பதவியேற்ற ஒரே நாளில் நிதியமைச்சர் அலி சப்ரி ராஜினாமா: இலங்கையில் என்ன நடக்கிறது?


கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையில், புதிய நிதியமைச்சராகப் பொறுப்பேற அலி சப்ரி ஒரே நாளில் ராஜினாமா செய்திருக்கிறார்.

உணவு, எரிபொருள், மின்சாரம் என அடிப்படைத் தேவைகள் அனைத்திலும் கடும் தட்டுப்பாட்டையும் விலை உயர்வையும் எதிர்கொண்டிருக்கும் இலங்கை மக்கள், அரசுக்கு எதிராகக் கடும் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில், இலங்கை அமைச்சரவையில் இருந்த 26 அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர். இதையடுத்து அமைச்சரவையில் அங்கம் வகிக்க அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பு விடுத்திருந்தார் அதிபர் கோத்தபய ராஜபக்ச.

நிதியமைச்சராக இருந்த பசில் ராஜபக்ச பதவிவிலகிவிட்ட நிலையில் அந்தப் பதவியில் அலி சப்ரி நேற்று நியமிக்கப்பட்டார். அவருடன் மேலும் 3 அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர். பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான பணிகளை மேற்கொள்ள அலி சப்ரி உள்ளிட்ட நால்வருக்கு உத்தரவிட்டிருந்தார் கோத்தபய. இந்நிலையில், இன்று அலி சப்ரி பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

முந்தைய அமைச்சரவையில் நீதித் துறை அமைச்சராக இருந்தவர் அலி சப்ரி. ஒட்டுமொத்தமாகப் பதவி விலகிய 26 அமைச்சர்களில் அவரும் ஒருவர். எனினும், அவரை மீண்டும் அமைச்சராக்கி நிதித் துறையை வழங்கினார் கோத்தபய. நீதித் துறையிலிருந்து நிதித் துறைக்கு வந்த அலி சப்ரி, ஒரே நாளில் ராஜினாமா செய்துவிட்டார்.

நெருக்கடி முற்றுவதால் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் கோத்தபய.

x