ரஷ்ய அதிபரின் மகள் அமெரிக்காவிடம் அடைக்கலம் கோரிய கதை!


உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கும் ரஷ்யா மீது அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளும், ஐநா, ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ போன்ற அமைப்புகளும் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துவருகின்றன. பொருளாதாரத் தடைகள் ஒரு நாட்டின் அரசின் மீது மட்டுமல்லாமல், அரசில் அங்கம் வகிப்பவர்கள், அரசுடன் நெருக்கமான தனிநபர்கள், தொழிலதிபர்கள், ஆட்சியாளரின் குடும்பத்தினர், உறவினர்கள் எனப் பலர் மீதும் விதிக்கப்படும். அந்த வகையில், புதின் மகள்களான காத்ரீனா திக்கோனோவா, மரியா வோரோன்ட்ஸோவா ஆகியோர் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவின் மனைவி மற்றும் மகள் மீதும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. புதினின் மகள்கள் இருவரும் தங்கள் தந்தையின் அரசுக்குப் பல்வேறு வகையில் உதவி வருகிறார்கள்.

சோவியத் ஒன்றியத்தின் அதிபராக இருந்த ஜோசப் ஸ்டாலினின் ஒரே மகள் (இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவர்) பனிப்போர் காலத்தில் அமெரிக்காவிடமே அரசியல் அடைக்கலம் கோரிய நிகழ்வை ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் இணையதளத்தில் எழுதிய கட்டுரையில் பத்திரிகையாளர் நிஸ்டுலா ஹெப்பர் பதிவுசெய்திருக்கிறார். ஸ்டாலினின் மகள் ஸ்வெட்லானா ஆலில்யுயேவாவை அமெரிக்க அதிகாரிகள் எதிர்கொண்ட விதம் குறித்து அந்தக் கட்டுரையில் சுட்டிக்காட்டியிருக்கிறார் ஹெப்பர். இதில் இந்தியத் தொடர்பும் இருப்பது இன்னொரு சுவாரசியம்.

ஸ்வெட்லானாவின் வாழ்க்கை சரிதமாக ரோஸ்மேரி சலிவான் எழுதிய ’ஸ்டாலின்ஸ் டாட்டர்- தி எக்ஸ்ட்ராஆர்டினரி அண்ட் டுமல்டுவஸ் லைஃப் ஆஃப் ஸ்வெட்லானா ஆலில்யுயேவா’ எனும் புத்தகத்திலிருந்து ஒரு முக்கியமான தகவலை ஹெப்பர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஸ்டாலினுக்கும் ஸ்வெட்லானாவுக்கும் இடையிலான உறவு பல்வேறு சிடுக்குகளும் முரண்களும் நிறைந்தது. ஸ்டாலின் தனது ரத்த சொந்தங்கள் பலரைக் கொல்ல உத்தரவிட்டவர் என்றே வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. ஸ்டாலினின் மறைவுக்குப் பின்னர், சோவியத் அரசின் சொத்தாகத் தான் பாவிக்கப்படுவதாக அதிருப்தியில் இருந்தார் ஸ்வெட்லானா. ஸ்டாலினின் மகள் எனும் பிம்பம் ஒரு பெரும் சுமையாக அவரை அழுத்திக்கொண்டிருந்தது.

அந்தக் காலகட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராக இருந்த பிரஜேஷ் சிங் மீது காதல்வயப்பட்டார் ஸ்வெட்லானா. உத்தர பிரதேசத்தின் அலகாபாத் (தற்போது பிரயாக்ராஜ்) அருகே காலாகாங்கர் எனும் அரச குடும்பத்தைச் சேர்ந்த பிரஜேஷ், மத்திய அமைச்சராக இருந்த தினேஷ் சிங்கின் உறவினர். அவரைத் திருமணம் செய்துகொள்ள சோவியத் அதிகாரிகள் ஒப்புக்கொள்ளவில்லை. எனினும் இருவரும் சேர்ந்தே வாழ்ந்தனர். 1966-ல் மாஸ்கோவில் உடல்நலம் குன்றி பிரஜேஷ் காலமானார். அவரது அஸ்தியை கங்கையில் கரைக்க இந்தியா தயக்கத்துடன் ஸ்வெட்லானாவுக்கு அனுமதி வழங்கியது.

ஸ்வெட்லானா இந்தியாவில் இருந்த காலகட்டத்தில், 1967 மார்ச் 6-ல் நடந்த ஒரு சம்பவத்தை ஹெப்பர் சுட்டிக்காட்டியிருக்கிறார். அன்றைய தினம் டெல்லியில் உள்ள ரஷ்யத் தூதரகத்தில் மதுபான விருந்து நடந்துகொண்டிருந்தது. அப்போது அவர் அமெரிக்கத் தூதரகத்துக்குச் சென்றிருந்தார். அமெரிக்காவில் அடைக்கலம் கோருவது அவரது எண்ணம். ஸ்டாலினின் மகள் தங்கள் தூதரக அலுவலகத்துக்கு வந்திருப்பதை அறிந்து அமெரிக்க அதிகாரிகள் திகைப்படைந்தனர். ‘நீங்கள் ஸ்டாலினின் மகள் என்றா சொல்கிறீர்கள்?’ எனப் பல முறை அவர்கள் கேட்டனர். பின்னர் பல முறை அவரது ஆவணங்களைச் சரிபார்த்தனர். சோவியத் ஒன்றியத்தின் மிகப் பெரிய தலைவரான ஸ்டாலினின் மகள் அமெரிக்காவிடம் அரசியல் அடைக்கலம் கோரியது பெரும் பேசுபொருளானது.

இதற்கிடையே, ஸ்வெட்லானா டெல்லியில் இருந்தபடி அமெரிக்காவிடம் அரசியல் அடைக்கலம் கோரியது ரஷ்யாவின் உறவில் முரண்களை ஏற்படுத்தலாம் என இந்தியா தயங்கியது. இதையடுத்து, அவர் ரோமுக்கு அனுப்பப்பட்டார். பின்னர் அங்கிருந்து ஸ்விட்சர்லாந்து சென்றவர், அங்கு சில மாதங்கள் தங்கியிருந்தார். அதன் பின்னர் அவர் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டார். தன் முதல் திருமணத்தில் பிறந்த பிள்ளைகளை ரஷ்யாவில் விட்டுவிட்டுத்தான் இந்தியாவுக்கு வந்திருந்தார் ஸ்வெட்லானா. பின்னர் அமெரிக்காவில் வசித்தபோது வில்லியம் வெஸ்லி பீட்டர்ஸ் எனும் அமெரிக்கரைத் திருமணம் செய்துகொண்டார். அந்தத் தம்பதியின் மகளான, அதாவது ஸ்டாலினின் பேத்தியான ஓல்கா தற்போதும் அமெரிக்காவில் வசித்துவருகிறார்.

உலக வரலாறுதான் எத்தனை விநோதங்கள் நிரம்பியது!

x