உக்ரைன் யுத்தமும் அகதிகளும்


உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பு யுத்தத்தின் காரணமாக உலகில் எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு எனப் பலவிதமான நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. அவற்றுள் முதன்மையானது அகதிகள் பெருக்கம் ஆகும். 40 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அந்த நாட்டிலிருந்து வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

“யுத்தம் ஆரம்பித்த முதல் ஐந்து வாரங்களில், உக்ரைனில் இருந்து நான்கு மில்லியனுக்கும் அதிகமான அகதிகள் எல்லைகளைத் தாண்டி அண்டை நாடுகளுக்குச் சென்றனர், மேலும் பலர் உக்ரைனின் உள்பகுதிகளுக்குப் புலம்பெயர்ந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்களுக்கு பாதுகாப்பும் ஆதரவும் தேவை” என ஐநா மனித உரிமைகள் அமைப்பு கூறியுள்ளது.

உக்ரைனிலிருந்து வெளியேறியவர்கள் போலந்து நாட்டில்தான் அதிக அளவில் தஞ்சமடைந்துள்ளனர். சுமார் 25 லட்சம் பேர் அங்கே அகதிகளாகச் சென்றுள்ளனர். ரொமேனியா ( 6.5 லட்சம் ) மால்டோவா ( 4 லட்சம்) ஹங்கேரி ( 4 லட்சம்) ரஷ்யா ( 3.5 லட்சம்) ஸ்லோவேக்கியா ( 3 லட்சம்) என ஏப்ரல் 4 -ம் தேதி வரை 42 ,44, 595 உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ளனர் என யுஎன்எச்ஆர்சி தெரிவித்துள்ளது.

ரவிக்குமார்

‘ஐரோப்பிய நாடுகளில் அண்மைக்காலமாக வலதுசாரி மனோபாவம் அதிகரிப்பதற்கு அகதிகள் பிரச்சினையே முதன்மையான காரணம்’ என சில ஆண்டுகளுக்கு முன்னர் (2015) நியூ யார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

‘அரபு நாடுகளிலும், ஆப்ரிக்க நாடுகளிலும் பெருகிவரும் உள்நாட்டுப் போர்களின் காரணமாக தஞ்சம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்குள் வரும் மக்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது. கடந்த 2014 -ம் ஆண்டில் மட்டும் சுமார் இரண்டு லட்சம் அகதிகள் ஐரோப்பிய நாடுகளுக்குள் வந்துள்ளனர்.

அகதிகளோடு பயங்கரவாத இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் ஊடுருவக்கூடும் என்ற அச்சம் ஐரோப்பிய ஆட்சியாளர்களிடம் ஏற்பட்டுள்ளது. எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பை அதிகரித்தல், வேலி அமைத்தல் எனப் பல்வேறு நடவடிக்கைகளை அவர்கள் எடுத்துவருகின்றனர். இதற்கான செலவுகள் மட்டுமின்றி அகதிகளைப் பராமரிப்பதற்கு ஆகும் செலவையும் சமாளிப்பது பல்கேரியா போன்ற ஏழை நாடுகளுக்கு பெரும் சவலாக இருக்கிறது.

பொருளாதார மந்த நிலையின் தாக்கத்திலிருந்து முற்றாக இன்னும் விடுபடாத ஐரோப்பிய நாடுகளின் ஆட்சியாளர்கள் அகதிகளைப் பொருளாதார சுமையாகக் கருதுகின்றனர். சார்லி எப்தோ தாக்குதல் போன்ற சம்பவங்கள் அகதிகள் ஒரு அரசியல் சுமையாக மாறிவருவதைக் காட்டுகின்றன. இதனால் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த மக்களில் பலர் அகதிகளை அச்சத்தோடும் வெறுப்போடும் பார்க்கத் துவங்கியுள்ளனர்’ என நியூ யார்க் டைம்ஸ் கூறியிருந்தது.

மேலோட்டமாகப் பார்த்தால் இது நியாயமான கவலைதானே எனத் தோன்றும். ஆனால், உலகில் அகதிகளின் பெருக்கத்துக்குப் பெருமளவில் காரணமாக இருப்பவை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும்தாம் என்ற உண்மையின் பின்புலத்தில் வைத்துப் பார்த்தால் இந்த செய்தி பாதிக்கப்பட்டவர்களையே பழிக்கும் தன்மைகொண்டதாக இருப்பது புரியும்.

உக்ரைனில் ரஷ்யா நடத்தும் ஆக்கிரமிப்பு யுத்தத்துக்கு முழுமுதல் காரணம் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும்தான். நேட்டோ என்ற ராணுவக் கூட்டமைப்பின் மூலம் உலகில் போட்டியே இல்லாத வல்லாதிக்க சக்தியாக அமெரிக்கா இருக்க விரும்புகிறது. அமெரிக்காவும் அதற்கு ஒத்து ஊதும் ஐரோப்பிய நாடுகளும் தோற்றுவித்த நச்சு வளையத்துக்குள் இன்று அவர்களே மாட்டிக்கொண்டு நசுங்குகிறார்கள்.

தமது சொந்த மண்ணையும் மக்களையும் இழந்து ஏதிலிகளாக அலைப்புறும் மக்கள் அமைதியாக வாழவே விரும்புகிறார்கள். அவர்கள் எல்லோரும் பயங்கரவாதத்தைக் கைக்கொள்ள ஆரம்பித்தால் அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஒரு நொடிகூட நிம்மதியாக இருக்க முடியாது.

வலதுசாரி மனோபாவம் அதிகரிப்பதற்கு அகதிகள் காரணம் அல்ல, அகதிகளை உருவாக்கும் ஐரோப்பிய அமெரிக்க ஆட்சியாளர்களே காரணம். தமது ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளை விமர்சிக்கும் திராணியற்றவர்களும் மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப நினைப்பவர்களும்தாம் அகதிகளைக் குற்றம் சாட்டுகின்றனர்.

ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்ல இந்தியாவும்கூட அகதிகளை வெறுப்போடே அணுகுகிறது. சர்வதேச அளவில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கென கொண்டுவரப்பட்ட ஐ.நா தீர்மானங்களில் இந்தியா கையெழுத்திடவில்லை. போர்க்குற்ற விசாரணை குறித்து நாம் பேசுகிறோம். அந்த விசாரணையை நடத்தவேண்டிய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அமைக்கப்பட்டதை இன்னும் இந்தியா ஏற்கவில்லை. அதற்கு அடிப்படையாக அமைந்த ரோம் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை. அதுமட்டுமின்றி சித்திரவதைக்கு எதிரான ஒப்பந்தத்திலும், அகதிகள் குறித்த ஐநா ஒப்பந்தங்களிலும் இந்தியா கையெழுத்திடவில்லை. அந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திடச் சொல்லி நாம் வலியுறுத்த வேண்டும். அகதிகளுக்கான சட்டம் ஒன்றை உருவாக்காத நாடு இந்தியா. அதற்கும் நாம் அழுத்தம் தரவேண்டும்.
சொந்த நாட்டு மக்களையே அகதிகள் போல நடத்தும் இன்றைய ஆட்சியாளர்கள் அகதிகளைப்பற்றிக் கவலைப்படுவார்களா என்ன?

x