிகம் வாழும் நாடுகளில் முதலிடத்தில் நைஜீரியாவும் இரண்டாம் இடத்தில் பாகிஸ்தானும் இருக்கின்றன. பாகிஸ்தானில் கிட்டத்தட்ட 2 கோடியே இருபது லட்சம் சிறார்கள் பள்ளிக்கூடமே செல்வதில்லை.

பாகிஸ்தானில் உள்ள மொத்தக் குழந்தைகளில் 67.5 சதவீதம் குழந்தைகள்தான் தொடக்கப் பள்ளிகளில் பயில்கின்றனர். இசை, நாடகம், உடல்பயிற்சிக் கல்வி ஆகிய பிரிவுகளும் இருக்கின்றன. இந்தியாவில் முன்னர் பெண்களுக்கு மனையறிவியல் (ஹோம் சயின்ஸ்) என்றொரு பாடப்பிரிவு இருந்தது. அதைப்போல பாகிஸ்தானில் மகளிருக்கு ஹோம் எகனாமிக்ஸ் என்றொரு பாடப்பிரிவு ஒதுக்கப்பட்டிருக்கிறது. பொது அறிவியல் புத்தகங்களில் வானவியல் (அஸ்ட்ராநமி), சுற்றுச்சூழல் நிர்வாகம், உளவியல் ஆகிய பாடங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானியர்கள் வானவியலிலும் இந்தியர்களைப் போலவே ஆர்வமுள்ளவர்கள். தொல்லியல், மானுடவியல் பாடங்களிலும் தேர்ச்சி உள்ளவர்கள். அந்தந்த மாகாணங்களில் பஞ்சாபி, சிந்தி, பஷ்டூ மொழிகள் கற்றுத்தரப்படுகின்றன. ஆங்கிலமும் உருதும் முக்கிய மொழிகள். பள்ளிக்கூடங்களில் உருது வழியிலும் ஆங்கில வழியிலும் பாடம் கற்றுத்தரப்படுகிறது. பணக்கார வீட்டுப் பிள்ளைகள், அதிகாரிகளின் பிள்ளைகள் ஆங்கில வழியில் படிக்கிறார்கள். கிறிஸ்தவ கான்வென்டுகளும் உண்டு. கல்லூரிகளில் ஜெர்மன், துருக்கி, அரபி, பாரசீகம், பிரெஞ்சு, சீனம் ஆகிய மொழிகளையும் படிக்கின்றனர்.

தொடக்கப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை உலக அளவில் 90 சதவீதம் என்பது சராசரியாக இருக்கும்போது பாகிஸ்தானில் அது 66 சதவீதமாகவே இருக்கிறது. பாகிஸ்தானின் மொத்த தேசிய செலவில் 2.2 சதவீதம் மட்டுமே கல்விக்கு ஒதுக்கப்படுகிறது. 1984-85-ல் அது வெறும் 2 சதவீதமாக இருந்தது. இப்போது சற்றே அதிகரித்திருக்கிறது. இதை 7 சதவீதம் வரை உயர்த்த வேண்டும் என்று பலரும் அரசுக்கு கூறி வருகின்றனர். இந்த ஒதுக்கீட்டிலும் 88 சட் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர் நிலைப் பள்ளிகளுக்கே செலவாகிறது. 12 சதவீதம் மட்டுமே உயர் கல்விக்குக் கிடைக்கிறது. இதனால் கல்வியின் தரமும் சுமாராகவே இருக்கிறது.

இவை போக தொழில்நுட்பக் கல்வி, வொக்கேஷனல் எஜுகேஷன் (தொழில் பயிற்சிக் கல்வி) ஆகியவையும் கற்றுத்தரப்படுகின்றன. இவை ஐந்தாவது வகுப்பு முதல் பத்தாவது வகுப்பு வரை கற்றுத்தரப்படுகின்றன. இவை போக நம்முடைய பாலிடெக்னிக்குகளுக்கு இணையான தனிப் பயிற்சி தொழில் கல்வி நிறுவனங்களும் உள்ளன. இவற்றில் சான்றிதழ் வகுப்புகள், பட்ட வகுப்புகள் என்று இரு பிரிவுகள். பாடத் தேர்வுகளும் தேர்வு முறைகளும் பிரிட்டிஷ் கல்வி முறையைப் பின்பற்றியே தொடர்கின்றன.

பட்டதாரிகள் குறைவு

2009 தரவுப்படி பாகிஸ்தான் மக்கள்தொகையில் 6 சதவீதம் பேர் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவர்கள். அதில் ஆடவர்கள் 9 சதவீதம், மகளிர் 3.5 சதவீதம். பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், பல் மருத்துவம், கட்டிடக்கலை, மருந்தாளுநர் பாடம், செவிலியர் பயிற்சி ஆகியவற்றைக் கல்லூரிகளில் படிக்கின்றனர். இந்தக் கல்லூரிகளின் தரத்தைச் சோதித்து சான்று வழங்கும் அமைப்புகளும் அரசில் உள்ளன.

பாகிஸ்தானில் மத போதனைகளுக்கும் மதப் பழக்க வழக்கங்களுக்கும் தரப்படும் முக்கியத்துவம் காரணமாக பிறவகைக் கல்விகளில் பின்தங்கியுள்ளனர். பெண்களை அதிகம் படிக்க வைக்கக் கூடாது என்ற மனோபாவம் குடும்பங்களில் நிலவுகிறது. இப்போதுதான் அதில் மாற்றம் ஏற்படுகிறது. பருவம் எய்துவதற்கு முன்னால் திருமணம் செய்து தந்துவிட வேண்டும் என்பதில் கவனமாக இருக்கின்றனர். இதற்குப் பொருளாதார நிலையும் முக்கியக் காரணம். பாகிஸ்தானிய மக்களுடைய வருவாய் ஆதாரங்களுடன் ஒப்பிடுகையில் அவர்களுக்கு உயர் கல்வி, அதுவும் பல்கலைக்கழக கல்வி அதிக செலவு பிடிக்கும் விஷயமாக இருக்கிறது. எனவே உயர் கல்வியில் பணக்காரர்கள் அதிகாரிகள் குழுந்தைகள்தான் அதிகம் சேர்கின்றனர்.

ஆசிரியர்களுக்கான பயிற்சிகளும் தரமில்லாமலும் முறையான கண்காணிப்பு இல்லாமலும் இருக்கின்றன. எனவே அரசு பள்ளிக்கூடங்களில் கற்கும் திறனும் கற்பிக்கும் திறனும் குறைவாகவே தொடர்கின்றன.

வேலைக்கு வராத பெண் மருத்துவர்கள்

இதைவிட முக்கியமான அம்சம் பாகிஸ்தானில் மருத்துவம் படிக்கும் பெண்களில் மிகக் குறைவானவர்களே அந்தத் தொழிலில் - அதிலும் குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் - சேர்கின்றனர். மகப்பேறு விடுமுறை, பச்சிளம் குழந்தைக்கு பாலூட்ட தனியிடம், ஓய்வறை, பணியிடத்தில் பாதுகாப்பு போன்ற சின்னஞ்சிறு வசதிகள்கூட இல்லாததால் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய பெண் மருத்துவர்கள் முன்வருவதில்லை.

அறிவியல் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் டார்வினின் மானுடவியல் கோட்பாடு போன்ற பாடங்களை நடத்தும்போது, இஸ்லாமிய சிந்தனைகளுக்கு அவை முரணாக இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர். குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்பது நகைப்புக்குரிய கோட்பாடு என்று கண்டிக்கின்றனர். இப்படி அறிவியல் பாடங்களை நடத்தும்போது சமய நெறிகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் அவை முரண்படும்போதெல்லாம் ஆசிரியர்கள் மதக் கருத்துகளுக்கே முக்கியத்துவம் தந்து சொல்லிக் கொடுக்கின்றனர்.

பணியிட திருப்தி விஷயத்தில், அதிக ஊதியம் வாங்கும் ஆசிரியர்கள் மட்டும் ‘ஓரளவுக்குத் திருப்தி’ என்கின்றனர். பாகிஸ்தானில் பெரும்பாலான கிராமங்கள் நகரங்களிலிருந்து வெகு தொலைவில் இருப்பதாலும் போக்குவரத்து வசதிகள் போதாமையாலும் வருவாய் போதவில்லை என்பதாலும் கல்வி பெறும் வாய்ப்பைப் பெண்கள் அதிகம் இழக்கின்றனர். மிகக் குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள ஊர்களிலும் பள்ளிக்கூடங்களைத் திறக்கும் முனைப்பு அரசிடம் முழுமையாக இல்லை. ஊதியம் மிகக் குறைவாக இருப்பதால் பெரும்பாலான ஆசிரியர்கள் பாதி நாட்களுக்கு பள்ளிக்கூடத்துக்கே வருவதில்லை.

கோரிக்கையின் அவசியம்

பாகிஸ்தானின் புதிய இடைக்கால அரசு அதிகபட்சம் ஓராண்டு பதவியில் இருக்குமா என்பதே சந்தேகம்தான். அத்துடன் பொருளாதார நிலைமை மோசமாகி வருகிறது. ஆப்கன் பிரச்சினை, உக்ரைன் விவகாரம் ஆகியவை நாட்டை நேரடியாகவே பாதித்து வருகின்றன. சீனாவுடனான நெருக்கமான உறவால் அமெரிக்காவின் நட்பை இழக்கும் வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது. இப்படி புதிய அரசு கவனிக்க வேண்டியவை பல இருக்கும்போது, கல்விக்காக ஒருவர் கோரிக்கை வைத்திருப்பது வியப்பாக இருக்கலாம். ஆனால் பாகிஸ்தானின் கல்வி நிலையைப் பார்க்கும்போது, கவனித்தே ஆக வேண்டிய முக்கியமான விஷயம் அது என்று புரியும்.

x