பதவியிழந்த இம்ரான்: பாகிஸ்தான் புதிய பிரதமர் நாளை தேர்ந்தெடுக்கப்படுவாரா?


பாகிஸ்தானின் நாடாளுமன்றமான தேசிய அவையில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது.

இன்று அதிகாலை வரை நாடாளுமன்றம் செயல்பட்ட நிலையில். நாளை (ஏப்.11) மதியம் 2 மணிக்கு மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது. அப்போது புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான மனு இன்று மதியம் 2 மணிக்குத் தாக்கல் செய்யப்படும். 3 மணி அளவில் அது குறித்த ஆய்வு நிறைவுபெற்றுவிடும்.

இம்ரான் கான் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த பின்னர், பல்வேறு அரசியல் நிகழ்வுகள் பாகிஸ்தானை அதிரவைத்தன. இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடந்தது. பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-என் கட்சி உறுப்பினரான அயாஸ் சாதிக், சபாநாயகராகப் பொறுப்பேற்று இந்தக் கூட்டத்துக்குத் தலைமையேற்றிருந்தார்.

முன்னதாக, இந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகிக்க முடியாது என பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியை (பிடிஐ) சேர்ந்த ஆஸாத் கைஸர் பதவிவிலகினார். அயாஸ் சாதிக்கின் பெயரையும் அவரே பரிந்துரைத்தார்.

நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக, பல்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வாக்களித்தன. 342 பேர் கொண்ட தேசிய அவையில், 174 பேர் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து இம்ரான் கானின் ஆட்சி கவிழ்ந்தது.

முன்னதாக, வாக்கெடுப்பு நடத்துவதில் ஏகப்பட்ட குழப்பங்கள் நீடித்தன. நேற்று காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடியது. எனினும், பல்வேறு குழப்பங்கள் நிகழ்ந்ததால் மூன்று முறை அவை ஒத்திவைக்கப்பட்டது. பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியைச் சேர்ந்த எம்.பி-க்கள் வெளிநடப்பு செய்த நிலையில், எதிர்க்கட்சிகளின் பக்கம் சாய்ந்திருந்த அக்கட்சி உறுப்பினர்கள் அவையிலேயே இருந்தனர். இரவு 11.45 மணிக்கு ஆஸாத் கைஸர் பதவி விலகுவதாக அறிவித்து, அயாஸ் சாதிக் பதவியேற்ற பின்னர்தான் வாக்கெடுப்பு தொடங்கியது.

பாகிஸ்தான் வரலாற்றில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் ஆட்சியை இழந்த முதல் பிரதமர் இம்ரான் கான் தான். இதுவரை எந்தப் பிரதமரும் 5 ஆண்டுகாலப் பதவிக்காலத்தை முழுமையாக நிறைவுசெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை காலை 11 மணிக்கே நாடாளுமன்றம் கூடி புதிய பிரதமரைத் தேர்வு செய்யும் என அயாஸ் சாதிக் கூறியிருந்த நிலையில், மதியம் 2 மணிக்குத்தான் கூட்டம் தொடங்கும் என தேசிய அவையின் ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

எதிர்பார்க்கப்பட்டது போலவே, எதிர்க்கட்சிகளின் சார்பில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-என் கட்சியைச் சேர்ந்த ஷெபாஸ் ஷெரீஃப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது உறுதியாகிவிட்டது. இவர் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் தம்பி என்பது கவனிக்கத்தக்கது.

x